'ஜெயலலிதாவின் புகழைக் குலைப்பதற்கான சதி இது': அமைச்சர் ஜெயக்குமார்
நாளை (வியாழக்கிழமை) ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ இன்று வெளியிடப்பட்டதற்கு ஆளும் அ.தி.மு.க. தரப்பு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

பட மூலாதாரம், RUN SANKAR/AFP/GETTY IMAGES
இந்த வீடியோவை வெளியிட்டதன் மூலம் ஜெயலலிதாவின் புகழுக்கு பெரும் களங்கம் விளைவிக்கப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.
வெற்றிவேல் வெளியிட்ட ஜெயலலிதாவின் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், "இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரமில்லை. சென்னை ராதாகிருஷ்ணன் நகருக்கு தேர்தல் நாளை நடக்கவிருக்கும் நிலையில், உள்நோக்கத்தோடு இன்று இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஒரு விசாரணை ஆணையத்தை அரசு அமைத்துவிட்ட பிறகு, அந்த ஆணையத்தில்தான் எந்தத் தகவலையும் தெரிந்த விஷயங்களையும் சொல்வதுதான் மரபு. அப்படிச் செய்யாமல் ஊடகங்களிடம் வெளியிட்டிருக்கிறார்.
முதலமைச்சர் ஜெயலலிதா இஸட் பிளஸ் பிரிவு பாதுகாப்பைப் பெற்றவர். அவர் சிகிச்சை பெறும் வார்டுக்குள் சென்று யார் இந்த வீடியோவை எடுத்தது? ஜெயலலிதா பல காலகட்டங்களில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைபெற்றிருக்கிறார். ஆகவே, இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரமில்லை.
பட மூலாதாரம், Getty Images
கடந்த ஒரு வருடமாக இந்த வீடியோ வெளியிடப்படாமல், நாளை தேர்தலை வைத்துக்கொண்டு இந்த வீடியோவை வெளியிட்டிருப்பது தேர்தல் விதி மீறல். தேர்தல் ஆணையம் வெற்றிவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல வீடியோக்கள் அவரிடம் இருப்பதாக சொல்கிறார். ஏன் அவர் அதனை கமிஷனிடம் சமர்ப்பிக்கவில்லை? அவர் மீது தேர்தல் ஆணையம் வழக்குத் தொடர வேண்டும். ஜெயலலிதா உயிரோடு இந்தபோது சசிகலா குடும்பம்தான் பிரச்சனைக்குக் காரணமாக இருந்தது. இப்போது அவர் இறந்துவிட்ட நிலையில், தேர்தலை மனதில் வைத்து அவரது புகழை சீர்குலைப்பதற்காக திட்டமிட்டு சசிகலா குடும்பத்தால் செய்யப்பட்ட சதியை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.
ஜெயலலிதா சிகிச்சைபெற்றபோது அமைச்சர்கள் யாரையும் பார்க்கவிடவில்லை. தேசிய தலைவர்கள் யாரையும் பார்க்க விடவில்லை. அப்படியிருக்கும் நிலையில், இந்த வீடியோவை யார் எடுத்தது?" என்று வினவினார்.
ஜெயலலிதாவின் மரணத்திற்கு சசிகலா குடும்பத்தினர்தான் காரணம் என நேற்று ஆர்.கே. நகரில் நோட்டிஸ் கொடுக்கப்பட்டதுதான் இந்த வீடியோ வெளியிடப்பட்டதற்குக் காரணம் என வெற்றிவேல் கூறுவது குறித்து கேட்கப்பட்டபோது, இவர்கள்தான் அப்படி நோட்டீஸ் கொடுத்துவிட்டு, அதையே காரணம் காட்டி இந்த வீடியோவை வெளியிட்டிருப்பதாக ஜெயக்குமார் கூறினார்.
நீங்கள் இறந்தது எப்படி? எப்போது?: 'ஜெயலலிதா'விடம் கேள்வி கேட்கும் மக்கள்
உங்கள் மரணத்தில் மர்மம் உள்ளதா?: ஜெயலலிதாவிடம் கேட்கும் மக்கள்
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்