முத்தலாக் சட்ட வரைவு: முஸ்லிம் பெண்கள் கேட்டது கிடைத்ததா?

  • சரோஜ் சிங்
  • பிபிசி இந்தி
முத்தலாக்: கேட்டது கிடைக்கவில்லை!

பட மூலாதாரம், Getty Images

"எனது ஆறு ஆண்டு திருமண வாழ்க்கையில் மூன்று குழந்தைகளுக்கு தாயாகிவிட்டேன். ஆனால் இப்போது கணவருடன் வாழவில்லை."

முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல் இதைக் கூறுகிறார் 27 வயது ரேஷ்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வருத்தமோ, ஆத்திரமோ எந்த உணர்ச்சியும் இல்லாமல் இதை ஒரு தகவலாக தெரிவிக்கும் அவரின் முகத்தில் எதிர்காலம் பற்றிய கவலை படிந்து போயிருக்கிறது.

கணவரை ரேஷ்மா விலக்கினாரா? கணவர் அவரை ஒதுக்கினாரா? இந்தக் கேள்விக்கு எதிர்கேள்வி தொடுக்கும் அவர், "இரண்டிற்கும் எதாவது வித்தியாசம் இருக்கிறதா என்ன? ஆனால் அவர் இதுவரை எனக்கு தலாக்கும் கொடுக்கவில்லை" என்கிறார்.

தலாக் கொடுப்பது ஒரு விதத்தில் இஸ்லாமிய பெண்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்துகிறது என்றால் தலாக் கொடுக்காமல் கணவன் பிரிந்து வாழ்வதும் வேறுவிதமான சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார் ரேஷ்மா. உத்தரப்பிரதேசம் பாந்தாவை சேர்ந்த அவர் தற்போது டெல்லியில் வசிக்கிறார்.

பட மூலாதாரம், EPA

புதிய சட்டத்தின்படி பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறதா?

"தலாக் சொல்லாமலேயே கணவன் கைவிட்டுச் சென்றால், அரசின் புதிய சட்டத்தில் அதற்கு ஏதாவது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதா?" என்ற கேள்வியை அரசின் முன்வைக்கிறார் ரேஷ்மா.

இஸ்லாமிய விவாகரத்து நடைமுறையான முத்தலாக் அங்கீகாரமற்றது என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. முத்தலாக் முறை தொடர்பாக மத்திய அரசு ஆறு மாதங்களுக்குள் சட்டம் இயற்றவேண்டும் எனவும் அறிவுறுத்தியது.

முஸ்லிம் பெண்கள் திருமணப் பாதுகாப்பு மற்றும் உரிமை மசோதா நடப்பு நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த வரைவு மசோதாவுக்கு ஆட்சேபனை எழுப்பும் சில முஸ்லிம் பெண்கள் அமைப்புகளைப்போலவே, ரேஷ்மாவும் சில கேள்விகளை எழுப்புகிறார்.

'பெபேக் கலெக்டிவ்' என்ற மும்பையை சேர்ந்த முஸ்லிம் மகளிர் அமைப்பின் கருத்துப்படி, இந்த மசோதா பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதற்கு பதில் அவர்களை மேலும் பலவீனப்படுத்தும்.

புதிய மசோதாவின் குறைகளை சுட்டிக்காட்டுகிறார் 'பெபேக் கலெக்டிவ்'அமைப்பை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் இந்திர ஜெய்சிங்.

முத்தலாக்கை சட்டவிரோதமாக்கும் புதிய மசோதா

நான்கு பக்கங்கள் கொண்ட வரைவு மசோதாவின் நகலை படிக்கும் இந்திர ஜெய்சிங், "முஸ்லிம் பெண்கள் திருமணப் பாதுகாப்பு மற்றும் உரிமை மசோதா, முத்தலாக் நடைமுறையை சட்டவிரோதம் என்று ஒருபுறத்தில் சொன்னாலும், மறுபுறத்தில் இஸ்லாமிய பெண்களுக்கு ஜீவனாம்சம் கொடுப்பதைப் பற்றி பேசுகிறது. இவை இரண்டுமே ஒரே நேரத்தில் எப்படி சரியாக இருக்கமுடியும்?" என்று கேள்வி எழுப்புகிறார்.

அவசரகதியில் இந்த மசோதாவை தயாரித்திருப்பதாக மத்திய அரசு மேல் குற்றம் சுமத்தும் இந்திரா ஜெய்சிங், "நீதிமன்றத்தில் முத்தலாக் பற்றிய விவாதத்தின்போது, முஸ்லிம் பெண்களுக்கு சம உரிமை கொடுப்பது மற்றும் மரியாதையை பெற்றுக்கொடுப்பது பற்றி பேசப்பட்டது. ஆனால், மத்திய அரசோ, தலாக் கூறி விவாகரத்து செய்யும் கணவனை சிறைக்கு அனுப்புவதாக முடிவெடுத்தால், திருமணம் என்ற பந்தமே நிலைக்காது. பிறகு எங்கிருந்து உரிமையும், மரியாதையும் கிடைக்கும்?" என்று நிதர்சனத்தை கேள்விக்கணையாக தொடுக்கிறார்.

மசோதா உள்ளடக்கம்

இந்திரா ஜெய்சிங் கருத்துப்படி வரைவு மசோதாவில் இருப்பவை:

  • முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் கணவருக்கு மூன்றாண்டு சிறைதண்டனை விதிக்கப்படும்.
  • முத்தலாக் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றம்.
  • முத்தலாக் மூலம் விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணின் ஜீவனாம்சம் பற்றி நீதிபதியின் முடிவே இறுதியானது.
  • முத்தலாக் மூலம் விவாகரத்து செய்யப்படும் பெண்ணிடமே, மைனர் குழந்தைகளின் பொறுப்பு ஒப்படைக்கப்படும்.

பட மூலாதாரம், Getty Images

'பெபேக் கலெக்டிவ்' பெண்கள் அமைப்பு இந்த வரைவு மசோதாவில் உள்ள பல குறைபாடுகளை சுட்டிக்காட்டுகிறது.

முத்தலாக்கை எதிர்த்து சட்ட உதவியை எதிர்பார்க்கும் பெண் கணவருடன் வாழ்வதற்காகவும், பொருளாதார பாதுகாப்புக்காகவுமே நீதிமன்றத்தின் ஆதரவை நாடுகிறார். ஆனால் கணவனை சிறைக்கு அனுப்பினால் அந்த பெண்ணுக்கு தேவைப்படும் இரண்டு அடிப்படை ஆதரவுமே கேள்விக்குறியாகிவிடும்.

  • திருமணம் ஒரு சமூக ஒப்பந்தம் என்னும்போது, திருமணத்தை முறித்துக் கொள்ளும்போது குற்றவியல் வழக்கு தொடுக்கப்படுவது ஏன்?
  • இந்த வரைவு மசோதாவில் 'நிகாஹ் ஹலாலா' (விவாகரத்து செய்து கொண்ட தம்பதிகள் மீண்டும் திருமணம் செய்து கொள்ளவேண்டுமானால், மனைவி வேறொரு ஆணை திருமணம் செய்துக் கொண்டு, அவரிடம் இருந்து விவாகரத்து பெறவேண்டும். அதன்பிறகு, முதல் கணவரை மீண்டும் திருமணம் செய்துக் கொள்ளலாம். இது சுன்னி முஸ்லிம் பிரிவினரிடையே காணப்படும் பழக்கம்), பலதார திருமணம், மற்றும் பிற வகை விவாகரத்து முறைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
  • முத்தலாக் கூறி விவாகரத்து செய்த கணவன் சிறைக்கு சென்றுவிட்டால், வாழ்வாதாரத்திற்கான ஜீவனாம்சத் தொகையை யார் கொடுப்பார்கள் என்பது பற்றி வரைவு மசோதாவில் குறிப்பிடப்படவில்லை. சிறையில் இருக்கும் கணவர் அல்லது கணவரின் குடும்பத்தினர் அல்லது அரசு என யார் ஜீவான்ம்சம் கொடுப்பார்கள் என்பது தெரியாமல் ஜீவனாம்சத்தை எப்படி நிர்ணயிப்பது?
  • பிரிய நினைக்கும் கணவன் முத்தலாக் சொன்னால்தானே பிரச்சனை என்று சொல்லாமலேயே பிரிந்து சென்றுவிட்டால், அது குறித்து இந்த சட்ட வரைவு என்ன நடவடிக்கை எடுக்கும்?

பட மூலாதாரம், Getty Images

முத்தலாக் சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது

முஸ்லிம்கள் விவாகரத்து செய்ய கடைபிடிக்கும் முத்தலாக் நடைமுறை, அரசியல் சட்டவிரோதமானது என்று இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது. குறுஞ்செய்திகள், மின்னஞ்சல், தொலைபேசி அழைப்புகள் மூலமும் விவாகரத்து செய்யமுடியாது என்று அரசியல் சாசன அமர்வு உறுதிபடுத்தியது. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் வகையில் மத்திய அரசு சட்ட வரைவை முன்வைத்துள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான பிறகும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து முத்தலாக் தொடர்பாக 66 வழக்குகள் பதிவாகியுள்ளதாக நாடாளுமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் கருத்துப்படி, முத்தலாக் பிரச்சினை என்பது நம்பிக்கை மற்றும் மத சம்பந்தமான பிரச்சினை அல்ல, பாலின நீதி, பாலின சமத்துவம் மற்றும் பெண்ணின் கெளரவம், மனித உணர்வுகள் தொடர்பானது.

பட மூலாதாரம், AFP

'குரான் அடிப்படையிலான குடும்பச் சட்டம்'

இந்த வரைவு மசோதா பற்றிய வேறொரு கண்ணோட்டத்தை சொல்கிறது மற்றொரு இஸ்லாமிய பெண்கள் அமைப்பான இந்திய முஸ்லிம் மகளிர் அமைப்பு.

அந்த அமைப்பின் தலைவர் ஜாகியா சோமன் புதிய வரைவு மசோதாவை வரவேற்கிறார். ஆனால் அதேநேரத்தில் இன்னும் சற்று மேம்பட்டு இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவர் கருத்து கூறுகிறார்.

"குரானை அடிப்படையாகக் கொண்டு குடும்ப சட்டம் இயற்றப்படவேண்டும். மத்திய அரசின் புதிய வரைவு மசோதாவை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் உரிமை கணவன் மனைவி இருவருக்கும் இருக்கவேண்டும். மூன்று முறை தலாக் சொல்வதற்கான காலகட்டமும் 90 நாட்கள் என்பது உறுதி செய்யப்படவேண்டும். அதேபோல் நிகாஹ் ஹலாலா, பலதார மணம் பற்றியும் சட்டம் கவனத்தில் கொள்ளவேண்டும்."

"ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்துகொள்வது சட்டத்திற்கு விரோதமானது என்று அறிவிக்கப்படாவிட்டால், தலாக் சொல்லி விவாகரத்து செய்யாமலேயே ஆண் மற்றொரு திருமணம் செய்துகொண்டு, தண்டனையில் இருந்து தப்பிக்க வழி ஏற்படும்" என்ற அச்சத்தையும் வெளிப்படுத்துகிறார் இந்திய முஸ்லிம் மகளிர் அமைப்பின் தலைவர் ஜாகியா சோமன்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :