ஆ.ராசா முறைகேடு செய்ததற்கான போதுமான ஆதாரங்கள் எங்களிடம் இருந்தது: முன்னாள் சிபிஐ இயக்குனர்

உரிமங்கள் ஒதுக்கீட்டில் அமைச்சர் ஆ.ராசா முறைகேடு செய்ததற்கான போதுமான ஆதாரங்கள் எங்களிடம் இருந்தது: ஏ.பி சிங் படத்தின் காப்புரிமை PIB
Image caption உரிமங்கள் ஒதுக்கீட்டில் அமைச்சர் ஆ.ராசா முறைகேடு செய்ததற்கான போதுமான ஆதாரங்கள் எங்களிடம் இருந்தது: ஏ.பி சிங்

2ஜி அலைக்கற்றை வழக்கில், போதுமான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

இந்நிலையில், சிபிஐ இந்த வழக்கை எடுத்து விசாரிக்க காரணமாக இருந்து, விசாரணையை தொடக்கி, ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த முன்னாள் சிபிஐ இயக்குனர் ஏ.பி.சிங்குடன், பிபிசி செய்தியாளர் டெவினா குப்தா நடத்திய நேர்காணல்.

2ஜி வழக்கை முன்னெடுத்த நபர்

2ஜி வழக்கின் குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி, அனைவரையும் சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது குறித்து முன்னாள் சிபிஐ இயக்குனர் ஏ.பி.சிங்கிடம் கேட்டதற்கு, தாம் நீதிமன்றத்தில் இல்லை என்றும் ஆனால் இந்த தீர்ப்பு தமக்கு ஆச்சரியம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.

"விசாரணையின் முக்கிய பகுதிக்கான குற்றப்பத்திரிக்கை, 60 பக்கங்களை கொண்டது. உரிமங்கள் ஒதுக்கீட்டில் அமைச்சர் ஆ.ராசா முறைகேடு செய்ததற்கான போதுமான ஆதாரங்கள் எங்களிடம் இருந்தது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், யூனிடெக் மற்றும் ஸ்வான் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு ஆதரவாக ஆ. ராசா செயல்பட்டார். மேலும், இதற்கு விண்ணப்பிக்க அக்டோபர் ஒன்றாம் தேதி கடைசி நாளாக இருக்க, யூனிடெக் மற்றும் ஸ்வான் நிறுவனங்களுக்கு ஆதரவாக செப்டம்பர் 25 ஆம் தேதியே விண்ணப்பங்கள் பெறுவதை அவர் நிறுத்திவிட்டார்" எனவும் பிபிசியிடம் ஏ.பி.சிங் கூறினார்.

படத்தின் காப்புரிமை RAVEENDRAN

பின்னர், இடைத்தரகர் மூலமாக கனிமொழி மற்றும் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு சொந்தமான கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

விசாரணை மேலும் வலுமையாக இருந்திருக்க வேண்டுமா என்ற கேள்விக்கு, கருத்துக் கூற விரும்பவில்லை என்று கூறிய ஏ.பி. சிங், தங்களின் விசாரணையை உச்சநீதிமன்றம் பாராட்டியதாக குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images

2ஜி வழக்கு விசாரணையை கண்காணிக்க நீதிமன்றத்தினால் மேற்பார்வைக்குழு அமைக்கப்பட ஆரம்பத்தில் கோரப்பட்டாலும், தாங்கள் அதனை எதிர்த்ததாக ஏ.பி.சிங் தெரிவித்தார்.

மேலமை நீதிமன்றத்தில் நல்ல தந்திரத்தோடு இந்த தீர்ப்பை சிபிஐ மேல்முறையீடு செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு, அது இப்போதைய பொறுப்பாளர்கள் எடுக்கவேண்டிய முடிவு என்று தெரிவித்தார் சிங்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்