இபிஎஸ்-ஓபிஎஸ் குறித்த ஆடிட்டர் குருமூர்த்தியின் கருத்துகளால் சர்ச்சை

முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் சக்தியற்றவர்கள் என துக்ளக் இதழின் ஆசிரியரும் ஆடிட்டருமான எஸ். குருமூர்த்தி தெரிவித்த கருத்துகள் அ.தி.மு.கவினரின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கியிருக்கின்றன.

ஆடிட்டர் குருமூர்த்தி

நடந்து முடிந்த ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றிபெற்ற நிலையில், அவரது ஆதரவாளர்களான தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டவர்களை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்குவதாக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் நேற்று அறிவித்தனர்.

இந்த நிலையில், இந்த நடவடிக்கை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்த ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி "இந்த பலவீனமானவர்கள் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கின்றனர். சக்தியற்ற (impotent) தலைவர்கள்.." என்று கூறியிருந்தார்.

பட மூலாதாரம், TWITTER

படக்குறிப்பு,

ட்விட்டர் பதிவு

இதற்கு, சமூக வலைதளங்களில் உள்ள அ.தி.மு.கவினர் கடுமையான எதிர்வினையாற்றினர். ஆடிட்டர் குருமூர்த்தியை மிக மோசமாக விமர்சித்தனர்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், "ஆண்மையற்றவர்கள்தான் அதைப் பற்றி பேசுவார்கள். ஆண்மையுள்ளவர்கள் அது குறித்துப் பேசமாட்டார்கள். குருமூர்த்திக்கு தமிழகத்தில் முகமே கிடையாது" என்று கூறினார்,

"அ.தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் காங்கேயம் காளைக்கு உரிய வீரியத்தோடு கழகத்தைக் கட்டிக்காத்து வருகிறார்கள்" என்று கூறிய ஜெயக்குமாரிடம், அ.தி.மு.கவின் இரு அணிகளும் இணையும் பேச்சுவார்த்தைகள் குருமூர்த்தியின் முன்னிலையில்தானே நடந்தன என்று கேட்டபோது, "அவர் தன்னை கிங் மேக்கராக நினைத்துக்கொள்ளக்கூடாது. அவர் தடித்த வார்த்தைகளில் பேசக்கூடாது. அவர் ஒரு தடித்த வார்த்தை பேசினால், நாங்கள் நூறு பேசுவோம். எங்களுடைய ஆட்சி நன்றாக சென்றுகொண்டிருப்பதால் ஏதாவது குழப்பம் விளைவிக்க அப்படிப் பேசுகிறார்" என்று கூறினார்.

அவர் பா.ஜ.கவில் இருக்கிறாரா இல்லையா என்பது தெரியாது என்றும் சாதாரணமானவர்கள்கூட நாகரீகமாக பேசும் நிலையில், குருமூர்த்தி படித்த முட்டாளாக இருக்கிறார் என்றும் ஜெயக்குமார் விமர்சித்தார்.

பட மூலாதாரம், TWITTER

படக்குறிப்பு,

ட்விட்டர் பதிவு

மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள குருமூர்த்தி, "துக்ளக் இதழின் கேள்வி- பதில் பகுதியில் இதே பார்வையை நான் தொடர்ந்து வெளிப்படுத்திவந்திருக்கிறேன். அ.தி.மு.க. தலைமை எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பது குறித்து புதிதாக நான் எதையும் சொல்லிவிடவில்லை" என்று கூறியிருக்கிறார்.

மேலும், "மன்னார்குடி ஆதரவாளர்களுக்கு எதிராக கடந்த காலத்தில் அ.தி.மு.க. தலைமை தவணை முறையில் நடவடிக்கை எடுத்ததால் ஆர்கே. நகர் தேர்தலையே ஒட்டுமொத்தமாக வாங்க முடிந்தது. காவல்துறையால்கூட பணம் கொடுத்தவர்களைப் பிடிக்க முடியவில்லை. பதிலாக தாங்களும் பணம் கொடுக்க ஆரம்பித்தார்கள்" என்றும் குருமூர்த்தி குற்றம் சாட்டியிருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :