தினகரனுக்கு உதவியதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் பதவி நீக்கம்

டிடிவி தினகரன்

ஆர்.கே. நகர் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு டிடிவி தினகரன் வெற்றி பெற்றதை அடுத்து, அதிமுகவில் அவருக்கு ஆதரவாக உள்ள மாவட்ட செயலாளர்கள் கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தியதாகக் கூறி பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார்கள் என்று அதிமுகவின் உயர்மட்டக் குழு அறிவித்துள்ளது.

தங்க தமிழ்ச்செல்வன் (தேனி), வெற்றிவேல் (வடசென்னை), ரங்கசாமி (தஞ்சாவூர்), பார்த்திபன் (வேலூர்), முத்தையா (நெல்லை) மற்றும் கலைராஜன்(தென்சென்னை) ஆகியோர் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கலைராஜன், முத்தையா, புகழேந்தி, நாஞ்சில் சம்பத் மற்றும் சிஆர் சரஸ்வதி ஆகியோர் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று அதிமுகவின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீக்கம் செய்யப்பட்டுள்ள நபர்களுடன் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மற்றும் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் மற்றும் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் நடத்திய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

''தந்திரத்தால் பெற்ற வெற்றி''

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் நடந்த உயர்மட்டக் குழுவின் முடிவில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அவர்கள் தினகரனுக்கு உதவியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றது வெற்றி அல்ல என்றும் தினகரன் தரப்பினர் தேர்தலில் செய்த முறைகேடுகள் குறித்து தேர்தல் ஆணையத்திற்குப் புகார் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

தினகரன் பெற்ற வெற்றி தந்திரம் செய்து பெற்ற வெற்றி என்று கூறிய இபிஎஸ், ''உண்மையான அதிமுக தொண்டன் தினகரனுக்கு ஓட்டுப் போடமாட்டான். ஆர்.கே.நகரில் அதிமுக தோற்கவில்லை. தினகரன் மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு உதவியவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும்,'' என்று கூறினார்.

''தினகரன் ஒரு மாயமான்''

ராமாயணத்தில் வரும் மாயமான் போன்றவர் தினகரன் என்று கூறிய ஓபிஎஸ் அவருடன் செல்பவர்கள் என்ன ஆவார்கள் என்று தெரியாது என்றார்.

''ஆர்.கே.நகரில் தினகரனுக்கு ஓட்டுப் போட்டவர்கள் பணத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டோம். ஆர்.கே.நகர் தேர்தலின்போது விதிமுறைமீறல்களைச் செய்த தினகரன் குழுவினர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வேண்டுகோள் வைப்போம். தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவில் இருந்து யாரும் இதுவரை அவருடன் சேரவில்லை,'' என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.

ஓபிஎஸ்-இபிஎஸ் கட்சியில் இருந்து விலக வேண்டும்

ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தெரிவித்த கருத்துகள் குறித்து தினகரன் ஆதரவாளரான எம்எல்ஏ தங்கத் தமிழ்ச்செல்வனிடம் கருத்து கேட்டபோது, உண்மையான அதிமுக தினகரன் தலைமையில் உள்ளது என்றார்.

''உண்மையான கட்சி தினகரனுக்கு ஆதரவாக உள்ளது என்று ஆர்.கேநகர் தேர்தலுக்குப் பிறகு தெரிந்துவிட்டது. எங்களை கட்சியில் இருந்து நீக்குவதாக அவர்கள் கூறுவது வேடிக்கையாக உள்ளது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர்தான் உடனடியாக கட்சியில் இருந்தும் ஆட்சியில் இருந்தும் விலக வேண்டும்,'' என்று தங்கத்தமிழ்ச்செல்வன் கூறினார்.

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது என்பதால் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியுள்ளது செல்லாது என தினகரன் ஆதரவாளர் கலைராஜன் கூறியுள்ளார்.

''எங்களை கட்சியில் இருந்து நீக்கிவிட்டோம் என்று ஓபிஎஸ்-இபிஎஸ் ஆகியோர் கூறியது வேடிக்கையாக உள்ளது. அவர்களின் பதவியே கட்சியில் இல்லை. எங்களை நீக்க பொதுச் செயலாள்ராக உள்ள சசிகலா மட்டுமே நடவடிக்கை எடுக்கமுடியும். எங்களை நீக்க இவர்களுக்கு அதிகாரம் இல்லை,'' என்று கலைராஜன் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்