ஆ.ராசா, கனிமொழிக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு

ஆ.ராசா, மு.க.ஸ்டாலின்,கனிமொழி

2ஜி வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா ஆகியோர் தீர்ப்புக்கு பிறகு சென்னை திரும்பியவுடன், திமுக தலைவர் மு.கருணாநிதியின் இல்லத்தில் அவரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

2011ல் சிபிஐ தொடுத்த வழக்கில் கனிமொழியும், ராசாவும் ஊழல் செய்ததற்கான ஆதாரம் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து, சென்னை வந்த இருவரையும், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் டி.ஆர்.பாலு மற்றும் துரைமுருகன் ஆகியோர் சென்னை விமானநிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றனர்.

சென்னை நகரின் பல்வேறு இடங்களில் கனிமொழி மற்றும் ராசாவை வாழ்த்தி பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லதிற்கு வந்த இருவரையும் தொண்டர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். பெண்கள் குழுவினர் ஆடலுடன், பட்டாசு வெடித்து அவர்களின் வருகையைக் கொண்டாடினர்.

திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துவிட்டு வெளியே வந்த ஆ.ராசா, ''2ஜி வழக்கில் விடுதலை என்று கூறியபோது தலைவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து, கையை உயர்த்தி வாழ்த்தினார், புன்முறுவல் பூத்து, உணர்ச்சிவசப்பட்டு வாழ்த்தினார்,'' என்று தெரிவித்தார்.

இந்த வரவேற்புகள் பற்றி, அரசியல் விமர்சகர் ஞானியிடம் கேட்டபோது, 2ஜி வழக்கில் கனிமொழி திஹார் சிறையில் இருந்துவந்தபோதே, திமுகவினர் உற்சாகத்துடன் வரவேற்றனர் என்பதால், வழக்கில் இருந்து விடுதலை அடைந்திருப்பது அவர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நிகழ்வாக அமைந்துவிட்டது என்றார்.

''திமுகவினர் கொண்டாட்ட மனநிலையில் இருப்பதற்கு மேலும் ஒரு பலமான காரணமாக இந்த 2ஜி தீர்ப்பு அமைந்துவிட்டது. தீர்ப்பு வந்ததும் இருவருக்கும் அவர்களின் சொந்தக் கட்சியில் செல்வாக்கு கூடிவிட்டது என்பதில் சந்தேகம் இல்லை,'' என்று ஞானி கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :