அரசியலை புரட்டியெடுத்த 2ஜி வழக்கு

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு நடந்த ஊழல்களில் மிகப் பெரியதாக பேசப்பட்ட2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டவர்களை விடுதலை செய்து டெல்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி இன்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டார். ஆனால், அந்த வழக்கு விசாரணை நடந்து முடிவதற்குள் பல முனைகளில் அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தியது என்பதை யாரும் மறுக்க முடியாது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2004-2009 மற்றும் 2009 முதல் 2014-ஆம் ஆண்டுகள் வரை ஆட்சியில் இருந்தது. அதில் முதலாவது ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை நடத்தியது. அதில் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீதும், மூன்று தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ 2011-ஆம் ஆண்டில் வழக்குப் பதிவு செய்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

இதேபோல மத்திய அமலாக்கத் துறையும் தனியாக தொடர்ந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்தது. இந்த வழக்குகளின் விசாரணை கடந்த ஆறு ஆண்டுகளாக டெல்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் நடைபெற்று வந்தது.

10 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் பயணித்த இந்த வழக்குகள், அரசியல் களத்திலும் குறிப்பாக தமிழக அரசியல் களத்தில் அதிக தாக்கத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான அரசின் முதலாவது ஆட்சியில் இந்த புகார்கள் எழுந்ததால், 2009-ஆம் ஆண்டு முதலே இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் திமுக இடையே சில மறைமுக கருத்துவேறுபாடுகள் எழுந்தன.

படத்தின் காப்புரிமை RAVEENDRAN

2011 தேர்தலில் 2ஜி வழக்கின் தாக்கம்

2011-ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தல், திமுக-காங்கிரஸ் இடையே நடந்த கூட்டணி பேச்சுவார்த்தைகள் மற்றும் தொகுதிப் பங்கீடு ஆகியவற்றிலும் 2ஜி வழக்கின் தாக்கம் இருந்தது.

நீண்ட நாட்களாக இரண்டு தரப்புக்கும் நடந்த கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் முறிந்துவிட்டதாகக் கருதப்பட்டது. பின்னர், அந்தத் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் 63 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது 2ஜி வழக்கினால் காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு கொடுத்த அழுத்தத்தின் விளைவு என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

மேலும், அந்தத் தேர்தலில் 2ஜி வழக்கு குறித்த பிரசாரமே எதிர்கட்சியினரால் அதிகமாக முன்வைக்கப்பட்டது.

எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த திமுக

பல தேர்தல் பிரசார கூட்டங்களிலும் 2ஜி ஊழலில் தொடர்புடைய கட்சிகள் திமுக மற்றும் காங்கிரஸ் என்று அதிமுக பொது செயலாளரான மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடுமையாக குற்றம் சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டுகளை மறுக்க கடும் முயற்சி மேற்கொண்ட திமுக கூட்டணி கட்சிகள் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும், 2ஜி வழக்கு என்பதே அனுமானத்தின் பெயரில்தான் போடப்பட்டது என்றும், எந்த ஆதாரமும் இல்லாமல் 2ஜி வழக்கு போடப்பட்டது என்றும் தொடர் விளக்க கூட்டங்கள் நடத்தினர்.

Image caption 2011-இல் மீண்டும் அதிமுக ஆட்சியை கைப்பற்றியது

2011 சட்டமன்ற தேர்தலில் 63 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 5 இடங்களில் மட்டுமே வென்றது. தேர்தலில் தோல்வியை சந்தித்த திமுக, எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது. இதற்கு 2ஜி ஊழல் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகள் பெரும் பங்கு வகித்தன என்று கூறப்பட்டது.

2014லும் தொடர்ந்த 2ஜி பாதிப்பு

2ஜி வழக்கு குறித்து குற்றச்சாட்டுகள் 2014 நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலித்தது. இம்முறை அதிமுக மட்டுமன்றி பாஜகவும் இந்தக் குற்றச்சாட்டு குறித்து முழங்கியது.

2014 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் தனித்தனியே வெவ்வேறு கூட்டணிகளில் போட்டியிட்டன.

சென்னையில் தொடங்கிய பாஜக கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார கூட்டத்தில், காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய கட்சிகளுக்கு இந்த முறைகேடு புகாரில் உள்ள பங்கு என்ன என்று பாஜகவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோதி வினவினார். அதனைத் தொடர்ந்து மற்ற பாஜக கூட்டணி தலைவர்களும் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

2014 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் தமிழகம் மற்றும் புதுவையில் எந்த இடத்திலும் வெல்லவில்லை.

2016இல் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மீண்டும் ஒரே கூட்டணியில் போட்டியிட்டபோது, 2ஜி முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகள் எதிர்கட்சிகளால் மீண்டும் எழுப்பப்பட்டது.

Image caption 2016 தேர்தலில் மீண்டும் தோல்வியடைந்த திமுக

'சினிமாவிலும் 2ஜி குறித்த வசனம்'

ஊழல் குற்றச்சாட்டு மற்றும் முறைகேடு புகார்கள் தொடர்பாக அதிமுகவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கு என்றால், திமுகவுக்கு 2ஜி வழக்கு என்று எதிர்க்கட்சிகளால் தொடர்ந்து குற்றம்சுமத்தப்பட்டது.

அரசியல் களத்தில் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் 2ஜி முறைகேடு குறித்த வசனங்கள் இடம்பெற்றன. இது மக்களுக்கு இந்த முறைகேடு குறித்து தொடர்ந்து நினைவுபடுத்துவதாக அமைந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

2007-ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அரசியல் கட்சியினருக்கும், சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தியது.

தற்போது ஆ.ராசா, மற்றும் கனிமொழி உள்ளிட்டோரை இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், இந்த தீர்ப்பு அரசியல் களத்தில் குறிப்பாக தமிழக அரசியல் சூழலில் எவ்வகையான மாற்றங்களை உருவாக்கும் என்று இனிவரும் நாட்களில் தெரிய வரும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :