பள்ளியில் கிறிஸ்துமஸ்: வலதுசாரி குழு எதிர்ப்பு

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் படத்தின் காப்புரிமை Getty Images

ஒரு வலதுசாரி குழு மிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து, எந்த இடையூறும் இல்லாமல் அமைதியாக கிறிஸ்துமஸ் விழா நடப்பதை உறுதி செய்யுமாறு உத்தர பிரதேச அதிகாரிகள் காவல் துறைக்கு ஆணையிட்டுள்ளனர்.

கிறிஸ்துமஸ் விழாவை நடத்தக்கூடாது என்று அலிகர் நகரத்தில் உள்ள பள்ளிகளுக்கு இந்து ஜக்ரன் மன்ச் என்னும் வலதுசாரி குழு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் பள்ளி மாணவர்களின் கட்டாய மதமாற்றத்துக்கு வழிவகுக்கும் என்று அந்த அமைப்பு குற்றஞ்சாட்டுகிறது.

இந்த மாநிலம் இந்துத்துவ கொள்கை கொண்ட பாரதிய ஜனதா கட்சியால் ஆளப்படுகிறது.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு யார் ஊறு விளைவித்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட அரசு நிர்வாகிகளை அறிவுறுத்தி உள்ளோம் என்று ஓர் அரசு அதிகாரி தெரிவித்தார்.

"கிறிஸ்துவப் பள்ளியில் உள்ள இந்து மாணவர்கள், கிறிஸ்துமஸை கொண்டாட விளையாட்டு பொருட்களும், பரிசுப் பொருட்களும் எடுத்து வரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கிறிஸ்துவத்தின் மேல் பிடிமானம் வர செய்யும் வழி இது." என்று இந்து ஜக்ரன் மன்ச் அமைப்பை சேர்ந்த சோனு சவிதா டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.

"எங்கள் வழிக்காட்டுதல்களை பள்ளிகள் நிராகரித்தால், நாங்கள் அந்த பள்ளி வளாகத்தின் வெளியே ஆர்ப்பாட்டம் நடத்துவோம்" என்கிறார் அந்த அமைப்பின் மாநிலச் செயலாளர் சஞ்சு பஜாஜ்.

சில தினங்களுக்கு முன்பு மத்திய பிரதேசத்தில் தன்னை கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சித்ததாக ஒருவர் அளித்த புகாரில், ஆறு பக்தி இசைப் பாடகர்களை கைது செய்தது காவல் துறை. அதனை தொடர்ந்து இந்த சம்பவம் நடந்துள்ளது.

கைது செய்யப்பட்ட ஆறு நபர்களில் ஒருவர் கத்தோலிக்க இறையியல் பள்ளியின் பேராசிரியர். கைது செய்யபட்ட அந்த அறுவர் குழு, நாங்கள் பாடல் பாடவே அந்த கிராமத்துக்கு சென்றோம் என்று கூறியது.

புகார் அளித்த நபர், அந்த குழு என்னை கிறிஸ்துவை வழிப்பட கூறியது. கிறிஸ்துவ மதத்துக்கு மாறுவதற்கு பணம் அளிக்கவும் முன் வந்தது என்று கூறி இருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்