2ஜி வழக்கு: நிரூபிக்க முடியாத தர்க்கத்திற்கு பெயர் விஞ்ஞான ரீதியான ஊழலா?

வியாழன் அன்று தீர்ப்பு வெளியான 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதால் 'அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது நிரூபணமாகிவிட்டது என்ற திமுகவின் வாதம் சரியா? உரிய ஆதாரங்களுடன் வழக்கை கையாள சிபிஐ தரப்பு தவறிவிட்டதா?' என்று #வாதம்விவாதம் பகுதியில் பிபிசி தமிழின் சமூக வலைத்தள நேயர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்கள் பதிவிட்ட கருத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றைத் தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை CHANDAN KHANNA

"ஆரம்பம் முதலே இந்த வழக்கு முழுக்க ஆதார மற்றது என்று தி மு க வினர் ஒவ்வொருவரும் கூறி வந்திருக்கின்றனர்.. இதையெல்லாம் ஒருவர் கூட காது கொடுத்து கேட்க தயாராக இல்லை. பொதுவாக இரண்டு பேர் அடித்துக்கொண்டு அதில் ஒருவன் கூப்பாடு போட்டால் என்ன எது என்பதே தெரியாமல் யார் அதிகமாக கூவுகிறானோ அவன் பக்கம் நியாயம் பேசும் மனோபாவம் உள்ளவர்களை போன்றே இந்த வழக்கை பொறுத்தவரையில் இந்த மக்கள் இருந்து விட்டார்கள். சாதாரண மக்கள் என்றாலும் பரவாயில்லை முழுக்க முழுக்க தகவல் தொழில் நுட்பத்தை பயன் படுத்திக்கொண்டிருக்கும் உருவாக்கி கொண்டிருக்கும் அறிவாளிகளுக்கு கூட ஸ்பெக்ட்ரம் வழக்கை புரிந்து கொள்ள முடியவில்லை." என்கிறார் வேலு எனும் நேயர்.

"இழப்புகளை ஊழல் என்று பாஜகவின் தூண்டுதல் பேரில் வழக்கு பதியப்பட்டது. இப்போது ஊழல் என்பதை ஆதாரத்துடன் நிரூப்பிக்க தவறியது சி.பி.ஐ. திமுக ,காங்கிரஸ் மீது பழி சுமத்தி ஆட்சியை பிடிக்க நினைத்த பாஜகவின் சதி தான் இந்த வழக்கு," என்கிறார் புலிவளம் பாஷா.

தமிழ் வாணன் எனும் பிபிசி தமிழ் நேயர் இவ்வாறு கூறுகிறார்,"புதிய நிறுவனங்களை அனுமதித்து புதிய புரட்சியினை தந்தவர். பத்து ஆண்டுகளுக்கு முன் செல்போன் கட்டணம் எவ்வளவு இருந்தது என்று சற்றே பின்னோக்கி சென்று சிந்தித்து பாருங்கள் நண்பர்களே."

"தி.மு. க. பற்றி சர்க்காரியா கமிஷன் சொன்னதுதான் உண்மை. விஞ்ஞான முறைப்படி ஊழல் செய்வதில் கில்லாடிகள். என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம். இந்த தீர்ப்பினால் ஊழலே நடக்க வில்லை என்று மார்தட்ட முடியுமா?," என்பது சிவசாமி சியாமளா எனும் பெயரில் பதிவிடும் பேஸ்புக் நேயர்.

"நிரூபிக்க முடியாத தர்கத்திற்கு "விஞ்ஞான ரீதியான ஊழல்" என்று ஒரு வார்த்தையை போகிற போக்கில் சர்க்காரியா சொல்லி விட்டு சென்றுவிட்டார்! இன்றுவரை அதைப் பிடித்து தொங்கி கொண்டிருக்கிறார்கள்! விஞ்ஞானம் என்பதே உண்மைக்கான அடிப்படை ஆதாரத்தை கொண்டது," என்று கூறுகிறார் வேலு.

"2ஜி வழக்கு தீர்ப்பு சாதகமாக வந்ததால் திமுக ஒன்னும் புனிதமான கட்சியல்ல. கருணாநிதி முதல் அனைத்து சகாக்கள் இப்போ ஆ.ராசா வரை ஊழல் நடந்தற்கான முகாந்திரம் இருக்கிறது. ஆனால், நிரூபிக்கப்படவில்லை என்றுதான் தீர்ப்பு வந்திருக்கிறது," என்கிறார் மணி பழனிச்சாமி எனும் பிபிசி தமிழ் நேயர்.

"2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு என ஒரு அனுமானத்தின் பெயரில் பல்லாயிரங்கோடி இமாலய அளவில் ஊழல் என்று கூச்சலிட்டு இந்திய அரசியலில் திருப்புமுனையாக மாற்றி ஆட்சி அரியணையில் ஏறியவர் 3ஜி, 4ஜி ஒதுக்கீடு உரிமத்தை விற்றது என்னவோ குறைந்த விலைக்குத்தான். 2ஜி வழக்கின் மேல்முறையீடு செய்வதோடு சேர்த்து 3ஜி, 4ஜி ஒதுக்கீடு ஒப்புமையோடு விசாரணை செய்தால் கூடுதல் விவரம் உண்மையோடு வெளிவரும்," என்று பதிவிட்டுள்ளார் சக்தி சரவணன்.

"கூட்டணில இருந்த அமைச்சரை பொய் வழக்கில் கைது செய்த காங்கிரசுடன் கூட்டணியா ? உடன்பிறப்பே இதெல்லாம் எவ்வளவு கேவலம்?" என்று எள்ளலாக கேள்வி எழுப்புகிறார் சுரேஷ் குமார்.

"திமுக வையும் காங்கிஸையும் சிக்க வைக்க சு.சாமி மூலம் கச்சிதமாக பின்னப்பட்ட வலை. ஆதாயம் பெற்றவர்கள் ஜெ மற்றும் பாஜக. ஊதிப் பெரிதாக்கிய பெருமை ஊடகங்களையே சேரும்." என்கிறார் ஷியான் எனும் பெயரில் ஃபேஸ்புக்கில் பதிவிடும் நேயர்.

"இந்த வழக்கில் எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பது நினைவிருக்கிறதா?" என்கிறார் மனோஜ் குமார்.

"முந்தைய மத்திய அரசை அவதூறு பரப்பியது, பாராளுமன்ற கூட்டத் தொடர்களை நடத்த விடாமல் செய்தது, நாட்டில் பொது மக்களிடையே அவதூறு பரப்பியது மேலும் பற்பல நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் தூண்டப்பட்டவர்கள் மீது இத்தீர்ப்பின் வாயிலாக சட்டத்தினால் தண்டிக்க முடியுமா?" என்கிறார் அங்குராஜ் கண்ணன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :