ஜெயலலிதா பற்றிய காணொளி உண்மை: டிடிவி தினகரன்

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எடுத்த காணொளியை எம்எல்ஏ வெற்றிவேல் உணர்ச்சிவசப்பட்டு வெளியிட்டார் என்றும் அந்த காணொளியால் தனது அணிக்கு சாதகமும் இல்லை, பாதகமும் இல்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக (டிசம்பர் 2௦ம் தேதி) வெற்றிவேல் வெளியிட்ட காணொளி தொடர்பாக சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிடிவி தினகரன், காணொளியை வெற்றிவேல் வெளியிட்டது அவரது தனிப்பட்ட முடிவு என்று கூறினார்.

காணொளியின் உண்மைத்தன்மை பற்றிக்கேட்டபோது, ''என்னிடம் இருந்துதான் அந்த காணொளியை அவர் பெற்றுக்கொண்டார். என்னிடம் உள்ளது உண்மை என்றால், வெற்றிவேலிடம் உள்ள காணொளியும் உண்மைதான். அந்த காணொளி நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் எடுக்கப்பட்டது. காணொளி வெளியிட்டதற்கு அவர் எதிர்கொள்ள வேண்டிய சட்டபிரச்சனைகளை அவர் எதிர்கொள்வார். உணர்ச்சிவசப்பட்டு அவர் வெளியிட்டார் என்று கூறும்போது எங்களால் வேறு நடவடிக்கை எடுக்கமுடியவில்லை,'' என்று கூறினார்.

அதிமுகவின் பொதுச்செயலாளரான சசிகலா, ஜெயலலிதா கேட்டுக்கொண்டதால்தான் அந்த காணொளியை எடுத்தார் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஜெயலலிதா காணொளி .

வெற்றிவேல் உடல்நலன் சரியில்லாத காரணத்தால் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்குகளில் அவர் பங்கேற்கமுடியவில்லை என்பதால் அந்த காணொளியை தன்னிடம் கேட்டதாகவும், சசிகலாவின் அனுமதியுடன் அதை வெற்றிவேலுக்கு கொடுத்ததாகவும் டிடிவிதினகரன் தெரிவித்தார்.

மேலும் காணொளி வெளியானதால் சசிகலா மனவருத்தம் அடைந்திருப்பார் என்று கூறிய டிடிவி தினகரன், ''கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகர் தேர்தல் நடைபெறும் என்ற நிலையில் ஓபிஎஸ் அணியினர் ஜெயலலிதா அவர்களின் சவப்பெட்டி போன்ற உருவத்தைக் கொண்டு ஓட்டு சேகரித்தனர். அந்த சமயத்தில்கூட நாங்கள் காணொளியை வெளியிட விரும்பவில்லை. தற்போது வெளியானதால் எங்களுக்கு வருத்தம்தான்,'' என்றார்.

தனது நண்பராக இருந்த வெற்றிவேல் கட்சியைக் காப்பாற்றவே இந்த காணொளியை வெளியிட்டதாகவும் எந்த அரசியல் லாபமும் இந்த காணொளியால் இல்லை என்றும் கூறினார்.

ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரத்தில் மக்களிடம் நல்ல ஆதரவு இருந்ததாகவும், நல்ல முடிவை எதிர்பார்ப்பதாகவும் தினகரன் தெரிவித்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்