ஆர்.கே. நகர் ஆரவாரம்: அரியாசனத்துக்கு அச்சாரமா?

ஆர்.கே. நகர் ஆரவாரம்: அரியாசனத்துக்கு அச்சாரமா?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் வெற்றி பெற்றிருப்பது தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவதைவிட அ.இ.அ.தி.மு.கவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்; ஓர் இடைத்தேர்தல் பொதுவான அரசியல் போக்கை முடிவு செய்யக் கூடியதல்ல.

இடைத்தேர்தல்களில் வெற்றிபெறும் ஆளும் கட்சி பெரும்பாலும் பொதுத்தேர்தலில் அந்த சாதனையை நிகழ்த்துவது இல்லை என்பது கடந்த கால் நூற்றாண்டு வரலாறு

தினகரன் சுயேச்சை என்றாலும் அதிமுகவின் ஒரு பிரிவின் பிரதிநிதி என்றே சொல்லவேண்டும்

ஆட்சியும், இரட்டை இலையும் தங்கள் பக்கம் இருந்தும் 40707 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக தோற்றுள்ளது; தினகரன் வெற்றி சாதாரணமான நிகழ்வல்ல; அது சாதனைதான்; இதன் மூலம், எதிர்காலத்தில் அ.இ.அ.திமுகவுக்குள் யார் கை ஓங்குகிறது என்பதை கவனிக்க நேர்கிறது

தினகரனால் தான் தேர்தல் வெற்றியை ஈட்ட முடியும் என அ இ அதிமுக தொண்டர்கள் கருதுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது; இதனால் அக்கட்சியில் உள்ள சிலர் தினகரன் அணி பக்கம் தாவக்கூடும்.

இந்த நெருக்கடியை சமாளிக்க அஇஅதிமுக சமரசம் செய்துகொள்ள முன்வரலாம் அல்லது நிர்வாகத்தில் கவனம் செலுத்தி மக்களின் ஆதரவை பெற முயற்சிக்கலாம். அப்படி செய்தால் அஇஅதிமுக என்றும் தினகரன் அணி என்றும் இரு பிரிவுகள் இருப்பது உறுதியாகிவிடும். அதனால், இரு தரப்பு வாக்கு வங்கியிலும் சேதாரம் ஏற்படும்

தினகரன் வெற்றி காரணமாக பாரதிய ஜனதா தமிழக அரசியலில் பின்பற்றி வந்த உத்தியை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது; இரு தரப்பையும் ஒன்றாக சேர்த்தோ அல்லது தினகரனை பலவீனபடுத்தியோ ஆளும் அரசை தன் பக்கம் வைத்துக்கொள்ள பாரதிய ஜனதா முயற்சிக்கும். அ.இ.அ.தி.மு.க செல்வாக்கு மட்டுப்பட்டுவிட்டால் தேசிய அளவில் பாரதிய ஜனதாவுக்கு பாதிப்பு ஏற்படும். திமுக வெற்றி பெறுவதும் பாஜகவுக்கு எதிராக போய் முடியும்.

பல நெருக்கடிகளை தாண்டி தினகரன் வெற்றி பெற்றிருப்பது குறித்து 1972 திண்டுக்கல் இடைத்தேர்தல், 1989 மதுரை கிழக்கு, மருங்காபுரி தேர்தலோடு ஒப்பிட்டு சில அரசியல் நோக்கர்கள் பேசுகின்றனர்.

படத்தின் காப்புரிமை Twitter

அதிமுக பெரும்பாலும் எம்.ஜி.ஆரின் நட்சத்திர செல்வாக்கை நம்பி இருந்தது; அதேபோல் மக்களை ஈர்க்க எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவை பயன்படுத்தினார். அவர்களை போல் ஈர்ப்புசக்திகொண்ட தலைவர் அல்ல தினகரன்; ஆனால், அவரது பேச்சுத்திறன் ஊடகவியலாளர்களின் கேள்விகளை கையாளும் லாவகம் அவருக்கு மதிப்பை பெற்றுத்தந்தது; இதைக்கொண்டு ஆளுமைமிக்க பெரிய தலைவராக அவர் வளர்ந்துவிட்டார் என கணிக்க இயலாது.

மத்திய அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன; மத்திய அரசின் மீதான கோபத்தை பிரதிபலிக்கக்கூடிய தலைவராக தினகரனை ஆ.கே.நகர் மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என மதிப்பிடுவது மிகையான ஒன்று. அதிமுக தற்போது ஒரு வாக்குக்கு ரூ.6,000 தந்ததாகவும் தினகரன் தரப்பு ஒரு தொகையை தருவோம் என வாக்குறுதி தந்ததாகவும் தகவல்கள் வருகின்றன.

இச்சூழலில் பணநாயகம் வென்றது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வர்ணிக்கிறார். பண விநியோகம் என்ற விஷச்சுழலில் தமிழக அரசியல் சிக்கி தேர்தல்கள் கேலிக்கூத்தாக ஆக்கப்பட்டுவிட்டன. "இது திமுகவின் தோல்வியல்ல, தேர்தல் ஆணையத்தின் மாபெரும் தோல்வி" என்கிறார் மு.க.ஸ்டாலின்.

பணம் எங்கிருந்து வந்தது?

இந்தத் தேர்தலில் திமுக பண விநியோகம் செய்யவில்லை. எனினும் சில காலமாக அதிமுகவும் திமுகவும் மாறி மாறி வாக்காளர்களை விலைக்கு வாங்கி வந்துள்ளனர். இந்தப் பணம் எல்லாம் எங்கிருந்து வந்தது என்பதுதான் முக்கிய கேள்வி. அந்தப் பணம் ஊழலில் கிடைத்த பணம் என்பது மக்களுக்கு தெரியும். எந்த உறுத்தலும் இல்லாமல் மக்கள் அதை வாங்குகின்ற நிலையில் இருப்பதுதான் பெரிய அவலம்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தத் தேர்தலில் திமுகவும் தினகரனும் ரகசிய உடன்பாடு செய்துக்கொண்டனர் என ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். கூட்டறிக்கை குற்றம் சாட்டுகிறது. நேரடி உடன்பாடில்லை என்றாலும் திமுக இத்தேர்தலை ஏன் ஒரு கவுரவ பிரச்னையாக கருதவில்லை என்ற கேள்வி எழுப்பப்படுகிறது?

ஜெயலலிதா உயிரோடு இல்லாத காலத்தில் கூட - பிளவுபட்ட அதிமுகவுடன் மோதி மு.க.ஸ்டாலினால் ஒரு இடைத்தேர்தலில் வெற்றியை ஈட்ட முடியவில்லை என்ற செய்தி சாதாரண மக்கள் மத்தியில் திமுக குறித்த மரியாதையை குலைக்கும்.

உட்கட்சி பிரச்னையில் அதிமுகவுக்கு யார் தலைமை தாங்குவது என்பதற்கான தேர்தல் இது. இந்தத் தேர்தல் முடிவை வைத்து தினகரன் தலைமைக்கு மக்கள் அங்கீகாரம் என்ற முடிவுக்கு வர இயலாது.

காணொளி காரணமா?

ஜெயலலிதாவை கொலை செய்துவிட்டார்கள் என துண்டுப் பிரசுரம் மூலம் அதிமுக செய்த பிரசாரத்திற்கு பதிலடியாக ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை தினகரன் தரப்பு வெளியிட்டது. இதைப் பார்த்து தினகரன் சசிகலா தரப்பு மீது அனுதாபம் திரும்பியதா?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஜெயலலிதா காணொளி .

இந்த வீடியோவும் ஓரளவுக்குதான் செல்வாக்கு செலுத்தியிருக்க முடியும். மக்கள் மத்தியில் ஆளும் கட்சியின் மீதான மதிப்பு குறைந்து வருகிறது. இந்த அதிருப்தியை திமுக அறுவடை செய்யாமல் விட்டுக்கொடுத்ததா அல்லது விலகிச்சென்றதா?

திமுகவுக்கு மெகாக்கூட்டணி இருந்தும் டெபாசிட் இழக்கும் நிலை என்றால் திமுகவின் மெத்தனம் எனச் சொல்லாமல் வேறு எப்படி சொல்வது?

பாஜகவின் கரு.நாகராஜன் நோட்டா வாக்குகளை விட குறைவான வாக்குகள் (1,417) பெற்றுள்ளார். இதற்கு மாறாக, நாம் தமிழர் கட்சி 3,860 வாக்குகள் பெற்றுள்ளது.

தமிழகத்தின் உணர்வுகளை மதித்து பாஜக செயல்படவில்லையா? அதுமட்டுமின்றி பாஜக ஆதரவு நிலையெடுத்த அதிமுகவுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டினார்கள் என்பது சரியா? ஆர்.கே.நகர் தேர்தல் என்பதால் ஜெயலலிதாவின் வாரிசு தினகரன் என்று முடிவாகியிருக்கிறதா? மக்கள் எல்லாவற்றையும் சீர்தூக்கி பார்த்துதான் வாக்களித்தார்களா?

ஓர் இடைத்தேர்தலைக் கொண்டு ஒட்டுமொத்த அரசியல் போக்கை எடைபோடுவது சரியல்ல.. இந்த கழுத்தறுக்கும் கடும் போட்டியில் எந்தெந்த நடிகர்கள் இனி அரசியல் களம் புக துணிவார்கள்?

அந்த நிலைமைகள், அவர்களின் ஆதரவு நிலைப்பாடுகளுக்கு பின்புதான் தமிழக அரசியல் தேர் ஒரு நிலைக்கு வந்து நிற்கும்.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :