உங்கள் பொதுவாழ்வை கொச்சைப்படுத்தியவர்களை தண்டிப்பது யார்? கருணாநிதிக்கு ராசா கடிதம்

உங்கள் பொதுவாழ்வை கொச்சைப்படுத்தியவர்களை தண்டிப்பது யார்? கருணாநிதிக்கு ராசா கடிதம்

பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதையடுத்து, திமுக தலைவர் மு.கருணாநிதிக்கு நன்றி கூறும் விதமாக உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

தனக்குவமையில்லா தலைவர் கலைஞர் என்று தொடங்கும் அந்த கடிதத்தில், அலைவரிசைப் புயலின் கோரத்தாக்குதல் தனிமனிதர்களை மட்டுமுல்ல, தத்துவார்த்தமுள்ள ஓர் இயக்கத்தையும் களங்கப்படுத்தியது என்றும், கலைஞருக்கு களங்கம் ஏற்படுத்த நினைத்தவர்களுக்கு இந்த அலைவரிசை அரசியல் எப்படியெல்லாம் கைகொடுத்தது என்றும் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

''பொய்களோடு போராடுவதும் உண்மையை தேடுவதும் சில நேரங்களில் வெவ்வேறானவை'' என்ற ஓஷோவின் வரிகளை சுட்டிக்காட்டிய ராசா, அலைவரிசை வணிகத்தில் சிலரின் மூலதன முதலீடுகள் முற்றிலுமாய் இன்று நட்டத்தில் முடிந்துவிட்டன என்கிறார்.

தனி மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்ட அலைக்கற்றை தாக்குதல்

2ஜி வழக்கில் மத்திய கண்காணிப்பு ஆணையம், மத்திய புலனாய்வு நிறுவனம், நாடாளுமன்ற கூட்டுக் குழு மற்றும் உச்ச நீதிமன்றம் உள்ளிட்டவற்றை சாடும் ஆ.ராசா, அலைக்கற்றை தாக்குதல் தனி மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டு இந்நிறுவனங்களால் நிகழ்த்தப்பட்டதாகவும், இந்நிறுவனங்கள் தொடுத்த தாக்குதல்கள் நிர்வாக அமைப்பு முறையில் இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகிற்கே புதியதுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸை விளாசிய ஆ.ராசா

பட மூலாதாரம், MANPREET ROMANA

2ஜி வழக்கில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செயல்பட்ட விதத்தை கடிதத்தில் கடுமையாக சாடியுள்ளார் ஆ.ராசா. கூட்டணி அரசை வீழ்த்த நடத்தப்பட்ட சதியில் அலைவரிசை விவகாரம் அகப்பட்டுக் கொண்டதை அரசே அறியாமல் போனதுதான் அந்த ஆட்சியின் அவலம் என்றும், உளவுத்துறை தன்வசமிருந்தும் இதை உணரமுடியாத நிலையில் நிலைதடுமாற்றத்தில் இருந்ததாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அலைவரிசை இருப்பையே மறைத்து வைத்து ஏகபோகமாக அனுபவித்து கொண்டிருந்த கூட்டு வல்லாண்மையை தான் தகர்த்ததாகவும், ஆனால் தன்னை குற்றவாளி என்று கூறி சிறைக்கு அனுப்பிய விசித்திரம் இந்த தேசத்தில் மட்டும்தான் நடக்கும் என்றும் அதில் கூறியுள்ளார்.

கருணாநிதியின் பொதுவாழ்வை கொச்சைப்படுத்தியவர்களை யார் தண்டிப்பது?

பட மூலாதாரம், Getty Images

தன் சிறைவாசம் பற்றி குறிப்பிடும் ஆ.ராசா, சிறைவாசத்தால் மனதளவில் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்துண்டு என்றும், ஆனால் 1,76,000 கோடி ரூபாய் நஷ்டம் என்று கணக்கு சொல்லி கலைஞரின் 80 ஆண்டுகால பொதுவாழ்வை கொச்சைப்படுத்திய 'எச்சில் சிந்தனை'யாளருக்கு யார் தண்டனை வழங்குவது என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

சில இந்திய ஊடகங்கள் அலைவரிசை மீது காட்டிய 'அருவருப்பு அக்கறைக்கு' பின்னால் இருக்கும் சமூகப் பார்வையை சாமானியர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறும் ராசா, இடதுசாரிகள் குறித்து குறிப்பிடும்போது, அலைவரிசை அரசியலை தனியுடமை ஆக்கிக் கொண்டு தடந்தோள் தட்டியது இன்னுமொரு தாளமுடியாத தத்துவசோகம் என்கிறார் அவர்.

அறியாமை-புரியாமை-தெரியாமை

2ஜி அலைவரிசை பிரச்சனையில் புலனாய்வு மற்றும் நிர்வாக விசாரணைகளை நடத்திய நிறுவனங்களில் சிலவற்றின் அறியாமை-புரியாமை-தெரியாமை, சிலவற்றின் சூழ்ச்சி மற்றும் வஞ்சகம் இந்திய நிர்வாக அமைப்பு மீதும், நீதித்துறை மீதும் படிந்து போன கறைகள் என்றும், இங்கு குறைகூறிய எவருக்கும் நெஞ்சம் என்ற ஒன்றே இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

காலடியில் தீர்ப்பை வைத்து வணங்குகிறேன்

2ஜி வழக்கு தீர்ப்புக்காக டெல்லி புறப்படுவதற்குமுன் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த தருணத்தை பற்றி கடிதத்தில் விளக்கும் ஆ.ராசா, கருணாநிதி காதருகே சென்று தான் டெல்லி செல்லயிருப்பதாகவும், தீர்ப்பில் வெற்றி பெற வாழ்த்த கோரி கேட்டதாகவும் கூறுகிறார் அவர்.

கருணாநிதி தனது வலதுகரத்தை உயர்த்தி ஆ.ராசாவை புன்னகையோடு வாழ்த்தியதாகவும், அந்த வாழ்த்துக்கும் புன்னகைக்கும் முன்னால் இந்த பிரபஞ்சமே சுருங்கி விட்டதாகவே தனக்கு தோன்றுவதாகவும் கடித்ததில் ராசா தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :