நீதி அமைப்பின் மீதான நம்பிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது: ராசா

"எனது செயல்கள் சரியானவை என்கிற எனது உறுதியான நம்பிக்கை மற்றும் நாட்டின் நீதி அமைப்பின் மீதான எனது நம்பிக்கை ஆகியவை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளன," என்று முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சரும் 2ஜி வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டவருமான ஆ.ராசா தெரிவித்தள்ளார்.

ஆ.ராசா

பட மூலாதாரம், RAVEENDRAN

2ஜி வழக்கின் தீர்ப்பு வியாழக்கிழமை வெளியானதைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

தொலைத்தொடர்பு அமைச்சராக தனது எல்லா நடவடிக்கைகளும், தேசியத் தொலைத் தொடர்புக் கொள்கையின்படியும், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையப் பரிந்துரைகளுக்கு ஏற்பவும் தொலைத் தொடர்பு சேவைகளை மலிவாக ஆக்குவதற்கானதும், பரவலாக கிடைக்கச் செய்வதாகவும் அதன் மூலம் வெகு மக்களுக்கு நன்மை பயப்பதாகவுமே இருந்தன என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த நடவடிக்கையின் பலன்களை தேசத்தின் மக்கள், குறிப்பாக ஏழைகள் அனுபவிப்பதாகவும் அந்தப் பலன்கள் அவர்களுக்குக் கண்கூடாகத் தெரிவிதாகவும் குறிப்பிட்ட ராஜாஅதனால், இந்தத் தீர்ப்புக்கு முன்னதாகவும்கூட தான் செய்தது நியாயமென்றே உணர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொலைத் தொடர்புத் துறையில் தாம் ஒரு புரட்சியை ஏற்படுத்தியதாகவும், புரட்சியை செய்த நபர் பல நேரங்களில் குற்றவாளி என்றே அழைக்கப்படுவது வரலாறு அறியாததல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

உள்நோக்கம் கொண்டோர் புனையப் பட்ட குற்றச்சாட்டுகளை ஊதிப் பெரிதாக்கியதாகவும், ஊடகங்களைப் பயன்படுத்தி மக்களின் கருத்தைத் திரித்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சதிக் கோட்பாட்டாளர்கள் கண்மூடித் தனமாக செய்த பிரசாரத்துக்கான அடிப்படையாக இருந்த, "நாட்டின் கருவூலத்துக்கு ஏற்பட்ட உத்தேச இழப்பு" என்பது புனையப்பட்ட ஒன்று.

"ஒரு வழக்குரைஞராகவும், அரசு ஊழியராகவும் எனக்கு நீதித்துறையின் மீது முழு நம்பிக்கை இருந்தது. வழக்கு விசாரணையின்போது முழுதாக ஒத்துழைத்தேன். ஒரு நாள்கூட ஒத்திவைப்பு கோரவில்லை. சாட்சிக் கூண்டில் ஏறி சாட்சியம் அளிக்கவும், சிபிஐயின் குறுக்கு விசாரணைக்குப் பதில் சொல்லவும் எனக்கு தன்னம்பிக்கையும் துணிச்சலும் இருந்தது. இந்தியாவில் நடக்கும் குற்ற வழக்கு விசாரணைகளில் இது அரிதானது.

எனது சாட்சியம் ஒழுங்காகவும், நம்பகமாகவும், ஆவணங்களில் உள்ளவற்றுடன் ஒத்துப்போகும்படியாகவும் இருந்தது என்று விசாரணை நீதிபதி மீண்டும் மீண்டும் கூறினார். அதே நேரம், அரசுத் தரப்பு சாட்சியங்கள் நம்பகமற்றவை என்று நிராகரிக்கப்பட்டன. விசாரணை அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாமல் போன வழக்கல்ல இது, மாறாக வழக்கே பொய்யானது என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார். முதல் நாளில் இருந்து இதுதான் என் வாதமும்," என்று ராசா தெரிவித்துள்ளார்.

எனது வாழ்வின் இருண்ட காலத்தின்போது தளராத ஆதரவு தந்த திமுக தலைவர் மு.கருணாநிதி, செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மற்ற திமுக தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :