ஆர்.கே.நகர்: 77.48 சதவீதம் பேர் வாக்களித்தனர்

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வியாழன்று (டிசம்பர் 21,2017) நடைபெற்ற இடைத்தேர்தலில் 77.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என்று இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2,28234 வாக்காளர்களைக் கொண்ட ஆர்.கே.நகர் தொகுதியில், 75.84 சதவீத ஆண்களும், 78.96 சதவீத பெண்களும் வாக்களித்துள்ளனர். பொதுவாக அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

இத் தொகுதியில் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து, தேர்தல் விதிமுறை மீறல்களுக்காகவும்,பணப்பட்டுவாடா புகார்களுக்காகவும் இதுவரை 162 புகார்கள் பதிவுசெய்யபட்டுள்ளன; 74 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Image caption அருண்மணி, மஞ்சுளா

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணியளவில் தொடங்கியது.

ஆர்.கே. நகர் தொகுதியில் மொத்தம் 50 இடங்களில் 258 வாக்குச் சாவடிகள் அமைந்துள்ளன. இத்தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 903 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 17 ஆயிரத்து 232 பெண் வாக்காளர்கள், 99 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்கள் உள்ளனர்.

பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் சரியாக 8 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. ஒரு சில வாக்குச்சாவடிகளில் வாகுப்பதிவு 10 நிமிடங்கள் தாமதமானது.

தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள மகாராணி திரையரங்கம் அருகே உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 9 மணி அளவில் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களிக்கிறார்.

இத்தேர்தலில் மொத்தம் 59 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளும் பதற்றமானவையாக கருதப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சி.சி.டி.வி கேமிரா பொருத்தப்பட்டு, அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இது வெப்கேஸ்டிங் முறையில் இணையத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. இதனை தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் பார்க்கலாம்.

பணம் அளிக்கவில்லை:

வாக்குப்பதிவை பார்வையிட்ட டி.டி.வி தினகரன், "என்னை பிடிக்காதவர்கள்தான் எங்கள் அணி, வாக்காளர்களுக்கு பணம் அளிப்பதாக கூறுகின்றனர்" என்றார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட காணொளி என ஒரு காணொளியை நேற்று தினகரன் அணியைச் சேர்ந்த வெற்றிவேல் வெளியிட்டு இருந்தார். இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "வாக்குப்பதிவு முடியும் வரை இதுக் குறித்து பேச முடியாது. 5.30 மணிக்கு மேல் இல்லத்துக்கு வாருங்கள் பேசலாம்." என்றார்.

பத்து சதவீதம்:

பதினொரு மணி நிலவரப்படி 10 சதவீத பேர் வாக்களித்து இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

"யாருக்கு வாக்களித்தேன்..?"

வாக்குச்சாவடிகளில் பார்வையற்றவர்களுக்கென எந்த சிறப்பு வசதிகளும் செய்து தரப்படவில்லை என்று மஞ்சுளாவும், அருண்மணியும் குற்றஞ்சாட்டினர்.

Image caption ஐந்து மணிக்குப் பிறகு காத்திருக்கும் வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடியில் விநியோகம் செய்யப்படும் டோக்கன்கள்.

அருண்மணி, "எனது வாக்கைப் பதிவு செய்ய உதவி தேவைப்பட்டது. நண்பர்களை உள்ளே அழைத்து செல்லலாமா என்று கேட்டேன், அதற்கு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. நான் யாருக்கு வாக்களித்தேன் என்று எனக்கே தெரியவில்லை" என்றார்.

65 சதவிகித வாக்குப் பதிவு:

மதிய ஒரு மணி நிலவரப்படி 43 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன.

ஒரு மணி நிலவரப்படி வாக்குச் சாவடி எண் 42-ல் அதிகபட்சமாக 65 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன.

80 சதவிகித வாக்கு பதிவை எதிர்பார்ப்பதாக மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

அவர், "கட்சிகள், வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்து வருவதில் காட்டிய ஈடுபாடே இந்த அளவு வாக்குப் பதிவுக்கு காரணம்." என்றார்.

தொடர்புடைய செய்திகள்:

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்