2ஜி வழக்கு: தேசிய அளவில் இழந்த மரியாதையை மீட்குமா திமுக?

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக, திமுகவைச் சேர்ந்த அப்போதைய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் மீது சி.பி.ஐ பதிவு செய்த வழக்கில் வியாழனன்று வெளியாகியுள்ள தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Prakash Singh
Image caption ஆ.ராசா

இது தொடர்பாக மூத்த பத்திரிக்கையாளர் மணி பிபிசி தமிழுக்கு அளித்த ஃபேஸ்புக் நேரலையில் கூறிய கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.

அனைவரும் விடுதலை: திமுகவுக்கு என்ன விதமான பலன்?

அரசியல் ரீதியாக இந்தத் தீர்ப்பு திமுகவுக்கு ஒரு பலத்தைக் கொடுத்திருக்கிறது. 2ஜி விவகாரம் 2009-10ஆம் ஆண்டுகளில் 'வெடித்தபோது', அநேகமாக 90% ஊடகங்கள் இந்தக் குற்றச்சாட்டை வலுவாக முன்னெடுத்துச் சென்றன.

'மீடியா டிரையல்' (ஊடகங்களின் விசாரணை ) மூலம் ராசா, கனிமொழி ஆகியோரை நாம் ஏற்கனவே சிலுவையில் அறைந்துவிட்டோம். விசாரணை நீதிமன்றம் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்துள்ளது. இந்தத் தீர்ப்பால் 2ஜி மூலம் கொள்ளை அடித்தது என்ற குற்றச்சாட்டில் இருந்து திமுகவும் விடுதலை அடைந்துள்ளது.

உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகிய இரண்டு அடுக்குகள் இன்னும் உள்ளன. (மேல் முறையீடு செய்யப்பட்டால்) இந்தத் தீர்ப்பு உறுதிசெய்யப்படுவதற்கான வாய்ப்புகள் 90%-க்கும் மேல் உள்ளதாக கருதுகிறேன். திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையேயான உறவும் இனி மேலும் வலுப்பெறும் என்று நம்புகிறேன்.

2011-இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த வழக்கு முக்கிய விடயமாக இருந்தது. ஆனால், 2016-இல் மக்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதற்கான சாட்சி 2016-இல் நடந்த தேர்தலில் திமுக 89 இடங்களில் வெற்றி பெற்றதுதான். தமிழகத்தைப் பொறுத்த வரைக்கும் ஒரே விவகாரம் இரண்டு தேர்தல்களில் எதிரொலித்தது கிடையாது.

ஒரு வேளை இவர்கள் தண்டிக்கப்பட்டிருந்தால் கண்டிப்பாக அடுத்த வரும் தேர்தலில் திமுகவுக்கு ஒரு பாதிப்பு இருந்திருக்கும். ஜெயலலிதா இறந்த பிறகு தமிழக அரசியல் மெல்ல மெல்ல வேறு திசையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. பாரம்பரியமாக அதிமுகவுக்கு இருந்த வாக்கு வங்கியில் குறைந்தபட்சம் 3%-ஆவது திமுகவின் பக்கம் திரும்பியுள்ளது.

'உச்ச நீதிமன்றம் அடிப்படை உரிமைகளைக் கூட வழங்கவில்லை'

உச்ச நீதிமன்றம் கொடுத்த நெருக்கடியால்தான் காங்கிரஸ் இந்த வழக்கையே தொடுத்தது. அதனால் இந்தத் தீர்ப்பு காங்கிரஸ் கட்சிக்கும் ஒரு பலத்தைக் கொடுத்துள்ளது. இந்தியாவின் வேறு எந்த நீதிமன்றமும் 2ஜி வழக்கு தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றமும் அதீதமான கவனத்தையும் ஆர்வத்தையும் காட்டியது.

ஒரு விதத்தில் இது ஒரு நியாயமற்ற வழக்கு விசாரணையாக இருந்தது. இந்திய அரசியல் அமைப்பு சாசனம் மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைக் கூட இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கவில்லை.

உதாரணாமாக, விசாரணை நீதிமன்றத்தில் தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் கனிமொழி மனு செய்தபோது எந்த முடிவும் எடுக்காமல் நீதி மன்றம் இருந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றபோது, வழக்கு முடிவுறும் தருவாயில் இருக்கும்போது விடுவிக்கக் கோரும் மனு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது குறித்து ஏன் பேசுகிறீர்கள் என்று உச்ச நீதிமன்றம் கேட்டது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
''ஏழாண்டுகள் நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டதுதான் மிச்சம்''

இது அரசியல் சாசன உரிமைகள் மட்டுமல்லாது இயற்கை நியாய தர்மத்துக்கும் முரணானது.

மக்கள் மனதில் ராசா மற்றும் குற்றம்சாட்டப்பட்ட பிறர் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்துவிட்டார்கள் என்பது பதிந்துவிட்ட நிலையில், அவர்களுக்கு உரிய அரசியல் சாசன உரிமையைச் செய்யக்கூட உச்ச நீதிமன்றம் அனுமதிக்கவில்லை.

ஒரு கட்டத்தில், மிகவும் அபாயகரமாக சி.பி.ஐ-இன் குற்றப்பத்திரிகையை நாங்கள் பார்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். ஆனால் நல்ல வேளையாக, அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான தற்போதைய அட்டர்னீ ஜெனெரல் கே.கே.வேணுகோபால் அதற்கு மறுப்பு தெரிவித்தார். நீதிபதிகளும் அதை வற்புறுத்தவில்லை.

ஆரம்பத்தில் இருந்தே உச்ச நீதிமன்றம் மேற்கொண்ட நடவடிக்கைகளும், ஊடகங்கள் மத்தியிலும், மக்கள் மன்றத்திலும் அவர்களுக்கு எதிராக இருந்த போக்கு ஆகியவற்றை மீறி இந்தத் தீர்ப்பை ஒரு நீதிபதி கொடுத்திருக்கிறார் என்றால் 99% அது சட்டத்துக்கு உட்பட்ட தீர்ப்பாகத்தான் இருக்கும் என நான் நினைக்கிறன்.

'சமூக வலைத்தளங்களில் தீர்ப்பை விமர்சிப்பவர்கள் மூளை வளர்ச்சி குறைந்தவர்கள்'

சமூக வலைத்தளங்களில் சி.பி.ஐ தங்கள் தரப்பு வாதத்தை சரியாக முன்வைக்கவில்லை என்பதால்தான் விடுவிக்கப்பட்டார்கள் என்று எழுதுபவர்கள் முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவாவது மூளை வளர்ச்சி குறைந்தவர்கள். தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள். நாடே உற்றுநோக்கும், உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் நடக்கும் இந்த வழக்கில் சி.பி.ஐ சரியாக வாதிடவில்லை என்பது ஒரு அபத்தமான வாதம்.

சி.பி.ஐ நேர்மையாக வாதிடவில்லை என்பவர்கள் தங்கள் கூற்றை நிரூபிக்கும் ஆதாரங்களை மக்கள் மன்றத்தில் முன்வைக்கட்டும். குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரம் சி.பி.ஐ-இடம் இல்லை என்பதே உண்மை. அவர்கள் இந்த வழக்கைப்பற்றியோ, இந்திய அரசியல் சாசனம் பற்றியோ, இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் ஒருதலைபட்சமான போக்கையும் அறியாதவர்கள்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
''தீர்ப்பு எப்படி வந்திருந்தாலும் ஆர்.கே.நகர் தொகுதியில் நாங்கள்தான் ஜெயிப்போம்''

இந்தத் தீர்ப்பு திமுகவுக்கு எதிரான நிலையில் உள்ளவர்களுக்கு நிச்சயமாக ஒரு மன மாற்றத்தை அளிக்கக்கூடியது.

நேரடி மேற்பார்வை இருக்கும் வழக்கில், குற்றப் பத்திரிக்கையைப் பார்க்க வேண்டும், விடுவிக்கக் கோரும் மனு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததை நியாயப்படுத்தியது என்று, நாடு விடுதலை அடைந்த 70 ஆண்டுகளில் இது வரை உச்ச நீதிமன்றம் இவ்வாறு நடந்துகொண்டதில்லை. இந்த சூழலில் இப்படி ஒரு தீர்ப்பை அந்த நீதிபதி எவ்வளவு சிரமப்பட்டு, நேர்மையாக எழுதியிருப்பார் என்பதை யூகிக்க முடிகிறது.

உச்ச நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் வழக்கில் வழக்கு நாட்குறிப்பை உச்ச நீதிமன்றம் பார்க்கும் என்றும் விசாரணையில் பொய்கள் இருந்தால் அவை அதில் வெளிப்பட்டுவிடும் என்பதும், அதில் தவறுகள் இருந்தால் அவற்றை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிடும் என்று விசாரணை நீதிபதிக்கு கண்டிபாகத் தெரிந்திருக்கும்.

திமுகவுக்குள் இந்தத் தீர்ப்பு ஏற்படுத்தும் தாக்கம்

திமுகவுக்கு வெளியே என்பதை விட திமுகவுக்கு உள்ளே என்ன தாக்கத்தை இந்தத் தீர்ப்பு உண்டாக்கும் என்பது ஒரு நல்ல, அழகான கேள்வி. ஏற்கனவே 99% கட்சியை மு.க.ஸ்டாலின் கைப்பற்றியுள்ள நிலையில், கனிமொழியின் விடுதலை, கனிமொழிக்கு பலம் சேர்க்கலாம், மு.க.அழகிரி மீண்டும் அரசியலில் நுழைய வழிவகுக்கலாம். ஸ்டாலினுக்கு எதிராக குடும்பத்தில் இருப்பவர்களை ஒருங்கிணைத்து, அவருக்கு பிரச்சனைகளை அதிகப்படுத்தவும் வாய்ப்புண்டு.

படத்தின் காப்புரிமை MK Stalin

காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் திமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்ற நிலை திமுகவுக்கு வெளியே உருவாகியுள்ளது. அரசியல் ரீதியாக, திமுகவுக்கு வெளியே உள்ளவர்களில் யார் வேண்டுமானாலும் வந்து சேரலாம் எனும் வரப்பிரசாதமாக இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.

திமுகவுக்குள் ஸ்டாலினுக்கு எதிராக உள்ள அதிகார மையங்கள் வலுப்பெற இந்தத் தீர்ப்பு வழிவகுக்கும். தனது குடும்பத்தில் இருக்கும் அதிகார மையங்களை எவ்வாறு கையாள்வது எனும் கவலை அல்லது அக்கறையை ஸ்டாலினுக்கும் இந்தத் தீர்ப்பு உருவாகியிருக்கும். 2ஜி விவகாரம் வெளியானபோது முக்கியத்துவம் கொடுத்து எதிராகப் போனதுபோல, இப்போதும் கொடுத்து எழுத வேண்டும் என்று ஊடகங்களிடம் அவர் கேட்பதிலும் ஒரு நியாயம் உள்ளது.

தேசிய ஊடகங்கள் இந்தத் தீர்ப்புக்கு எதிராக கச்சை கட்டி களத்தில் இறங்கியிருப்பது, ஊடகங்களின் நம்பகத்தன்மையை சிதைத்துக்கொண்டிருக்கிறது. எல்லா விவகாரங்களிலும் ஒரு மறுபக்கம் உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் நேரடிப் பார்வையில் நடக்கும் ஒரு வழக்கில் தவறு நடக்கும் வாய்ப்பு மிக மிக குறைவு. எனவே ஊடகங்கள் இரு தரப்பின் சமநிலையையும் அனுசரித்து நடக்க வேண்டும்.

அப்போது ஒரு ஆதரித்து அன்று எழுதிவிட்டு, இன்று நியாய தர்மங்களையும், தொழில் தர்மங்களையும் பாராமல் எழுதுவது தவறில்லை. ஆனால், மறுபக்கத்தையும் பார்க்க வேண்டும். ஊடகங்களின் பங்கு இந்த விவகாரத்தில் ஏமாற்றம் தரும் வகையில் அமைந்துள்ளது.

2ஜி விவகாரம் திராவிடக் கட்சிகள் குறித்த மோசமான புரிதலை இந்தியா முழுவதும் ஏற்படுத்தியுள்ளதா?

தமிழ்நாட்டுக்கு வெளியே இருப்பவர்களுக்கு திராவிட இயக்கம் மற்றும் திராவிடக் கட்சிக்கு இடையேயான வேறுபாடு தெரியாது. அவர்களில் பெரும்பாலானோர் அதிமுகவை விட திமுகவையே எதிர்த்துள்ளனர். திராவிடக் கட்சிகள் ஊழலில் மூழ்கி முத்தெடுத்த கட்சிகள் என்று நினைப்பவர்களுக்கு இந்தத் தீர்ப்பு நிச்சயம் மகிழ்ச்சியைக் கொடுக்காது. வேண்டுமானால், அவர்கள் ஒரு நடுநிலையை எடுக்கலாம்.

இந்தத் தீர்ப்பால் தேசிய அளவில் இழந்த மரியாதையை திமுகவுக்கு 100% மீண்டும் கிடைக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். காரணம், ஆங்கில மற்றும் இந்தி ஊடகங்கள் இந்தத் தீர்ப்பு தவறு என்றுதான் கூறி வருகின்றன. பாரம்பரியமாக தென் இந்திய எதிர்ப்பு மற்றும் திமுக எதிர்ப்பு நிலையில் இருப்பவர்கள் திமுகவை இன்னும் ஊழல் கட்சியாகத்தான் பார்ப்பார்கள் என்றுதான் தோன்றுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :