2 ஜி தீர்ப்பு : கெஜ்ரிவால் முதல் சித்தார்த் வரை தெரிவித்த கருத்துகள் குறித்த தொகுப்பு

அர்விந்த் கெஜ்ரிவால் படத்தின் காப்புரிமை PRAKASH SINGH

2ஜி அலைக்கற்றை வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இதனையடுத்து சமூக ஊடகங்களில் #2GVerdict என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், தீர்ப்பு குறித்து தலைவர்கள், நடிகர்கள் பலர் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

முகாந்திரம் இல்லாமல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை துடைக்கும் வகையில், இந்த தீர்ப்பு அமைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

2ஜி அலைக்கற்றை தீர்ப்பில் அனைவரும் விடுதலை என்ற தீர்ப்பு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, தாங்கள் மேலும் வலுவாக வெளிப்படுவோம் என்றும் காங்கிரஸ் கட்சி ஊழல் அல்லாத கட்சி என்றும் குறிப்பிட்டுள்ளது.

2ஜி ஊழல் என்பது மிகப் பெரிய ஊழல் என்றும், வேண்டும் என்றே சிபிஐ இந்த வழக்கை முறையாக கையாளவில்லையா என ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

2ஜி தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், ஜெயலலிதலா வழக்கில் அவர் முதலில் விடுதலை ஆனாலும், பின்பு அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது போல, 2ஜி வழக்கிலும் நிலை மாறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ், 2ஜி ஒதுக்கீட்டில் ஊழல் நடக்கவில்லை என்றால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு உரிமங்களை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

2ஜி தீர்ப்பில் அனைவரும் விடுதலையானது, பா.ஜ.க மற்றும் அதிமுகவுக்கு விழுந்த மிகப்பெரிய அறை என காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் பிரசன்னா, ஜனநாயகத்தில் வாக்காளர்கள் மீண்டும் மீண்டும் முட்டாளாக்கப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

குற்றமற்ற இந்திய அரசியலுக்கு தன் வாழ்த்துக்களைக் கூறிக் கொள்வதாக நடிகர் சித்தார்த் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சிறப்பு நீதிமன்றத்தின் 2ஜி தீர்ப்பினால் பா.ஜ.க விற்கு எந்த லாபமும் இல்லை என மூத்த வழக்கறிர் கபில் சிபல் குறிப்பிட்டுள்ளார்.

தீர்ப்பை எதிர்த்து சிபிஐ மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றும் நீதி வெல்லும் வரை காத்திருப்போம் என்றும் பா.ஜ.கவின் தேசிய செயலாளர் எச்.ராஜா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதே போல, 2ஜி வழக்கின் தீர்ப்பை மனமகிழ்ச்சியுடன் வரவேற்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :