11 ஆண்டுகளில் தமிழகத்தில் வென்ற முதல் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன்

டிசம்பர் 21-ஆம் தேதி ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 40707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள டிடிவி தினகரன், 2001-ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற முதல் சுயேச்சைவேட்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இதற்கு முன்னதாக 2006-ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தளி சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் ராமச்சந்திரன் வெற்றி பெற்றார்.

பின்னர் தமிழகத்தில் நடந்த எந்த சட்டமன்ற பொது தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் சுயேச்சை வேட்பாளர்கள் வென்றதில்லை. இந்நிலையில், 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சுயேச்சை வேட்பாளரான டிடிவி தினகரன் வென்றுள்ளார்.

2011-ஆம் ஆண்டு நடந்த தளி சட்டமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ராமச்சந்திரன் தேர்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கிய ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே சுயேச்சை வேட்பாளரான டிடிவி தினகரன் முன்னிலை வகித்து வந்தார்.

கடைசி சுற்றின் முடிவில் தினகரன் பெற்ற வாக்குகள் 89013. தினகரன் 40707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2016 தேர்தலில் ஜெயலலிதா பெற்ற வாக்குகளை விட கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றுள்ளார்.

இரண்டாவது இடத்தை பிடித்த ஆளும் அதிமுகவின் வேட்பாளரான மதுசூதனன் 48306 வாக்குகளையும், மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட திமுக வேட்பாளர் மருது கணேஷ் 24651 வாக்குகளையும் பெற்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்