"இளம்பெண்ணை உயிரோடு கொளுத்திய இளைஞர்" - ஏன் இந்த கொடூர மனநிலை?

சம்பவம் நடைபெற்ற இடத்தின் அருகே மரத்தில் வைக்கப்பட்டுள்ள சந்தியாவின் படம்
Image caption சம்பவம் நடைபெற்ற இடத்தின் அருகே மரத்தில் வைக்கப்பட்டுள்ள சந்தியாவின் படம்

"அக்கா, நான் இறக்க போகிறேன் என்று எனக்கு தெரியும். என் வயிறு எரிகிறது. ஆனால், தயவுசெய்து அவனை விட்டுவிடாதீர்கள். அவனுக்கு தண்டனை கிடைக்காமல் விட்டுவிடாதீர்கள்." 25 வயதான சந்தியா ராணி என்ற இளம்பெண்ணின் கடைசி வார்த்தைகளில் இதுவும் ஒன்று என்று பிபிசி நியூஸ் தெலுங்குவிடம் பேசிய அவரது சகோதரி சரிதா தெரிவித்தார்.

தன் திருமண விருப்பத்தை நிகராகரித்த சந்தியா மீது அந்த நபர் பெட்ரோல் ஊற்றி தீ பற்றவைத்ததில் எண்ணற்ற தீக்காயங்களுடன் போராடி அவர் உயிரிழந்தார். சந்தியா மற்றும் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ள கார்த்திக் வங்கா ஆகிய இருவரின் குடும்பத்தினரிடமும் பிபிசி செய்தியாளர் தீப்தி பத்தினி பேசினார்.

தெலங்கானா மாநிலத்தின் தென்பகுதியிலுள்ள செகந்திராபாத்தின் லாலாபேட்டில் உள்ள இரண்டு அறைகளை கொண்ட சந்தியாவின் வீடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

நாங்கள் நுழைவாயிலுக்குள் நுழையும்போது, சந்தியாவின் தாயாரான சாவித்ரி மடித்த கைகளுடன், "என் ராணியை பார்க்க வந்தீர்களா? அவள் இனி இல்லை. அவன் அவளைக் கொன்றுவிட்டான்." இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது இளைய மகளை இழந்த அந்தப் பெண் அருகிலிருந்த நாற்காலி அருகே விழுந்தார்.

சாவித்ரி தனது மூத்த மகள் சரிதாவை இறுதி சடங்கிற்காக தயார் செய்யப்பட்ட இறந்த சந்தியாவின் புகைப்படத்தை வெளியே கொண்டு வரும்படி கேட்டார். "பாருங்கள், என் மகளை பாருங்கள். அவள் எவ்வளவு அழகாக இருந்தாலென்று. அவன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டான். என் மகள் எவ்வளவு வேதனையை அனுபவித்திருப்பாள்... அவனை அப்படியே விட்டுவிடக் கூடாது."

Image caption கொலை செய்யப்பட்ட சந்தியாவின் குடும்பத்தினர்

மூன்று மகள்கள் மற்றும் மூன்று மகன்கள் என சாவித்ரிக்கு ஆறு குழந்தைகள் உள்ளனர். அதில் சந்தியாதான் இளையவர். லாலாபேட்டிற்கு அருகிலுள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்த சாவித்ரியின் கணவரான தாஸ், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் இறந்தார். அதன் பின்னர் குடும்பத்தின் நிதித் தேவையை பூர்த்தி செய்வதற்காக சந்தியா வேலைக்கு சென்று வந்தார்.

14 மாதங்களுக்கு முன்னர் தனது தற்போதைய பணியிடத்தில் சேர்வதற்கு முன்னர் அவர் வங்கியொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

"எனது சகோதரி வீட்டிற்கு தேவையான புதிய ஆடைகள் அல்லது மளிகைப் பொருட்கள் வாங்குவது என எல்லாவற்றையும் திட்டமிட்டு செயல்பட்டாள்" என்று தனது இளைய சகோதரி குறித்து அழுதுகொண்டே சரிதா கூறுகிறார்.

சந்தியா இதுபோன்ற தொந்தரவுகளை அனுபவித்து வருவதாக தங்களுக்கு தெரியாதென்று அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். "அவர் சந்திக்கும் தொந்தரவு பற்றி ஏதாவது எங்களுக்கு தெரிந்திருந்தால் இதுகுறித்து நாங்கள் ஏதாவது செய்திருப்போம். என் சகோதரி இதுகுறித்து எங்களிடம் கூறியிருந்தால் மட்டுமே இதை தவிர்த்திருக்க முடியும்" என்று அவரது சகோதரரான கிரண் கூறுகிறார்.

சந்தியாவின் பணியிடம்

சந்தியாவின் வீட்டிலிருந்து 15 நிமிட நடைபயணத்தில் உள்ள சிறிய நிறுவனம் அலுமினிய பொருட்களை உற்பத்தி செய்தது.

சந்தியா தினமும் காலை பத்தரை மணியளவில் அலுவலகத்திற்குச் சென்று, மாலையில் ஆறு முதல் ஆறரை மணிக்குள் நடந்தே வீட்டிற்கு பயணிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

Image caption சந்தியா பணிபுரிந்த நிறுவனம்

நேற்று சந்தியாவின் இறுதிச்சடங்குகள் நடந்ததால் எங்களால் வெள்ளிக்கிழமையன்று செய்யவேண்டிய பூஜையை செய்ய முடியாது என்பதால் இன்று செய்கிறோம்" என்று அந் நிறுவனத்தின் உரிமையாளரான ஜெகன் ரெட்டியின் சகோதரர் சிவா ரெட்டி கூறுகிறார்.

பூஜை முடிந்ததும் ஜெகன் நிறுவனத்தின் வரவேற்பறைக்கு அருகிலுள்ள ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டு, அங்கிருந்த ஒரு வெற்று நாற்காலியையும் கணினியையும் சுட்டிக்காட்டி, "இதுதான் சந்தியா அமருமிடம். நான் அவள் இல்லாமல் கை ஒடிந்ததைப் போன்று உணர்கிறேன். எங்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் மின்னஞ்சல்களுக்கான கடவுச்சொற்களை அறிந்தவர் அவர் மட்டும்தான். எங்கள் வாடிக்கையாளர்கள் பலரும் தங்கள் இரங்கலை வெளிப்படுத்துவதற்காக எங்களை தொடர்பு கொண்டனர்."

அந் நிறுவனத்தில் கணினி இயக்குபவராக சந்தியா பணிபுரிந்தார். சந்தியாவை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கார்த்திக் என்பவர் இதே நிறுவனத்தில் திறமையின்மையின் காரணமாக நீக்கப்படும் வரை பணிபுரிந்து வந்தார்.

"கார்த்திக் நான்கு மாதங்கள் மட்டுமே எங்களிடம் பணிபுரிந்தார். அவர் எங்களிடம் பணிக்கு சேர்ந்த முதல் மாதத்தில், அவர் தனக்கு ஒரு கணினி ஆபரேட்டர் வேலை செய்யும் பெண்ணொருவரை தெரியும் என்று கூறினார். பின்னர் அவர் எங்களிடம் சந்தியாவை பற்றி கூறினார். நாங்கள் அவரை வேலைக்கு தேர்ந்தெடுத்தோம். மேலும்,அவர் தன்னுடைய பணியை சிறப்பாக செய்தார். மூன்று மாதங்களுக்குப் பிறகு, கார்த்திக் நேரத்தை சரியாக கடைப்பிடித்து பணிபுரியாததால் அவரை வேலையிலிருந்து நீக்கிவிட்டோம்" என்று ஜெகன் கூறினார்.

நான்கு மாதங்களாக கார்த்திக் மற்றும் சந்தியா ஒன்றாக வேலை செய்திருந்தாலும், அந் நிறுவனத்தில் யாருக்கும் அவர்களை ஒருவருக்கொருவர் எப்படி தெரியுமென்று அறிந்திருக்கவில்லை. தான் கொலை செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் கார்த்திக்கை கட்டுப்படுத்த உதவக் கோரி சந்தியா ஜெகனை சந்தித்தார்.

கார்த்திக் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கட்டாயப்படுத்துவதாக சந்தியா தன் முதலாளியிடம் தெரிவித்தார். ஜெகன் கார்த்திக்கிடம் கண்டனம் தெரிவிப்பதற்காக அவரை அலுவலகத்திற்கு அழைத்தார். "கார்த்திக் மிகவும் குழப்பத்துடன் இருந்தார். பெண் ஆர்வம் காட்டாவிட்டால், அவளை பின்தொடர்வது தவறு என்பதை விளக்குவதற்கு நான் முயற்சித்தேன். சந்தியாவுக்கு என்னை பிடிக்கவில்லை என்றால், அவருக்கு நான் பரிசளித்த போனை ஏன் பயன்படுத்துகிறார் என்று அவர் கேட்டார்" என்று ஜெகன் சொல்கிறார்.

Image caption சந்தியா பணிபுரிந்த நிறுவனத்தின் உரிமையாளரான ஜெகன் ரெட்டி

அதற்கடுத்த நாள் டிசம்பர் 21, வியாழக்கிழமையன்று கார்த்திக் அளித்த மொபைல் போன் பற்றி சந்தியாவிடம் தான் கேட்டதாக ஜெகன் கூறுகிறார். அவர் சோகமாக காணப்பட்டதுடன், அந்த மொபைல் போனை தான் சொந்தமாக வாங்கியதாக சொன்னார். இருப்பினும், இந்த விடயத்தை தீர்ப்பதற்காக கார்த்திக்கிடம் கொடுக்குமாறு கூறிவிட்டு ஜெகனிடம் மொபைல் போனை கொடுத்துள்ளார் சந்தியா.

அன்று மாலையில், கார்த்திக்கிடமிருந்து ஜெகனுக்கு அழைப்பொன்று வந்தது. அப்போது பேசிய கார்த்திக், சந்தியாவிடமிருந்து ஏன் மொபைல் போனை எடுத்தீர்கள் என்று கேட்டார். இது அந்நிறுவன உரிமையாளரை குழப்பி விட்டது. "அந்த நேரத்தில் சந்தியா அவருடன் இருந்தாரா என்று எனக்கு தெரியாது. அவர் அங்கிருப்பதாக எனக்கு தெரிந்திருந்தால் அவரை காப்பாற்றுவதற்காக என் ஆட்களை அனுப்பியிருப்பேன் " என்று கூறுகிறார் ஜெகன்.

இருப்பினும், சந்தியாவுக்கு அவ்வேலை கிடைப்பதற்கு கார்த்திக் பரிந்துரைத்ததையும், அவருக்கு வேறு யாரோ மொபைல் போன் வாங்கி கொடுத்ததையும் அவரது சகோதரர் மறுக்கிறார். "என் சகோதரி தவணை முறையில் அந்த மொபைல் போனை வாங்கினார். மேலும், அவ்வேலை குறித்த தகவலை விளம்பரம் ஒன்றிலிருந்து பெற்று அவர்களை தொடர்பு கொண்டார். அவர்கள் சந்தியாவை வேலைக்கு அழைத்தபோது, நான் அவருடன் இருந்தேன். உண்மையற்ற விடயங்களை ஏன் கூறுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை."

கதையின் மற்றொரு பகுதி

சந்தியாவின் வீட்டில் இருந்து ஒரு சில தெருக்கள் தள்ளி அதே லாலாபேட்டின் இந்திரா நகர் பகுதியில் 28 வயதான கார்த்திக்கின் வீடு அமைந்துள்ளது. தற்போது அந்த வீடு பூட்டப்பட்டுள்ளது.

அச்சம்பவம் நடந்தேறிய நாளிலிருந்தே வீடு பூட்டப்பட்டிருப்பதாக அந்த வீட்டிற்கு எதிரில் உள்ள ஒரு கடையின் உரிமையாளர் கூறினார்.

"அதிர்ச்சியில் இருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை. அவர் கொடூரமானவர் போன்று இதுவரை செயல்பட்டதில்லை. அவரது குடும்பத்தினர் பொதுவாக அமைதியாகவே இருப்பார்கள்" என்று அவர்களது பக்கத்துக்கு வீட்டுக்காரர் ஒருவர் கூறுகிறார்.

கார்த்திக்கின் தாயான ஊர்மிளா, தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, தனது இருப்பிடத்தை தெரிவிக்கவியலாது என்றார்.

பெண்ணொருவரை தன் மகன் தொந்தரவு செய்தது அவரது தாயாருக்கு தெரியுமா?

"என் மகன் அவளை பைத்தியக்காரத்தனமாக காதலித்தான். அவள் அதை ஊக்கப்படுத்தாவிட்டால், என் மகன் அவளை எப்படி பின்தொடர்ந்திருப்பான்? இரண்டு வருடங்களுக்கும் மேலாக அவர்கள் ஒருவரையொருவர் அறிந்திருந்தார்கள். அவர்களிருவரும் ஒரு பேருந்து நிறுத்தத்தில் பேசுவதை கூட நான் பார்த்திருக்கிறேன். நான் அந்தப் பெண்ணைப் பற்றி என் மகனிடம் கேட்டேன். அவர் அப்பெண்ணை நேசிப்பதாகவும்,அவரை திருமணம் செய்துகொள்வதாகவும் கூறினார்."

Image caption பூட்டப்பட்டுள்ள கார்த்திக்கின் வீடு

சந்தியா மற்றும் கார்த்திக் இடையே நிலைமை எப்படி மோசமாகிவிட்டது என்பதை அவர் தொடர்ந்து விளக்கினார். 2016 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருவரும் சண்டையிட்டபோது, கார்த்திக் தனது வாழ்க்கையையே முடிவுக்கு கொண்டுவர முயற்சித்ததாக அவரது தாயார் கூறுகிறார்.

ஆதரவற்ற குரலில் பேசிய ஊர்மிளா, தனது கணவர் மதுபானத்துக்கு அடிமையானவர் என்றும், குடும்பத்தின் முன்னேற்றம் பற்றி அவர் கவலைப்படவே இல்லை என்றும் கூறினார். இதுவே கார்த்திக்கை அளவு மீறி செயல்பட வைத்தது.

"கார்த்திக் வேலைக்கு காலையிலேயே சென்றுவிட்டார். ஆனால், பிற்பகலில் கையில் ஒரு பீர் பாட்டிலுடன் திரும்பி வந்துவிட்டார். கடந்த ஒரு மாதத்தில் அவர் குடிப்பதை ஆரம்பித்தார். அவர் பீரை குடித்தபின் சுமார் ஐந்தரை மணியளவில் வேலையிலிருந்து சந்தியாவை அழைத்துக்கொண்டு அவரது வீட்டில் விட்டுவிட்டு வருவதாக கூறினார். அவர் ஒரு மணிநேரத்திற்கு பின்பும் வீடு திரும்பவில்லை என்பதால் நான் அவரை அழைத்தேன். அவர் தான் வந்துகொண்டே இருப்பதாக கூறினார். ஆனால், ஐந்து நிமிடங்களுக்குள் அவர் மீண்டும் என்னை தொடர்புக் கொண்டு, தான் சந்தியாவை பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டதாக கூறினார்."

கார்த்திக் சம்பவம் நடந்த தினத்தன்றே கைது செய்யப்பட்டார். அவர் மீது 302 ஐபிசி, 354 ஐபிசி, 354 (டி) ஐபிசி மற்றும் 1989ம் ஆண்டு எஸ்சி எஸ்டி பிஓஏவின் பிரிவு 3(ii)ன்படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஹைதராபாத்திலுள்ள சஞ்சல்பகுடா சிறைச்சாலைக்கு நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் சந்தியா மற்றும் கார்த்திக் வீடுகள் மற்றும் அலுவலகத்திலிருந்து ஒரு சில நிமிட தூரத்தில்தான் நடந்தது.

சம்பவம் நடந்தேறிய இடத்திலுள்ள ஒரு மரத்தில் கொடூரமான சம்பவத்தின் நினைவூட்டலாக சந்தியாவின் ஒரு புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது.

"நாங்கள் எங்கள் வீட்டில் இருந்தோம். நெருப்பை தொடர்ந்து பெருங்கதறலை பார்த்தோம். பெண் பற்றி எரியும் காட்சியை நாங்கள் வெளியே சென்று பார்த்தோம். விரைவில் கூடிய மக்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆம்புலன்ஸ் வந்து அவரை காந்தி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றது" என்று சம்பவம் நடந்தேறிய இடத்துக்கு அருகில் வசிக்கும் ஒருவர் கூறுகிறார்.

காந்தி பொது மருத்துவமனையில் சந்தியா பேசியதை ஒரு மாஜிஸ்திரேட் பதிவு செய்த அறிக்கையில், சந்தியா அவரது குடும்பத்துடன் உரையாடும் போது, தான் இறப்பதற்கு முன்பு "கார்த்திக்தான் என்னை இவ்வாறு செய்தார்" என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :