ராஜஸ்தானில் ஆற்றுக்குள் பேருந்து விழுந்ததில் 32 பேர் பலி

ராஜஸ்தானின் சவாய் மதோபூர் மாவட்டத்தில் பனாஸ் ஆற்றுக்கு சுமார் 100 அடிக்கு மேலே இருக்கும் பாலத்திலிருந்து இன்று அதிகாலை ஒரு தனியார் பேருந்து ஆற்றுக்குள் விழுந்ததில் குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டதாகவும் மற்றனைவரும் காயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்பு படம்

சவாய் மதோபூரிலிருந்து லல்சோட்டை நோக்கி சென்றுக் கொண்டிருந்த இந்த பேருந்து சோர்வல் காவல்நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியை இன்று அதிகாலை கடக்கும்போது விபத்தில் சிக்கியது.

பேருந்தின் கட்டுப்பாட்டை ஓட்டுநர் இழந்தவுடன் அது பாலத்தில் இருந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு ஆற்றுக்குள் விழுந்தது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த பேருந்தில் உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த மக்கள் பயணம் செய்தனர். அவர்களில் பலர் மலர்னா மாவட்டத்தில் உள்ள ஆலயத்தில் வழிபாட்டிற்காக சென்றுக் கொண்டிருந்ததாக சவாய் மதோபூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரான மம்மன் சிங் பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

பேருந்து ஆற்றுக்குள் மூழ்கியதில் அதன் ஓட்டுநர் உட்பட பெரும்பாலானோர் பலியானதாக அவர் கூறியுள்ளார்.

உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுவரை ஆற்றுக்குள் மூழ்கி இறந்த 32 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த ஐந்து பேர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் அவர் கூறினார். மேலும், பிரேத பரிசோதனைக்கு பின்னர் 10 பேரின் உடல்கள் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்