அனாதையான வன விலங்குகளை தத்தெடுத்து வளர்க்கும் காப்பகம்

காப்பகம்

பட மூலாதாரம், LOKBIRADARI PRAKALP

கடந்த நாற்பது ஆண்டுகளாக, காட்டு விலங்குகளுக்கென தனிக் காப்பகத்தை நடத்தி வருகிறார் மகசாசே விருது பெற்ற மருத்துவர் பிரகாஷ் ஆம்டே. 1973ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்காப்பகத்திற்கு 1991ஆம் ஆண்டு, மீட்பு மையம் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது. அதன் பெயர் 'ஆம்டே ஆர்க்'

அங்கீகரிக்கப்பட்ட மிருகக்காட்சி சாலை விதிகள் 2009-இன் படி, காட்டு விலங்குகளுடன் தொடர்புகொள்வது தடை செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த அக்டோபர் மாதம், 'ஆம்டே ஆர்க்' மையத்திற்கு மத்திய மிருகக்காட்சி ஆணையம் நோட்டிஸ் அனுப்பியது.

'ஆம்டே ஆர்க்' அமைப்பு குறித்து தெரிந்துகொள்ள மகாராஷ்டிர மாநிலம் ஹெமல்கசா கிராமத்துக்கு சென்றது பிபிசி மராத்தி குழு.

"உள்ளூர் மக்களால் இரண்டு மாதக் குட்டியாக இங்கு கொண்டுவரப்பட்ட இந்தக் கழுதைப்புலிக்கு தற்போது வயது 15. இதன் பெயர் ஜாஸ்பர்". இது "எல்சா என்ற சிறுத்தைக்குட்டி" என்று நினைவு கூறுகிறார் மருத்துவர் ஆம்டே. சிறுத்தை, கழுதைப்புலி ஆகியவை மற்ற உயிரினங்களை கொன்று தின்னும் விலங்குகளாக கருதப்பட்டாலும் ஆம்டேவிற்கு அவை கொடூரமான விலங்குகள் கூட அல்ல.

பட மூலாதாரம், BBC Sport

கடந்த 44 வருடங்களில், இவை யாரையும் தாக்கியதில்லை, ஒரு விலங்கினைக் கூட இதுவரை தாக்கியதில்லை. மாறாக அன்பினை மட்டுமே பொழிந்து வருகின்றன.

கோனத் மற்றும் மாடியா ஆதிவாசிகளின் நலனுக்காக, 'லோக் பிரதாரி பிரகல்ப்' என்ற சமூகத் திட்டத்தின் கீழ், 1973 ஆம் ஆண்டு ஆம்டேக்கள் தங்கள் பணியைத் தொடங்கினர். கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டாலோ அல்லது உணவு தேடும் போது விலங்குகளால் தாக்கப்பட்டால் மட்டும்தான் ஆதிவாசிகள் தங்களிடம் வருவார்கள் என்றார் அவர்.

பிரபலமான சமூக ஆர்வலர் பாபா ஆம்டேவிற்கு, ஆதிவாசிகள் நல்வாழ்விற்காக 50 ஏக்கர் நிலம் அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. அதில்தான் பிரகாஷ் ஆம்டே தன் பணியைத் தொடங்கினார்.

குட்டிக் குரங்கின் கதை

விலங்குகள் காப்பகத்தின் கதையை உயிர்ப்புடன் கூறுகிறார் ஆம்டே.

'ஒருமுறை காட்டுப்பகுதி வழியே நடந்து சென்றபோது பெண் குரங்கினைக் கொன்ற ஆதிவாசிகள், அதனை தூக்கிச் செல்வதைக் கண்டோம். அந்தப் பெண் குரங்கின் மார்பில் ஒரு குட்டி இருந்ததை அப்போதுதான் கவனித்தோம். உணவிற்காக இந்தச் சமுதாயம் குரங்குகளை கொல்லும் எனத் தெரியாமல், அந்த குரங்குக் குட்டியை எங்களிடம் கொடுக்குமாறு கேட்டோம். குழந்தைகள் பசியோடு வீட்டில் காத்திருப்பதாக அந்த ஆதிவாசிகள் தெரிவித்தனர். அவர்கள் பட்டினியை உணர்ந்த நாங்கள், குரங்கு குட்டிக்கு பதிலாக அரிசியை பரிமாற்றிக் கொண்டோம்.'

பட மூலாதாரம், LOKBIRADARI PRAKALP

இவ்வாறுதான் 1973ல் விலங்குகள் காப்பகம் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் கூண்டில் அல்லாமல் அவர்களுடன்தான் விலங்குகள் தங்கியிருந்தன. பின்னர், சிறுத்தை, மான், சிங்கம் மற்றும் நாய்களும் அவர்கள் குடும்பத்தில் சேர்ந்தன. கிட்டத்தட்ட 17 வருடங்களுக்கு மருத்துவர் ஆம்டேவுடன் மகிழ்ச்சியாக அவை வாழ்ந்து வந்தன.

ஹெமல்கசா கிராமத்தில் மனித- விலங்கு உறவுமுறை குறித்த மகிழ்ச்சிகரமான அனுபவங்களை 'நெகல்'(ஆதிவாசி மொழியில் சிறுத்தை என்று அர்த்தம்) என்ற புத்தகத்தில் தொகுத்து வழங்கியுள்ளார் எழுத்தாளர் விலாஸ் மனோகர்.

ஆம்டேவின் 'அனிமல்ஸ் ஆர்க்'

உலகில் வெள்ளம் ஏற்பட்டபோது காட்டு விலங்குகளைக் காப்பாற்றி, அவற்றிற்கு புதுவாழ்வு அளித்ததாக பைபிலில் குறிப்பிடப்படும் 'நோவாஸ் ஆர்க்கை' குறித்து விவரிக்கிறார் மருத்துவர் ஆம்டே. தங்களை சந்திக்க வந்த பூங்கா அமைப்பு ஒன்றின் நிறுவனரான சாலி வாக்கர் இந்த காப்பகத்துக்கு 'அனிமல்ஸ் ஆர்க்' என்று பெயரிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

'சிறுத்தை, மான், சிங்கம், நாய்கள் மற்றும் கரடிகள் ஆகியவை எதிரிகள் போல இருந்தாலும் அவை அனைத்தும் ஒன்றாக அமைதியான முறையில் இங்கு வாழ்ந்து வருகின்றன' என்கிறார் ஆம்டே. மீட்பு மையம் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டதால் விலங்குகளுக்கு கூண்டுகள் வைப்பது சாத்தியமானது.

ஆனால், வேட்டையாடுதலை விடுத்து வேறொரு வாழ்வாதாரத்தை உருவாக்கிக்கொள்ளவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், ஆதிவாசி குழந்தைகளுக்காக 1974ஆம் ஆண்டு பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது.

வேட்டையாடுதலுக்கு மாற்று என்ன?

ஆதிவாசிகளின் வாழ்க்கை முறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர் மண்டா ஆம்டே கூறுகிறார். முன்பு பள்ளிக்கு வந்த குழந்தைகள் கையில் வில்-அம்பு இருக்கும். பறவைகளை வேட்டையாட அம்புகளில் மண்பந்துகள் பொருத்தப்பட்டு இருக்கும் என்பதை நினைவு கூர்கிறார் மண்டா. தற்போது அவற்றைக் குழந்தைகள் வைத்திருப்பதில்லை.

இங்குள்ள அன்பு மிகுந்த மனப்பான்மையை பார்த்தே இந்த மாற்றம் ஏற்பட்டதாக மாடியா ஆதிவாசி பிரிவை சேர்ந்த மோன்ஷி டொர்வா நம்புகிறார். 'நான் குழந்தையாக இருக்கும்போது என் தந்தை மற்றும் தாத்தாவுடன் வேட்டையாடச் சென்றது நினைவிருக்கிறது. குரங்குகள் கொல்லப்பட்டன. ஆனால் தற்போது நாங்கள் அவ்வாறு செய்வதில்லை.' என்கிறார் அவர். மேலும், காய்கறிகளையும் தானியங்களையும் தாங்கள் உட்கொள்வதாகவும் மோன்ஷி கூறுகிறார்.

படக்குறிப்பு,

மோன்ஷி

பெரிய பொறிகள், வலைகள் மற்றும் ஈட்டிகள் போன்ற வேட்டையாடும் ஆயுதங்களை இன்னமும் அவர்கள் வைத்துள்ளனர். மோன்ஷியின் மகிழ்ச்சியை எங்களால் உணர முடிந்தது. ஆதிவாசி கலாச்சாரம் அழியாமல் இருக்க வேண்டும் என்றே அவர் விரும்புகிறார்.

வாழ்வாதாரத்திற்காக வேட்டையாடுவதை, விவசாயம் மாற்றிவிட்டது. இதனால், காப்பகத்திற்கு வரும் விலங்குகளின் எண்ணிக்கையும் குறைந்தது.

மீட்பு மையம் மற்றும் காப்பகம்

பல்வேறு இனங்களுக்கு வாழ்விடமாக 'ஆம்டே ஆர்க்' திகழ்கிறது. இதைத் தவிர ஆயிரக்கணக்கான விலங்குகளையும் இக்காப்பகம் மீட்டுள்ளது.

ஆம்டே காப்பகத்தின் இணை இயக்குனரான அனிகேத் ஆம்டே சில சுவாரஸ்ய தகவல்களை நம்முடன் பகிர்கிறார்.

பட மூலாதாரம், LOKBIRADARI PRAKALP

ஆதிவாசிகள் மூலாமாக மட்டுமே அனைத்து விலங்குகளும் இங்கு வரவில்லை என்கிறார் அவர். 'பத்து சிறுத்தைகளை தங்களிடம் தந்து பார்த்துக் கொள்ளும்படி கூறிய வனத்துறை, கரடிகள், மான்கள் மற்றும் சிறுத்தைகளை தொடர்ந்து கொண்டு வருகின்றனர். மனித ஆக்கிரமிப்புகள் காரணமாக மகாராஷ்டிராவின் அகமத்நகர் மற்றம் நாசிக் மாவட்டங்களில் சிறுத்தைகள் தாக்குதலுக்கு மனிதர்கள் ஆளாவதாக செய்திகள் வருகின்றன. உயிர் பிழைத்த பல இளம் விலங்குகளும் வனத்துறை எங்களுக்கு கொடுத்துள்ளது.' கடந்த இரண்டரை ஆண்டுகளாக தங்களுடன் வாழ்ந்து வரும் எல்சா என்ற சிறுத்தையைப் பார்த்து இவ்வாறு கூறுகிறார் அனிகேத்.

மீட்பு மையத்திற்கான உரிமம் அவ்வப்போது புதுப்பிக்கப்பட வேண்டும். 'இந்தாண்டு நவம்பர் 3ஆம் தேதியுடன் எங்கள் உரிமம் காலாவதியாகிவிட்டது. மத்திய மிருகக்காட்சி ஆணையம் சில ஆட்சேபனைகள் தெரிவிக்க, அதற்கு நாங்கள் விளக்கம் அளித்துள்ளோம். மேலும் உரிய முடிவிற்காக காத்திருக்கிறோம்' என்கிறார் அனிகேத் ஆம்டே.

'மீட்பு மையத்தில் விதிகளை மீறி சேர்க்கப்படும் கரடிகள் குறித்து அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். கரடிகளுக்கு பொருத்தமான கூண்டுகள் அமைப்பது குறித்த புதிய திட்டத்தை பரிந்துரைத்து, குழுவின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். படிப்படியாக நிறைவேற்றவுள்ள இத்திட்டத்தின் மதிப்பீடு பத்து கோடி ரூபாயாகும்'

ஏன் விலங்குகளை தத்தெடுத்து அவற்றை காதலித்தோம்?

'இங்குள்ள பல விலங்குகள் தாயை இழந்தவை. தாய் இருந்திருந்தால் உயிர் பிழைப்பதற்கான உத்திகளை கற்றுத்தந்து இவற்றை பராமரித்திருக்கும். இவற்றிற்கு யாருமில்லை என்பதினால் நாங்கள் அதை செய்தோம்' என்றார் பிரகாஷ் ஆம்டே.

மீட்பு மையத்தின் விதிகள் குறித்து நம்மிடம் விவரித்தார் மருத்துவர் ஆம்டே. காயமடைந்த விலங்குகளுக்கு சிகிச்சை அளித்தப்பின் அவற்றை காட்டில் விட்டுவிட வேண்டும் என்று விதி பரிந்துரைக்கிறது. 'இது விலங்குகளுக்கான அனாதை ஆசிரமம் என்பதினால் இதற்கு எந்தவிதமான விதிமுறைகளும் இந்திய சட்டத்தில் தற்போதைக்கு இல்லை'. புதிதாக பதிவுசெய்யப்பட்டுள்ள விலங்குகளை அவர்கள் கையாள மாட்டார்கள் எனவும் ஆம்டே கூறினார்.

இதுகுறித்து மேலும் தகவல்கள் பெற மத்திய மிருகக்காட்சி ஆணையத்தை தொடர்பு கொள்ள பிபிசி மராத்தி குழு தொடர்ந்து முயற்சித்த போது, 2016ஆம் ஆண்டு ஆம்டே ஆர்க்கிற்கு அனுப்பப்பட்ட விளக்க நோட்டிஸ் மட்டுமே அவர்களிடம் இருந்து கிடைத்தது.

சிறுத்தை, கழுதைப்புலி, பல வகையான மான்கள், எருதுகள், கரடிகள், முதலைகள், முள்ளம்பன்றிகள், நரிகள், ஆந்தைகள், மயில்கள், பாம்புகள் மற்றும் பள்ளிகள் என இக்காப்பகம் நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு வாழ்விடமாக உள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :