ஐந்து ஆண்களை மணந்த மகாபாரத 'திரெளபதி' உலகின் முதல் பெண்ணியவாதியா?

  • சிந்துவாசினி
  • பிபிசி

திரெளபதிதான் உலகின் முதல் பெண்ணியவாதி என்று சொல்லும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் ராம் மாதவ், திரெளபதின் பிடிவாதமே மகாபாரத போருக்கு காரணம் என்று கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

பட மூலாதாரம், STAR PLUS/YOU TUBE GRAB

'ஐந்து ஆண்களுக்கு மனைவியான பாஞ்சாலி தனது கணவர்கள் எவரின் பேச்சையும் கேட்டதில்லை, தனது அன்புத் தோழன் கண்ணனின் பேச்சை மட்டுமே கேட்டு நடந்தவர்'.

இதைச் சொன்னவர் பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் ராம் மாதவ். திரெளபதி தான் உலகின் முதல் பெண்ணியவாதி என்கிறார்.

திரெளபதின் பிடிவாதமே மகாபாரத போருக்கு காரணம் என்கிறார் அவர். அந்தப் போரில் 18 லட்சம் பேர் மாண்டனர் என்கிறது மகாபாரதம்.

ராம் மாதவின் இந்தக் கருத்து மக்களிடையே, சமூக ஊடகங்களில் பரவலான விவாதங்களை தூண்டிவிட்டது. எதிர் கருத்துகள் மட்டுமல்ல ஆதரவு கருத்துகளையும் பார்க்க முடிகிறது.

உண்மையில் திரெளபதி பெண்ணியவாதியா? பெண்ணியவாதியின் அடையாளம் என்பது கணவனின் பேச்சைக் கேட்காமல் இருப்பதா?

பட மூலாதாரம், Twitter

'What draupati did to feed ten thousand sages' என்ற புத்தகத்தை எழுதிய அனிதா நாயர் இதுபற்றி என்ன சொல்கிறார்?

"சமத்துவமின்மை மற்றும் அநியாயத்திற்கு உட்படுத்தப்படும் பெண்களின் பிரதிநிதி பாஞ்சாலி". "பொதுவாக பெண்களுக்கு பாதுகாப்பு கொடுத்து அவர்களை காப்பவர் கணவர். ஆனால் நிறைந்த சபையில் பஞ்சாலியின் ஆடைகள் அவிழ்க்கப்பட்டு அவமானப்படுத்த முயற்சிகள் நடைபெற்றபோது, அங்கு அமர்ந்திருந்த அவளின் ஒன்றல்ல ஐந்து கணவன்களும் தங்களது கடமைகளை செய்தார்களா?"

"சூழ்நிலைகளால் வஞ்சிக்கப்பட்டவள் திரெளபதி" என்கிறார் அனிதா நாயர். தனது உணர்வை, உணர்ச்சிகளை விருப்பத்தை, எதிர்ப்பை வெளிப்படுத்த சந்தர்பம் கிடைக்காத தங்கக்கூண்டு கிளி பாஞ்சாலி".

காணொளிக் குறிப்பு,

உருவத்தை கிண்டல் செய்பவர்களுக்கு ஒரு நடிகையின் பதிலடி

உண்மையில் திரெளபதி பெண்ணியவாதி என்று சொல்லமுடியாது. தன்னுடைய விருப்பத்தின் பேரிலா ஐந்து சகோதரர்களை மணந்தார் பாஞ்சாலி?

உண்மையில் சுயம்வரத்தில் பாஞ்சாலி மாலையிட்டு மணாளனாக தேர்ந்தெடுத்தது வில்லாளி அர்ஜுனனை மட்டுமே. அவன் அர்ஜுனன் என்பதுகூட அப்போது அந்த பாஞ்சால நாட்டு இளவரசிக்கு தெரியாது.

ஐந்து ஆண்களை திரெளபதியின் திருமணம் செய்து கொண்டது பற்றி மகாபாரதத்தில் இரண்டு கதைகள் உள்ளன. சுயம்வரத்தில் வெற்றிபெற்ற அர்ஜுனன் பாஞ்சாலியுடனும் தன் சகோதரர்களுடனும் தாயிடம் வந்தபோது, அர்ஜுனன் அழைத்துவந்தது பெண் என்றே தெரியாமல் 'ஐவரும் பகிர்ந்து கொள்ளுங்கள்' என்று உத்தரவிட்டார்.

பட மூலாதாரம், Twitter

படக்குறிப்பு,

அனிதா நாயர்

மாமியாரின் ஒற்றை வாக்கை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் ஐவருக்கு மாலையிட்டு 'பாஞ்சாலி' ஆனாள் திரெளபதி.

மற்றொரு கதையின்படி, முற்பிறவியில் தவம் இருந்து சிவனிடம் வரம் கேட்ட திரெளபதி, 'எல்லா சிறப்புகளும், திறமைகளையும் கொண்ட கணவர் வேண்டும்' என்று கோரினாராம்.

"உலகில் எந்தவொரு மனிதனிடமும் எல்லா சிறப்புகளும், திறமைகளும் இருக்காது, எனவே உலகில் சிறந்த பண்புகளையும், திறமையையும் பெற்ற ஐவரை மணக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது".

அதாவது திரெளபதி பெற்ற வரமே அவருக்கு சாபமானது என்று சொல்லலாமா?

திரெளபதி ஐந்து கணவர்களுடன் ஒரே நேரத்தில் வாழவில்லை. ஆண்டுக்கு ஒரு கணவர் என்று சுழற்சி முறையில் வாழ்ந்தார். ஆனால் அவளுக்கு விருப்பமான கணவருடன் வாழமுடியாது.

அதுமட்டுமா? மகாபாரதத்தில் குறிப்பிட்டுள்ளபடி, ஒரு கணவனுடன் வாழ்ந்த பிறகு அடுத்த கணவருடன் செல்வதற்கு முன்பு மீண்டும் அவரது கன்னித்தன்மை மீண்டுவிடும்! அதாவது அவளது 'கற்பு' பாதுகாக்கப்படும். ஆனால், பல தாரங்களை மணந்துகொண்ட பாண்டவர்களுக்கு எந்தவித மாற்றமும் இல்லை.

பட மூலாதாரம், Twitter

படக்குறிப்பு,

த்ரிஷா தாஸ்

திரெளபதி பெண்ணியவாதி என்பதற்கு ராம் மாதவ் கூறும் காரணம் அபத்தமானது ஆபத்தானது, வேடிக்கையானது என்கிறார் அனிதா. ஒன்றுக்கு மேற்பட்டவர்களை தேர்ந்தெடுப்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் திரெளபதி தனது ஆசைப்படியா ஒன்றுக்கு அதிகமானவர்களை மணந்தார்? ஐந்து கணவர்கள் என்பது திரெளபதியின் மீது சுமத்தப்பட்ட சுமை.

பெண்ணியவாதிகள் என்றால் கொடூரமானவர்கள், நியாயமற்றவர்கள் என்று கூறுகிறாரா ராம் மாதவ்? என்று சிரித்துக்கொண்டே கேட்கிறார் அனிதா நாயர்.

ஆண்களுக்கு சமமான மனித பிறவிகளே பெண்கள் என்பதை வலியுறுத்துகிறார்கள் பெண்ணியவாதிகள். இதை புரிந்துக் கொள்ளவேண்டும். பெண்களை சக மனிதர்களாக பாருங்கள். அவர்களை உயர்த்தியோ தாழ்த்தியோ பார்க்கவேண்டாம்.

பட மூலாதாரம், B.R CHOPRA & RAVI CHOPRA

அதுமட்டுமல்ல, இதிகாசங்கள், புராணங்கள், கதைகள், கற்பனைக்கதைகள் ஆகியவற்றிற்கு இடையேயான வித்தியாசங்களையும் புரிந்துக் கொள்ளவேண்டும்.

'மிஸ் திரெளபதி குரு' என்ற புத்தகத்தை எழுதிய த்ரிஷா தாஸ் மகாபாரத போருக்கு திரெளபதி காரணம் என்ற கருத்தை வன்மையாக கண்டிக்கிறார்.

பிபிசியிடம் பேசிய அவர், "குடும்ப சொத்து, ஆட்சி உரிமை, அதிகார போட்டி, ஆண்களின் அகங்காரம் ஆகியவையே மகாபாரத போருக்கு காரணம், பாஞ்சாலியோ அல்லது வேறு எந்த பெண்ணோ இந்தப் போருக்கு காரணமில்லை" என்று சொல்கிறார்.

பட மூலாதாரம், Getty Images

திரெளபதியை மகாபாரத போருக்கு காரணமாக கூறுவது பாதிக்கப்பவரையே குற்றவாளி என்று கூறுவதற்கு சமமானது என்று அவர் சாடுகிறார்.

கெளரவர் மற்றும் பாண்டவர்களிடையே பகடையாக பயன்படுத்தப்பட்டவர் பாஞ்சாலி. திரெளபதியை திருமணம் செயவதற்கு முன்பே கெளரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே பங்காளிச்சண்டை பகைமையாக மாறியிருந்தது.

மனஉறுதியும் மனோதிடமும் கொண்டவர் திரெளபதி என்பதை ஒப்புக்கொள்ளும் த்ரிஷா, மகாபாரத போருக்கு காரணம் பாஞ்சாலியே என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று புறந்தள்ளுகிறார்.

மகாபாரத போருக்கு காரணம் யார் என்ற வாத விவாதங்கள் தொடர்ந்து சொற்போராக நீளும். கண்ணன் என்ற தோழனின் பேச்சை திரெளபதி கேட்டது அவர் கடவுள் என்பதால்தான் என்றும் அந்த சொற்போரின் வரம்புகள் இறுதியில் அடங்கிவிடும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :