'லவ் ஜிஹாத்' மற்றும் 'சிறப்புத் திருமணச் சட்டம்' இடையே ஊசலாடும் காதல் கதைகள்

நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் அதை ஒரு 'லவ் ஜிஹாத்' என்று கூறியதால், டெல்லி அருகே உள்ள காசியாபாத் நகரில் ஒரு முஸ்லிம் மணமகனுக்கும், இந்து மணமகளுக்கும் நடைபெற்ற திருமணம் செய்திகளில் இடம் பிடித்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

உங்களுக்கு அந்த செய்திகளைப் படிக்க நேரம் இருந்தால் அவர்கள் இருவரின் குடும்பங்களும் அது லவ் ஜிஹாத் இல்லை என்பதை வலிமையாக மறுப்பதை உணர முடியும்.

இந்துப் பெண்களை முஸ்லிம் ஆண்கள் வலுக்கட்டாயமாக மணம் செய்து கொள்வதையே இந்துத்துவ அமைப்புகள் லவ் ஜிஹாத் என்று அழைக்கின்றன. இந்துப் பெண்கள் இத்தகைய திருமணங்கள் மூலம் இஸ்லாமிய மதத்துக்கு மாற்றப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இரு குடும்பத்தினரின் சம்மதத்தின் பேரிலேயே இந்தத் திருமணம் நடைபெறுவதாகவும், இதற்காக மணமகளோ மணமகனோ மதம் மாறவில்லை என்றும் காசியாபாத்தில் உள்ள மணமகளின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பெற்றோரின் ஒப்புதல் தேவைப்படும் 'சிறப்புத் திருமண சட்டத்தின்' கீழ் இந்தத் திருமணம் பதிவு செய்யப்படுவதால், வற்புறுத்தல் பற்றிய கேள்வியே எழவில்லை என்று பெண்ணின் தந்தை 'ஸ்க்ரோல்' செய்தி இணையதளத்திடம் கூறியுள்ளார்.

ஆனால், இந்தப் போராட்டங்களும் சூழ்நிலையும் சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ்கண்ட பிரிவுகளால் உண்டாகி இருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

சிறப்புத் திருமனச் சட்டம் - 1954 என்றால் என்ன?

ஒரே மதத்தை சேர்ந்த மணமக்கள் திருமணம் செய்துகொள்ள பல மத வழக்கங்களும், தனி நபர் சட்டங்களும் உள்ளன. அப்படியானால், இந்த வழக்கங்களின்கீழ் அவர்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டுமானால், அவர்களில் ஒருவர், தான் மணம் முடிக்கப்போகும் நபரின் மதத்திற்கு மாற வேண்டியிருக்கும்.

ஆனால், வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவரை மணமுடிக்க விரும்பும் ஒருவர், திருமணத்திற்காக தனது மதத்தில் இருந்து விலக விரும்பவில்லை என்றால், அவர்கள் திருமணம் செய்துகொள்ள வழிவகை செய்யவே இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.

இது வழக்கமாக திருமணங்கள் பதிவு செய்யப்படும் 'இந்து திருமணச் சட்டத்தை' விடவும் கொஞ்சம் சிக்கலானது.

படத்தின் காப்புரிமை BEHROUZ MEHRI / Getty images

வழக்கமான பதிவுத் திருமணங்களில் இருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது?

வழக்கமான பதிவுத் திருமணங்களில் மணமக்கள் தங்கள் புகைப்படங்கள், அரசு வழங்கிய ஒரு அடையாள அட்டை மற்றும் முகவரியை வழங்கி அன்றைய தினமே தங்களது திருமணச் சான்றைப் பெற்றுக்கொள்ள முடியும்.

ஆனால், சிறப்புத் திருமணச் சட்டத்தில் இந்த நடைமுறைகள் அனைத்துக்கும் அதிக நாட்களாகும். அந்த ஆவணங்கள் அனைத்தும் அந்த மாவட்டத்தின் 'திருமண அலுவலர்' அல்லது 'கோட்டாட்சியரிடம்' சமர்பிக்கப்படவேண்டும். அவர் பின்பு ஒரு அறிவிக்கையைத் தயார் செய்வார்.

அந்த அறிவிக்கை, குறிப்பிட்ட ஆண் குறிப்பிட்ட பெண்ணை திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்றும் அதற்கு ஆட்சேபம் தெரிவிப்பவர்கள் 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் தெளிவாகத் தெரிவிக்கும்.

அதன் நோக்கம், அந்த ஆணோ பெண்ணோ அந்தத் திருமணத்திற்காக எந்த முறைகேடும் செய்யவில்லை என்றும், அவ்வாறு செய்திருந்ததால் அது அந்த ஒரு மாத காலத்துக்குள் வெளிவரும் என்பதுமே. இந்து திருமணச் சட்டத்தில் அப்படியான சரத்துகள் எதுவும் இல்லை.

அந்த அறிவிக்கை நீதிமன்ற வளாகத்தில் 30 நாட்கள் பார்வைக்கு ஒட்டி வைக்கப்பட்டிருக்கும். அந்த 30 நாட்கள் புகார்கள் அல்லது ஆட்சேபனை எதுவும் இல்லாதபோதுதான் அந்தத் திருமணம் சட்டபூர்வமானதாகக் கருதப்படும்.

அது நேரெதிர் விளைவுகளையும் ஏற்படுத்தும். இப்படியான 'மதக் கலப்புத் திருமணங்கள்' நடைபெறும் தகவல் பொது வெளியில் பகிரப்பட்டால் அது தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்று மணமகளின் தந்தை கூறுகிறார்.

இரு குடும்பங்களின் ஒப்புதலின்பேரிலேயே இந்தத் திருமணம் நடைபெற்றாலும், இந்தத் தகவல் வெளியில் பகிரப்பட்டதால்தான் வெளியாட்களால் போராட்டம் நடத்தப்பட்டது என்றும், அதனால் திருமண வரவேற்பு நிகழ்வுக்கு வந்த விருந்தினர்களை திருப்பி அனுப்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது என்றும் மணமகளின் குடும்பம் கூறுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

சிறப்புத் திருமணச் சட்டம் குறித்த பயம் ஏன்?

இப்போது ஓர் ஆணும் ஒரு பெண்ணும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து, அதற்கு அவர்களின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்.

அநாமதேயமாக என்னிடம் பேசிய ஓர் இந்து நபர் இந்தச் சட்டம் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த தன் பெண் தோழியை திருமணம் செய்துகொள்ள உதவவில்லை என்கிறார்.

சட்டபூர்வமான வயது வந்த, வெவ்வேறு மதங்களை சேர்ந்த மணமக்கள், மதம் மாறாமல் திருமணம் செய்துகொள்ள விரும்பினால், அந்த 30 நாட்கள் அவர்களின் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக இருக்கிறது.

அவர்களுக்கு பெற்றோர் சம்மதம் அவசியமானது. அந்த அறிவிக்கையின் நோக்கம் அந்தத் திருமணத்தின் தகவலைப் பரப்புவதே. மணமகள் வேறு ஊரைச் சேர்ந்தவர் என்பதால், அவரது மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்திலும் அந்த அறிவிக்கை ஒட்டப்படும்.

இதன் விளைவாக, இந்தத் திருமணத்தை நடத்தி முடிக்க யார் மதம் மாறுவது என்பது குறித்த சர்ச்சை இப்போது அவர்களுக்குள் நிலவுகிறது என்று அவர் கூறுகிறார். மதம் மாற அவர்களின் மனங்கள் ஒப்பவில்லை.

சிறப்புத் திருமணச் சட்டம்கூட அந்தத் திருமணத்தை நடத்த உதவவில்லை என்று அந்தக் காதலர்கள் வருத்தமாகவும் ஆதங்கமாகவும் உள்ளனர்.

அவர்களின் காதல் கதை தற்போது 'லவ் ஜிஹாத்' எனும் மூர்கத்தனத்தால் சூழப்பட்டும், சிறப்புத் திருமணச் சட்டத்தின் சிக்கலான பிரிவுகளில் மாட்டிக்கொண்டும் உள்ளது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
திருமண விருந்தில் அழையா விருந்தாளியாக வந்த புலி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :