ஜெயலலிதா விடியோ விவகாரம்: சசிகலா குடும்பத்திற்குள் முரண்பாடு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவது போன்ற விடியோ வெளியானதற்கு வி.கே. சசிகலாவின் பிற குடும்ப உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Image caption வெற்றிவேல்

ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவது போன்ற வீடியோவை டிடிவி தினகரனின் ஆதரவாளரான வெற்றிவேல் இன்று காலையில் தலைமைச் செயலகத்தில் வைத்து வெளியிட்டார். இது தமிழக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உடனடியாக தமிழக அமைச்சர் ஜெயக்குமார் இந்த விடியோ வெளியிடப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்தார். இந்த வீடியோவை ஒளிபரப்ப வேண்டாமென ஊடகங்களுக்கு தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை அனுப்பியது.

இதற்கிடையில் சசிகலாவுடன் தற்போது சிறையில் உள்ள இளவரசியின் மகளான கிருஷ்ணப்ரியா, இந்த வீடியோ வெளியிடப்பட்டதை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மிகக் கடுமையாக விமர்சித்தார். இதற்குப் பிறகு தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கிருஷ்ணப்ரியா, சசிகலாதான் அந்த வீடியோவை எடுத்ததாகத் தெரிவித்தார்.

விசாரணை ஆணையத்தில் தேவைப்பட்டால் கொடுக்க வேண்டும் என்பதற்காக டிடிவி தினகரனிடம் இந்த விடியோ கொடுக்கப்பட்டதாகவும் ஆனால், எப்படி அது வெற்றிவேலிடம் சென்றது என்பது தனக்குத் தெரியவில்லையென்றும் கூறிய கிருஷ்ணபிரியா, வெற்றிவேல் மீது டிடிவி தினகரன் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பதைக் காணக் காத்திருப்பதாகவும் கூறினார்.

ஜெயலலிதா தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண பிரிவுக்கு மாற்றப்பட்ட பிறகு அந்த விடியோ எடுக்கப்பட்டதாகவும் சசிகலா மீது பலரும் குற்றஞ்சாட்டிய நிலையிலும்கூட வெளியிடப்படாத விடியோவை தற்போது வெளியிட்டிருப்பது மிக மோசமான செயல் என்றும் கிருஷ்ணப்ரியா கூறினார்.

Image caption சசிகலா

சசிகலாவை 15 நாட்களுக்கு ஒரு முறைதான் பார்க்க முடியும்; ஆகவே சசிகலாவின் அனுமதியின்றியேதான் இந்த விடியோ வெளியிடப்பட்டது என்றும் டிடிவி தினகரனைப் பற்றி தற்போது எதையும் சொல்லப்போவதில்லை என்றும் கிருஷ்ணபிரியா கூறினார்.

ஜெயலலிதாவின் பின்னால் இருக்கும் மருத்துவ உபகரணங்கள் என்ன என்பது அவருக்குத் தெரியாததால், அதை அவருக்குக் காண்பிப்பதற்காக அந்த விடியோவை சசிகலா எடுத்ததாகவும் பொதுமக்களுக்குக் காண்பிப்பதற்காக எடுக்கப்படவில்லையென்றும் கிருஷ்ணபிரியா கூறினார்.

இந்த விவகாரம் குறித்து டிடிவி தினகரன் கருத்து எதையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

காலையில் தலைமைச் செயலகத்தில் வெற்றிவேல் விடியோ எடுத்ததை நேரலை செய்த ஜெயா தொலைக்காட்சி, அதற்குப் பிறகு இது தொடர்பான செய்திகளை வெளியிடுவதையே தவிர்த்துவிட்டது. கிருஷ்ணப்ரியாவின் பேட்டியும் அந்தத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவில்லை.

Image caption ஜெயா டிவி அலுவலகம்

ஜெயா தொலைக்காட்சியும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழும் கிருஷ்ணபிரியாவின் சகோதரரான விவேக் ஜெயராமன் வசம் இருக்கிறது.

இதற்கிடையில் மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்த வெற்றிவேல் சசிகலா, தினகரன் ஆகியோரின் ஒப்புதல் இன்றியே தான் இந்த விடியோவை வெளியிட்டதாகக் கூறினார்.

ஜெயலலிதாவையும் சசிகலாவையும் அவதூறாகப் பேசுவதைத் தன்னால் தாங்க முடியவில்லையென்றும் தனக்குத் தூக்கம் வரவில்லையென்றும் அதனால்தான் இந்த விடியோவை வெளியிட்டதாகவும் வெற்றிவேல் தெரிவித்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :