2017: ஜல்லிக்கட்டு முதல் ராசா வரை - சுவாரஸ்ய நிகழ்வுகளின் தொகுப்பு!

2017

செயற்கைகோள், குஜராத், 2 ஜி என இந்த ஆண்டு நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளுக்கு குறைவில்லை. அவற்றின் தொகுப்பு.

உலக ஊடகங்களின் தலைப்புச் செய்தியான ஜல்லிக்கட்டுக்கான மெரினா போராட்டம் நடந்தது இந்தஆண்டு தான்.

படத்தின் காப்புரிமை Getty Images

இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-37 (PSLV-C37) செலுத்து வாகனம் மூலம், 104 நானோ செயற்கைக்கோள்கள் பிப்ரவரி 15ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டன.  ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜூன்  23ஆம் தேதி  31 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-38 விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

பஞ்சாப், கோவா, உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் மணிப்பூர்  ஆகிய ஐந்து சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மார்ச் 11-ஆம் தேதி வெளியாயின. அதில்  பஞ்சாப் தவிர மற்ற மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது.

தனி மாநில அந்தஸ்து கோரி டார்ஜிலிங்கில் `கூர்காலேண்ட் போராட்டம்`  தீவிரமடைந்ததும் இதே ஆண்டில்தான்.

அதிக எதிர்ப்பையும், எதிர்பார்ப்பையும் ஒருங்கே சந்தித்த  ஜி.எஸ்.டி. எனும் சரக்கு மற்றும் சேவை வரி ஜூன் 30 நள்ளிரவில் நாடு முழுவதும்  அமலுக்கு வந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

குடியரசு தலைவர்  பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் இந்த ஆண்டு நிறைவடைந்தது. குடியரசு தலைவர் தேர்தலுக்கு பா.ஜ.கவின் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக ராம்நாத் கோவிந்த் போட்டியிட்டார். 

மீரா குமாரை எதிர் கட்சிகள் களமிறக்கின. இந்த தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்று   ஜூலை மாதம் 25 ஆம் தேதி இந்தியாவின் குடியரசுத் தலைவராக  பொறுப்பேற்றார்.  அதுபோல, குடியரசு துணை தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்ட வெங்கைய நாயுடு வெற்றி பெற்றார்.

ஜுலை 27- ஆம் தேதி, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடனான கூட்டணியை முறித்தது. நிதிஷ் குமார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பா.ஜ.க நிதிஷ்குமாருக்கு ஆதரவளித்ததை அடுத்து அடுத்த 24 மணி நேரத்தில் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார் நிதிஷ். துணை முதல்வராக சுஷில் குமார் மோடி பொறுப்பேற்றார்.

ஆக்ஸ்ட் 7-ஆம் தேதி  கேரள உயர் நீதிமன்றம் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீது இருந்த வாழ்நாள் தடையை ரத்து செய்தது.

ஆகஸ்ட் 22 ஆம் தேதி  இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறி உச்சநீதி மன்றம் முத்தலாக் முறையை ரத்து செய்தது. முஸ்லிம் பெண்கள் மணவிலக்கு தொடர்பாக சட்டம் இயற்ற நாடாளுமன்றத்தை அறிவுறுத்தியது.

ஆகஸ்ட் 25 ஆம் தேதி, பாலியல் வழக்கில் 'தேரா சச்சா செளதா' என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கை 'குற்றவாளி' என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பின் இதே மாதம் 28  ஆம் தேதி, நீதிமன்றம் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.  இதன் காரணமாக வெடித்த கலவரங்களினால் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் உயிரிழந்தனர்.

செப்டம்பர் 5 ஆம் தேதி  பெங்களூரில் சமூக ஆர்வலரும் பத்திரிகையாளருமான கெளரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images

செப்டம்பர் 29 ஆம் தேதி மும்பையின் எல்ஃபின்ஸ்டோன் சாலை ரயில் நிலையத்தில் மக்கள் நடைபாதை மேம்பாலத்தில் திடீரென நெரிசல் ஏற்பட்டதில் மூச்சுத்திணறி  29 பேர் உயிரிழந்தனர்.

நவம்பர் 18 சீனாவில் நடந்த உலக அழகி போட்டியில் இந்தியாவின  மானுஷி சில்லர் மிஸ் வேர்ல்டாக தேர்ந்தெடுக்கப்பட்டார்'

டிசம்பர் முதல் வாரத்தில் ஒகி புயல் கன்னியாகுமரி மற்றும் கேரளாவின் கடலோர பகுதிகளை தாக்கியது. ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலில் தத்தளித்தனர். அரசு தங்களை கைவிட்டுவிட்டதாக மீனவர்கள் கோபமடைந்தனர்

டிசம்பர் 16-ல் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார்.

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தல் முடிவுகள் டிசம்பர்  18 வெளியாயின. இரண்டு தொகுதிகளிலும் பா.ஜ.க வெற்றி பெற்றது.

டிசம்பர் 21 ஆம் தேதி 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவும், மாநிலங்களவை எம்.பி கனிமொழியும் விடுதலையானார்கள்.

இந்த ஆண்டு கொச்சி, லக்னெள, ஹைதராபாத் ஆகிய ஊர்களில் மெட்ரோ சேவை தொடங்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :