வாழ்த்த கட்டிப்பிடித்ததால் நீக்கப்பட்ட மாணவர்கள்: பாலினம் கடந்த நட்பு ஒரு பாவச் செயலா?

கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள புனித தாமஸ் மத்திய பள்ளியைச் சேர்ந்த 16 வயது மாணவர் ஒருவர் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பாகப் பாடிய தனது 15 வயதாகும் பள்ளித் தோழியைப் பாராட்டும் விதமாகக் கட்டியணைத்ததால், அந்த மாணவர், மாணவி ஆகிய இருவருமே பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

கேரளா

வாழ்த்து தெரிவிப்பதற்காகத்தான் கட்டிப்பிடித்ததாகவும் இதில் வேறு எந்த நோக்கமும் இல்லை என்கிறார் அந்த மாணவர். "கெளரவமாக நடத்தும் பாதுகாப்பான சூழல் கொண்ட ஒரு நல்ல பள்ளியில் நான் படிக்க விரும்புகிறேன். எனது கல்வியுரிமையையும் தனியுரிமையையும் இந்த பள்ளி மீறிவிட்டது'' என்று அந்த மாணவி கூறியுள்ளார்.

'ஒழுக்க சீர்கேடு என்று கூறி அவர்களை வெளியேற்றிய பள்ளியின் நடவடிக்கை சரியா? வாழ்த்துவதற்காக மாணவியை கட்டிப்பிடித்த மாணவனின் செயல் சரியா?' என்று பிபிசி தமிழின் சமூக வலைத்தள நேயர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்கள் பதிவிட்ட கருத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றைத் தொகுத்து வழங்குகிறோம்.

"பள்ளிகளில் ஒழுக்கம் மிகவும் முக்கியம், நமது கலாச்சாரத்தை விட்டுக்கொடுக்க முடியாது. மாணவர்களை தற்காலிகமாக,நீக்கியிருக்கலாம், நிரந்தரமாக இல்லை," என்று கூறியுள்ளார் சரோஜா பாலசுப்பிரமணியன்.

"இது போன்ற செயல்கள் நாகரீக சமூகத்தில் தவறில்லை என்ற கருத்துக்களை விதைப்பதன் விளைவால் தான் பாலியல் கொடுமைகள் பச்சிளம் சிறுமிகள் வரை கட்டவிழ்த்து விடப்படுகிறது," என்கிறார் யாழினி ராஜ்குமார்.

"நாங்கள் படிக்கும்போது மாணவிகள் மூச்சுக் காற்றுகூடப் படாது," என்று தன் அனுபவத்தை பதிவிட்டுள்ளார் விழல்-விழல் எனும் பெயரில் ஃபேஸ்புக்கில் பதிவிடும் நேயர்.

"எங்களையேல்லாம் பேசவே விடமாட்டாங்க," என்று அதே போன்றதொரு கருத்தைப் பதிவிட்டுள்ளார் முரளி மதுரை எனும் ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்.

"எவையெவை நல்லொழுக்கம், எவையெவை நம் கலாச்சார மரபு, ஆண் பெண் பாலின் சமநிலை வரம்பு எது, நல்வாழ்வுக்கு உகந்தது எது, எவ்வாறு ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொள்வது, எவ்வாறு தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது, எப்படி பிறர்நலம் பேணுவது, எப்படி சமூகத்துடன் ஒப்புரவு கொள்வது போன்ற வாழ்வியல் கல்வியை கற்பிக்காத கல்வி நிறுவனங்கள் மாணவ மாணவியரிடம் அதனை எதிர்பார்ப்பதும் தண்டிப்பதும் அவரவர் சுயவிளம்பர அதிகாரத்தன்மையையே வெளிப்படுத்துகிறது," என்று பதிவிட்டுள்ளார் சக்தி சரவணன் எனும் பிபிசி தமிழ் நேயர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :