இன்குலாபுக்கு சாகித்ய அகாதமி விருது: ஏற்க குடும்பத்தினர் மறுப்பு

மறைந்த கவிஞர் இன்குலாபிற்கு சாகித்ய அகாதமி விருதுகள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த விருதை ஏற்கப் போவதில்லையென அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இன்குலாப்
படக்குறிப்பு,

இன்குலாப்

ஒவ்வொரு ஆண்டும் இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய நூலுக்கு வழங்கப்படும் சாகித்ய அகாதெமி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. தமிழில் கவிஞர் இன்குலாபிற்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இன்குலாபிற்கு விருது வழங்கிய தேர்வுக் குழுவில் எழுத்தாளர்கள் இந்திரன், பா. செயப்பிரகாசம், பொன்னீலன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

கடந்த ஆண்டு அகரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட காந்தள் நாட்கள் கவிதைத் தொகுப்பிற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 12 கவிதைத் தொகுப்புகளும் கட்டுரை சிறுகதைத் தொகுப்புகளும் வெளியாகியுள்ளன.

ஆனால், இந்த விருதை ஏற்கப்போவதில்லையென இன்குலாபின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். "எனக்கு விருதுகள் வரும் என்று எதிர்பார்த்து எழுதுவதில்லை. ஆனால் எதிர்ப்பும், கண்டனமும், தாக்குதலும் வரலாம் என்பதை எதிர்பார்த்தே உள்ளேன். அவ்வப்பொழுது விசாரணைக்காக இந்த அரசாங்கம் என்னை அழைப்பதே எனக்கான பரிசுகளின் தொடக்கமாகும்'' என்ற இன்குலாபின் வரிகளை மேற்கொள் காட்டியிருக்கும் அவரது குடும்பத்தினர் அவர் வாழ்ந்த காலத்தில் எந்த அரசு விருதுகளையும் ஏற்கவில்லையென்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், "விமர்சிப்பவர்கள்,எதிர்ப்பவர்களையெல்லாம் படுகொலை செய்யும் இந்நேரத்தில் இவ்விருதை ஏற்றுக்கொள்வது என்பது இன்குலாப் வாழ்ந்த வாழ்க்கைக்கும், எழுதிய எழுத்துக்களுக்கும் துரோகம் இழைப்பதாகும்" என அவர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவரது மகள் அமீனா பர்வீன், "எங்கப்பா உயிரோடு இருக்கும்போது எந்த அரசு விருதையும் ஏற்கமாட்டார். அதனால், இதை நாங்கள் ஏற்கப்போவதில்லை" என்று தெரிவித்தார்.

1944 ஏப்ரல் 5ஆம் தேதி இராமநாதபுரம் கீழக்கரையில் பிறந்த இன்குலாபின் இயற்பெயர் எஸ்.கே.எஸ். சாகுல் ஹமீது. சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவு கல்லூரியில் புகுமுக வகுப்பையும் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் இளநிலைப் படிப்பையும் படித்தவர். சென்னையில் உள்ள புதுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

இன்குலாப் தியாகராசர் கல்லூரியில் படித்த காலத்தில் வெடித்த இந்தி எதிர்ப்புப் போரட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்று சிறை சென்றார்.

படக்குறிப்பு,

யூமா வாசுகி

வானம்பாடி கவிதை மரபைச் சேர்ந்த இன்குலாப், குரல்கள், துடி, மீட்சி, ஒளவை உள்ளிட்ட நாடகங்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய 'மனுசங்கடா.. நாங்க மனுசங்கடா' என்ற பாடல் மிகவும் பிரபலமானது.

கார்க்கி என்ற இதழில் இன்குலாப்பின் ஆரம்ப கால கவிதைகள் வெளிவந்தன. தராசு, நக்கீரன், இனி, நாற்காலி, உண்மை, உங்கள் விசிட்டர் எனப் பல இதழ்களில் கட்டுரைகளையும் கவிதைகளையும் அவர் எழுதியிருக்கிறார். பல கவிதைத் தொகுப்பு நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

மார்க்சிய - லெனினிய கொள்கைகளிலும் தமிழ் தேசியக் கொள்கைகளிலும் ஈடுபாடு கொண்ட இன்குலாப், தனக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருதை திருப்பி அளித்தவர். 2016ஆம் தேதி டிசம்பர் 1ஆம் தேதி உயிரிழந்த அவரது உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.

மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாதெமி விருது எழுத்தாளர் யூமா வாசுகிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஓ.வி. விஜயனால் மலையாளத்தில் கசாக்கிண்டே இதிகாசம் என்ற பெயரில் வெளியான நாவலை, கசாக்கின் இதிகாசம் என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்திருந்தார் யூமா வாசுகி. காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள அந்த நூலுக்கு மொழிபெயர்ப்பிற்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ரத்த உறவு நூலின் மூலம் தமிழ் இலக்கிய உலகில் பரவலாக அறியப்பட்ட யூமா வாசுகி, ஓவியம், இலக்கியம் என பல்வேறு தளங்களில் செயல்பட்டுவருபவர். மலையாளத்திலிருந்து பல நூல்களை இவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

1966ல் பிறந்த யூமா வாசுகியின் இயற்பெயர் மாரிமுத்து. சிறுகதை, நாவல், கவிதை, மொழிபெயர்ப்பு என இலக்கியத்தில் பல வடிவங்களிலும் தீவிரமாக இயங்கிவருகிறார் யூமா வாசுகி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :