"சுனாமியின் பெயரால் ஏற்படுத்தப்பட்ட காயங்கள்தான் அதிகம்": வறீதையா கான்ஸ்தந்தின்

சுனாமி

சுனாமி பேரிடர் நிகழ்ந்து இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) 13 ஆண்டுகள் ஆகின்றன. ஆயிரக்கணக்கான மக்கள், பல நூறு கோடி மதிப்புள்ள கட்டுமானங்கள் என அந்த ஆழிப்பேரலை ஏற்படுத்திச் சென்ற காயம் ஆழமானது. குறிப்பாக அந்த பேரலையில் மோசமான பாதிப்புக்கு உள்ளானவர்கள் மீனவர்கள்.

கடலோடிகள் குறித்து ஆய்வு செய்து தொடர்ந்து எழுதியும், பேசியும் வரும் முனைவர் வறீதையா கான்ஸ்தந்தினிடம், மீனவர்களின் தற்போதைய நிலை குறித்து பேசினோம்.

புரிதலின்மை:

பட மூலாதாரம், Getty Images

"மீனவர்கள் சுயசார்பானவர்கள். அவர்கள் நேரடியாக எவரிடமும் பணி செய்யாதவர்கள். அவர்களுக்கு கடல்தான் எல்லாம். தமிழகத்தில், சோழ மண்டலம், பாக் வளைகுடா, மன்னார் மற்றும் தென் மேற்கு என நான்கு வித கடற்பரப்புகள் உள்ளன. இந்த கடற்பரப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் தனித்துவமானது. மீன்பிடிப்பு முறைகளும், மீன்பிடிப்பு காலமும் வேறுபடும். அந்த மக்களின் இயல்புகளும் மாறுபடும். ஆனால், அரசுகளுக்கு இந்த வேறுபாடுகள் குறித்து புரிவதில்லை. அவர்கள் அனைவரையும் ஒரே மாதிரி அணுகுகிறார்கள். இந்த புரிதலின்மைதான், இன்று நெய்தல் நில மக்கள் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் அடிப்படை காரணம்." என்றார் வறீதையா.

சுனாமிக்குப் பின்னான காலம்:

"சுனாமிக்கு பின், கடலோடிகளை கடலிலிருந்து அப்புறப்படுத்தும் முயற்சிதான் மேற்கொள்ளப்பட்டது. கடலை குறித்த எதிர்மறை எண்ணத்தை விதைத்து, அவர்களை கடல்புறத்திலிருந்து வெளியேற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது அரசு. ஆனால், அதே நேரம் பெரு நிறுவனங்கள் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டது. அதற்கு ஏற்றாற்போல சட்டங்கள் வடிவமைக்கப்பட்டன.

படக்குறிப்பு,

வறீதையா கான்ஸ்தந்தன்

தொண்ணூறுகளில் வந்த `கடற்கரை ஒழுங்காற்று அறிவிக்கை` மீனவர்களுக்கு இசைவானதாக இருந்தது. மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்டியது. ஆனால், அதன்பின் வந்த `மீன் வள மசோதா` மீன்பிடிப்பில் புதிதுபுதிதாக விதிகளை புகுத்தியது. இது எதுவும் மீனவர்களுக்கு இசைவானதாக இல்லை. மொத்தத்தில் சுனாமியால் ஏற்பட்ட வலிகள் மற்றும் காயங்களைவிட, அதன் பெயரால் ஏற்படுத்தப்பட்ட காயங்கள்தான் அதிகம்" என்கிறார் வறீதையா.

பேரிடர் மீட்பு:

பட மூலாதாரம், Getty Images

நாம் `சுனாமி` என்ற பதத்தை 2004-ம் ஆண்டுக்கு முன்பு அறிந்திருக்கவில்லை. ஒரு பேரிடர் வீச்சை முழுமையாக உணர்த்தியது சுனாமிதான். குறைந்தபட்சம் அதன்பின்பாவது, ஒரு பேரிடரை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா என்றால் அதற்கு பதில் `ஒகி`தான்.

ஒகி புயலை கையாண்ட விதமே நாம் பேரிடர் மீட்பில் எவ்வளவு மோசமாக இருக்கிறோம் என்பதற்கு எடுத்துக்காட்டு என்றவர், 2009-ம் ஏற்பட்ட `பியான்புயல்` நிகழ்வு குறித்து விவரித்தார்.

பியான் புயலில் கன்னியாகுமரியை சேர்ந்த 8 மீனவர்கள் இறந்தார்கள். அவர்களுக்கு இன்றுவரை இறப்பு சான்றிதழ் கிடைக்கவில்லை. இதனால், அவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் கோர முடியவில்லை என்றார்.

உண்மையாக அரசுக்கு மீனவ மக்கள் மீது அக்கறை இருந்தால், அந்த மக்களுடன் உரையாடி அம்மக்களை புரிந்து கொண்டு, கடலில் அவர்களுக்குள்ள உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :