விதவை போல காட்சியளித்தார் குல்பூஷன் ஜாதவின் தாய்: சுஷ்மா ஸ்வராஜ்

இந்திய உளவாளி என்ற குற்றச்சாட்டின்பேரில் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் குல்புஷன் ஜாதவின் தாய் மற்றும் மனைவி, இஸ்லாமாபாத்தில் உள்ள சிறையில் அவரைச் சந்தித்த சம்பவத்தை ஒரு பிரசாரக் கருவியாக பாகிஸ்தான் பயன்படுத்திக்கொண்டது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை RSTV
Image caption சுஷ்மா ஸ்வராஜ்

இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வியாழன் காலை அவர் உரையாற்றினார். அவரது உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் பின்வருமாறு.

  • சர்வதேச நீதிமன்றம் குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ள முடிவின் மூலம், அவரின் உயிருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அந்த நீதிமன்றத்தில் இந்த வழக்கில் இன்னும் வலிமையான வாதங்களை முன்வைத்து, அவரது மரண தண்டனையை ரத்து செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
  • குல்பூஷன் ஜாதவின் குடும்பத்தினருடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம். அதனால்தான், அவர்களை குல்பூஷன் சிறையில் சந்திக்க ஏற்பாடு செய்ய முடிந்தது. இருதரப்பு வெளியுறவு அதிகாரிகளின் பேச்சுவார்த்தை மூலம் தொடர்ந்து இத்தகைய முயற்சிகளை மேற்கொள்வோம்.
படத்தின் காப்புரிமை PAKISTAN FOREIGN MINISTRY
Image caption தனது தாய் மற்றும் மனைவியுடனான சந்திப்பிபோது குல்புஷன் ஜாதவ்
  • குல்பூஷன் ஜாதவ் தனது குடும்பத்தினரைச் சந்தித்தது இந்த முயற்சிகளில் ஒரு முன்னேற்றம்தான். எனினும், இரு தரப்பும் ஒப்புக்கொள்ளப்பட்ட வகையில் இந்தச் சந்திப்பு நிகழவில்லை என்பது வருத்தமளிக்கிறது. குல்பூஷனை அவரது தாயும் மனைவியும் 22 மாதங்கள் கழித்து சந்தித்த நிகழ்வை, ஒரு பிரசாரக் கருவியாகப் பாகிஸ்தான் பயன்படுத்திக்கொண்டது.
  • பலமுறை வலியுறுத்திக்கேட்டும், குல்பூஷன் ஜாதவின் மனைவியின் காலணிகள் அவரிடம் திரும்ப வழங்கப்படவில்லை. அவற்றில் கேமரா பொறுத்தப்பட்டிருந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் கூறின. அதைவிட பெரிய தவறு வேறு எதுவும் இருக்க முடியாது. அதே காலணிகளை அணிந்து கொண்டுதான் அவர்கள் இரண்டு விமானங்களில் பயணித்தனர்.
Image caption சிறையில் குல்புஷனை சந்திக்கச் செல்லும் அவரது தாய் மற்றும் மனைவி
  • குல்பூஷன் ஜாதவின் குடும்பத்தினரிடம் பாகிஸ்தான் அதிகாரிகளால் மனிதாபிமான நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. அவர்களின் மனித உரிமைகள் தொடர்ந்து மீறப்பட்டன. அவர்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகினர்.
  • குல்பூஷனின் தாயார் சேலை மட்டுமே அணியும் வழக்கம் உடையவர். அவரை வற்புறுத்தி சல்வார் அணிய வைத்தனர்.
  • குல்பூஷன் ஜாதவின் தாய் மற்றும் மனைவியின் தாலி, வளையல் மற்றும் பொட்டு வற்புறுத்தி அகற்றப்பட்டதால், அவர்கள் விதவைகள் போன்ற தோற்றத்தில் காட்சியளித்தனர். தன் தாயை அக்கோலத்தில் பார்த்ததும் தவறாக ஏதேனும் நிகழ்ந்துவிட்டதோ என்று நினைத்து 'அப்பா எப்படி இருக்கிறார்?' என்று குல்பூஷன் கேட்டார்.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :