விஜயநகர சாம்ராஜ்ய கோட்டையில் தங்கப்புதையலை தேடும் பொதுமக்கள்

விஜயநகர சாம்ராஜ்யத்தின் கோட்டையில் தங்கப்புதையலா?

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தின் சென்னன்பள்ளி பகுதியில் உள்ள 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜயநகர சாம்ராஜ்யக் கோட்டையில் புதையலைத் தேடி உள்ளூர்வாசிகள் மண்ணைத் தோண்டிக்கொண்டிருக்கிறார்கள். பல ஊடகங்களில் இது தலைப்புச் செய்தியாகியுள்ளது.

கோட்டையில் தங்கப்புதையல் இருப்பதாக தகவல் பரவியதை அடுத்தே மக்களிடம் இந்த ஆர்வம் தொற்றிக்கொண்டது.

இரண்டு வாரங்களுக்கும் மேலாக, அந்த கோட்டையினுள்ளே அகழ்வாராய்ச்சிப் பணி நடந்தது. இதில், மாநில சுரங்கத்துறை ஈடுபட்டது. உள்ளூர் வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் இது நடைபெற்றது.

பிபிசி செய்தியாளர் டி.எல் நரசிம்ஹா, அந்த கோட்டைக்குச் சென்றுபார்த்து அங்கு என்ன நடக்கிறது என்பது குறித்து, உள்ளூர் வாசிகளிடமும், அதிகாரிகளிடமும் கேட்டறிந்தார்.

இந்த அகழ்வாராய்ச்சிப்பணி குறித்து, தங்களுக்கு நவம்பர் 13ஆம் தேதி தெரியவந்ததாகவும், உள்ளூர் மக்கள் சுமார் 1000 பேர் சேர்ந்து சென்று என்ன நடக்கிறது என்பதை பார்த்ததாகவும் பிபிசியிடம் கூறினார், சபசப்பா என்ற உள்ளூர்வாசி.

"நாங்கள் வந்து பார்க்கும்போது, அந்த இடத்தில், சிறப்பு ஆட்சியர், வருவாய்த்துறை அதிகாரி, டி.எஸ்.பி ஆகியோர் இருந்தார்கள். உள்ளூர் மக்களிடம் தெரிவிக்காமல் நடக்கும் அகழ்வாராய்ச்சிப் பணி குறித்து கேட்டபோது, தாங்கள் அரசு அதிகாரிகள் என்றும், இந்த கோட்டைக்குள் புதையல் இருப்பதாக வரும் செய்திகள் பொய் என்று நிரூபிக்கவே இந்த பணிகள் நடக்கின்றன" என்று கூறியதாக தெரிவிக்கிறார் சபசப்பா.

"கிராம மக்களிடம் அனுமதி பெறாமல் இந்தப் பணிகள் நடப்பது குறித்து கேட்டோம், அதனால், அடுத்தநாள் ஒரு கிராமசபை நடைபெற்றது. 12 பேர் கொண்ட குழுவை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அகழ்வாய்வுப் பணிகள் தொடர்ந்து நடந்தன."

அக்பர்வாலி என்ற உள்ளூர்வாசி, "இந்த இடத்தில் ரகசிய புதையல் இருப்பதாக பரவலாக செய்தி அடிபடுவதுண்டு. அனந்தப்பூரை சேர்ந்த கலேஷ்வர் என்பவர் 2002 ஆம் ஆண்டு இங்கு வந்தார். அவரின் அகழ்வாய்வுப் பணிகளுக்கு உதவி செய்தால், கிடைக்கும் பண்டைய கால தங்க நாணயங்கலிலிருந்து, கிராமத்தில் உள்ள ஒவ்வொறு வீட்டிற்கும் ஒரு தங்க நாணயம் தருவதாக அவர் தெரிவித்தார். எனினும், நாங்கள் குழி தோண்டுவதை காவல்துறை தடுத்து நிறுத்தியது."

"கடந்த 10 முதல் 12 வருடங்களாக, இத்தகைய ஆகழ்வாராய்ச்சிப் பணிகள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. இந்த ஆய்வுகளில், தண்ணீரைத் தவிர வேறு எதுவும் கிடைப்பதில்லை." என்று பிபிசியிடம் தெரிவித்தார் அவர்.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய, வருவாய்த்துறை அதிகாரியான ஒப்லெசு, "இந்த கோட்டையில், புதையலும், விலை உயர்ந்த பொருட்களும் உள்ளதாக பரவும் செய்திகள் குறித்து மக்கள் புகார்அளித்த நிலையில், இந்த தகவல்கள் பொய்யெனக் காட்டவே இப்பணிகள் நடந்தன. தங்களை சாமியார் என்று கூறிக்கொள்ளும் சிலர், இரவுநேரங்களில் தோண்டும் பணியில் ஈடுபடுகிறார்கள் என்றும் அந்த புகார்களில் குறிப்பிடப்பட்டிருந்தது" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்த பகுதியில் சில உலோகச் செல்வங்கள் என்று, தொல்லியலாளர்கள் கூறிய குறிப்பைத் தொடர்ந்து, இந்த தோண்டும் பணிகள், சுரங்க சட்டங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டே நடந்தன" என்றார்.

மத்திய மாநில தொல்லியல் அதிகாரிகள், இந்த கோட்டை, தங்களின் துறைக்கு கீழே வராது என்பதால், அங்கு நடக்கும் அகழ்வாராய்ச்சி பணிகளை தங்களால் தடுக்கவோ, தொடரவோ முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

அந்த ஆய்வின்போது, கிடைத்த கற்கள், எலும்புகள் குறித்து கணக்கிட அவர்கள் அங்கு வந்தது குறித்து கேட்டபோது. அதற்கு, ஆணையரின் அறிவுறுத்தலின் பெயரில், அங்கு கிடைத்த பொருட்கள் குறித்த குறிப்புகளை எழுதுவதற்காக வந்ததாக அவர்கள் கூறினார்.

எந்த தொல்லியல் தொடர்பான இடத்திலும், அகழ்வாராய்ச்சி செய்ய, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் அனுமதி தேவை என்று கூறினார், மாநில தொல்லியல் துறை துணை இயக்குநர் கங்காதர்.

இதற்கிடையே, ஸ்ரீ கிருஷ்ணதேவராயரின் வாரிசு என்று தன்னை குறிப்பிட்டுக்கொள்ளும், திரிவிக்ரமா ராஜூ என்பவர், அந்த கோட்டை தனக்கு சொந்தமானது என்று உரிமை கோரி, வருவாய்த்துறை அதிகாரிகளை அணுகியுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

திரிவிக்ரமா ராஜூ, தெலங்கானாவின் பாசனத்துறையில் உதவிப் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்