2017ல் தமிழ்நாடு: ஒரு மீள் பார்வை

ஜல்லிக்கட்டுப் போராட்டம் படத்தின் காப்புரிமை AFP

2017ஆம் ஆண்டு நடந்த முக்கிய சம்பவங்கள் குறித்து ஒரு பார்வை.

ஜனவரி 4: இந்த ஆண்டின் துவக்கத்திலேயே ஜல்லிக்கட்டுப் போராட்ட மேகங்கள் தமிழகத்தை சூழ்ந்திருந்தன. ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டுமெனக் கோரி, பாண்டிச்சேரியிலிருந்தும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும் அலங்காநல்லூரை நோக்கி வந்த போராட்டக்காரர்கள் சிலர், மதுரை சிக்கந்தர் சாவடியில் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

ஜனவரி 16: அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தக்கோரி போராட்டம் துவங்கியது. மாலையில் போராட்டக்காரர்கள் கலைந்துசெல்ல வேண்டுமென உள்ளூர்க்காரர்கள் கோரிக்கைவிடுத்தனர்.

ஜனவரி 17: அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்காகப் போராடியவர்கள் கைதுசெய்யப்பட்டனர். சென்னை மெரீனா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சிறிய அளவில் ஒரு குழு கூடி, போராட்டத்தைத் துவங்கியது.

ஜனவரி 20: ஜல்லிக்கட்டிற்கான மெரினா போராட்டம் உச்சகட்டத்தை அடைகிறது. பெரும் எண்ணிக்கையில் கடற்கரையில் மக்கள் கூட்டம் குவிந்தது. மாநிலம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. அவசரச் சட்டம் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தொடங்கின.

ஜனவரி 22: ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தும் வகையில் அவசரச் சட்டத்தைக் கொண்டுவர முடிவுசெய்கிறது தமிழக அரசு. மாநிலம் முழுவதும் போராட்டங்களை முடித்துக்கொள்ளவும் கோரிக்கைவிடுக்கப்படுகிறது.

ஜனவரி 23: அதிகாலையிலிருந்தே தமிழகம் முழுவதும் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறது காவல்துறை. அலங்காநல்லூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் பெரும் கலவரம் வெடிக்கிறது. சென்னையில் ஐஸ்ஹவுஸ் காவல்நிலையம் கொளுத்தப்படுகிறது. கடற்கரையை ஒட்டியுள்ள குப்பங்களில் காவல்துறை தாக்குதலில் ஈடுபடுகிறது. நடுக்குப்பத்தில் மீன் மார்க்கெட்டை காவல்துறை தீ வைத்துக் கொளுத்தியதாக குற்றம்சாட்டப்படுகிறது. மாலைக்குள் போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்படுகின்றனர்.

படத்தின் காப்புரிமை ARUN SANKAR/AFP/Getty Images

பிப்ரவரி 5: தமிழகத்தின் ஆளும் கட்சியான அ.தி.மு.கவின் சட்டமன்றக் கட்சித் தலைவராக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான வி.கே. சசிகலா பிப்ரவரி ஐந்தாம் தேதி தேர்வுசெய்யப்பட்டதையடுத்து, தனது பதவியை ஓ. பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். அடுத்த நாள் அவரது ராஜினாமா ஏற்கப்படுகிறது.

பிப்ரவரி 7: பதவியை ராஜினாமா செய்திருந்த முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இரவில் ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று தியானத்தில் அமர்கிறார். நாற்பது நிமிட தியானத்திற்குப் பிறகு எழுந்த அவர், சசிகலா மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் கடும் விமர்சனங்களை முன்வைக்கிறார். தான் வலியுறுத்தி ராஜினாமா செய்யவைக்கப்பட்டதாகக் கூறுகிறார்.

பிப்ரவரி 14: சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதிசெய்த உச்ச நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரும் குற்றவாளிகள் எனக் கூறுகிறது.

பிப்ரவரி 15: 2011ஆம் ஆண்டில் ஜெயலலிதாவால் கட்சியை விட்டு நீக்கப்பட்டிருந்த டிடிவி தினகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொண்ட சசிகலா, கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக டிடிவி தினகரனை நியமித்தார். ஜெயலலிதாவின் சமாதிக்குச் சென்று சபதம் செய்துவிட்டு, பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சென்று சரணடைந்தார் சசிகலா.

பிப்ரவரி 16: தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக எடப்பாடி கே. பழனிச்சாமி பதவியேற்றார். ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்த அமைச்சர்களில் ஓ. பன்னீர்செல்வம், மஃபா கே. பாண்டியராஜன் இந்த அமைச்சரவையில் இடம்பெறவில்லை. கே.ஏ. செங்கோட்டையன் புதிய அமைச்சராக இடம்பெற்றார்.

பிப்ரவரி 18: எடப்பாடி கே. பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக சட்டப்பேரவை கூடியபோது, பெரும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்ட அவை, மீண்டும் பிற்பகல் மூன்று மணிக்குக் கூடியபோது தி.மு.கவினர் வெளியேற்றப்பட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் பழனிச்சாமி தலைமையிலான அரசு 122 எம்எல்ஏக்களின் ஆதரவோடு வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மார்ச் 22: அ.தி.மு.க. இரண்டாக உடைந்து ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் சசிகலா -டிடிவி தினகரன் தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டுவந்த நிலையில், இரட்டை இலை, அ.தி.மு.க. என்ற கட்சியின் பெயர் ஆகியவற்றை முடக்கியது தேர்தல் ஆணையம்.

மார்ச் 23: ஜெயலலிதாவின் மறைவால் காலியான ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அ.தி.மு.கவின் சின்னம் பெயர், சின்னம் ஆகியவை முடக்கப்பட்டதால் அந்தத் தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னமும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளரான மதுசூதனனுக்கு இரட்டை மின் விளக்கு கம்பம் சின்னமும் ஒதுக்கப்பட்டன.

இந்தியாவின் குறிப்பிடத்தகுந்த, தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான அசோகமித்திரன் 86வது வயதில் காலமானார்.

மார்ச் 25: இலங்கையின் வவுனியாவில் லைகா நிறுவனம் கட்டியிருந்த வீடுகளை வழங்கும் விழாவிற்காக யாழ்ப்பாணம் செல்லவிருந்த ரஜினிகாந்த், அதற்கு எழுந்த எதிர்ப்பையடுத்து தனது பயணத்தை ரத்துசெய்தார்.

ஏப்ரல் 7: ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தில் இருந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரின் வீடு, அவரது உறவினர்களின் வீடு, அவருக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்கள் என பல இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. நடிகர் சரத் குமாரின் கொட்டிவாக்கம் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

ஏப்ரல் 10: வாக்காளர்களுக்கு பெருமளவில் பணம் கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரில், சென்னை ஆர்.கே. நகரில் இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது.

ஏப்ரல் 18: எதிர்பாராத திருப்பமாக அ.தி.மு.கவிலிருந்து தினகரன் குடும்பத்தை ஒதுக்கிவைப்பதாக ஜெயக்குமார் உள்ளிட்ட சில அமைச்சர்கள் செய்தியாளர்களிடம் அறிவித்தனர்.

ஏப்ரல் 19: கட்சியிலிருந்து தான் ஒதுங்கிவிட்டதாக டிடிவி தினகரன் தெரிவித்தார். தன்னையும் தனது குடும்பத்தினரையும் கட்சியிலிருந்து ஒதுக்கிவிட வேண்டும் என்ற முடிவால் தனக்கு வருத்தமில்லை என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

ஏப்ரல் 21: வைகை அணையின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவருவதால், அதனை தெர்மகோல் அட்டையால் மூடும் முயற்சியை மேற்கொண்டார் அமைச்சர் செல்லூர் ராஜு. இந்த முயற்சி உலக அளவில் கேலிக்குள்ளானது.

ஏப்ரல் 25: இரட்டை இலையை மீட்க லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் டிடிவி தினகரன் கைதுசெய்யப்பட்டார்.

ஏப்ரல் 26: அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இருந்து சசிகலாவின் படங்கள் அகற்றப்படுகின்றன.

மே 14: மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியைத் துவக்கிவைப்பதற்காக சென்னை வந்த மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தமிழகத் தலைமைச் செயலகத்தில் தன் துறையின் கீழ் நடக்கும் பணிகள் குறித்து ஆய்வுமேற்கொண்டார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது.

மே 30: மாடுகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு மே 23ஆம் தேதி விதித்த பல்வேறு தடைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதிக்கிறது.

மே 31: சென்னை தியாகராய நகரில் உள்ள மிகப் பெரிய துணிக்கடையான சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயில் நாசமான அந்தக் கட்டடம் பிறகு, இடித்துத் தள்ளப்பட்டது.

ஜூன் 20: நீதிமன்ற அவமதிப்பிற்காக கர்ணனுக்கு உச்ச நீதிமன்றம் ஆறு மாத காலம் சிறை தண்டனை விதித்ததால் மே 10ஆம் தேதியிலிருந்து தேடப்பட்டுவந்த நீதிபதி கர்ணன், மேற்கு வங்க காவல்துறையினரால் கோயம்புத்தூரில் கைதுசெய்யப்பட்டார்.

ஜூலை 10: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு, கர்நாடக மாநிலத்தில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறையில் கூடுதல் வசதிகளைச் செய்து தருவதற்காக டிஜிபி சத்யநாராயணா இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக சிறைத் துறை டிஜிபி ரூபா குற்றம்சாட்டினார்.

ஆகஸ்ட் 3: சென்னை மெரீனா கடற்கரையிலிருந்து இரவோடு இரவாக அகற்றப்படுகிறது நடிகர் சிவாஜி கணேசனின் சிலை.

ஆகஸ்ட் 10: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூடிய அ.தி.மு.க. நிர்வாகிகள், வி.கே. சசிகலா தற்போது செயல்பட இயலாத நிலையில் இருப்பதால் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் கட்சியை வழிநடத்துவார்கள் என்று அறிவிக்கின்றனர். டிடிவி தினகரன் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக்கப்பட்டது சட்டவிரோதமானது என்றும் அறிவிக்கின்றனர்.

ஆகஸ்ட் 17: ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்றும் ஜெயலலிதா வசித்துவந்த போயஸ் கார்டன் இல்லம் நினைவிடமாக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவித்தார்.

ஆகஸ்ட் 21: எடப்பாடி கே. பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. அணிகள் ஒன்றாக இணைவதாக கட்சித் தலைமையகத்தில் அறிவித்தனர். ஓ. பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும் அவரது அணியைச் சேர்ந்த மஃபா பாண்டியராஜன் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சராகவும் பதவியேற்றனர்.

செப்டம்பர் 1: நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி, தூக்கிலிட்டு தற்கொலைசெய்துகொண்டார். மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காது என்ற காரணதால் அவர் இந்த முடிவை எடுத்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

செப்டம்பர் 12: சென்னையில் கூடிய அ.தி.மு.கவின் செயற்குழு - பொதுக்குழுக் கூட்டத்தில் வி.கே. சசிகலா அக்கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது ரத்துசெய்யப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமியும் நியமிக்கப்பட்டனர்.

செப்டம்பர் 30: தமிழ்நாட்டின் புதிய ஆளுனராக, அசாம் மாநில ஆளுனரான பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். அக்டோபர் 6ஆம் தேதி பன்வாரிலால் புரோகித் பதவியேற்றார்.

அக்டோபர் 19: விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியான மெர்சல் திரைப்படத்தில் ஜி.எஸ்.டி. வரி குறித்தும் பண மதிப்பழப்பு நடவடிக்கை குறித்தும் விமர்சனங்கள் வெளியானதற்கு தமிழக பாரதீய ஜனதாக் கட்சி கண்டனங்களைத் தெரிவித்தது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது.

அக்டோபர் 20: உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த கருணாநிதி, நீண்ட நாட்களுக்குப் பிறகு முரசொலி அலுவலகத்திற்கு வருகைதந்தார்.

நவம்பர் 9: ஜெயா தொலைக்காட்சி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர். அலுவலகம் உட்பட சசிகலா குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட 180க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

நவம்பர் 14: தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், கோயம்புத்தூரில் அரசு அதிகாரிகளை அழைத்து திட்டப்பணிகளை ஆய்வுசெய்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குப் பிறகு பல இடங்களில் இதுபோன்ற ஆய்வுகளை ஆளுனர் மேற்கொண்டார்.

நவம்பர் 18: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வசித்துவந்த, சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள 'வேதா நிலையம்' இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டனர்.

நவம்பர் 30: குமரிக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்தது. ஒக்கி எனப் பெயர் சூட்டப்பட்ட இந்தப் புயலின் காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. குமரி மாவட்டத்திலிருந்து கடலுக்குச் சென்ற 800க்கும் மேற்பட்ட மீனவர்கள் காணாமல் போனார்கள்.

டிசம்பர் 12: ஜாதி மாறி திருமணம் செய்துகொண்டதற்காக தலித் இளைஞரான சங்கர் உடுமலைப்பேட்டையில் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

டிசம்பர் 20: ஆர்.கே. நகருக்கு இடைத்தேர்தலுக்கு அடுத்த நாள் வாக்குப்பதிவு செய்யப்படவிருந்த நிலையில், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவு பிரமுகரான வெற்றிவேல் வெளியிட்டார். இந்த வீடியோவை ஒளிபரப்பக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிடுகிறது.

டிசம்பர் 21: ஜெயலலிதா இறந்ததால் காலியான சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சுயேச்சையாக டிடிவி தினகரனும் அ.தி.மு.க. சார்பில் மதுசூதனனும் தி.மு.க. சார்பில் மருது கணேஷும் போட்டியிடுகின்றனர்.

டிசம்பர் 24: ஆர்.கே. நகர் தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றிபெற்றார்.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :