முத்தலாக் விவகாரத்தில் பாஜக ஆர்வம் காட்டுவது ஏன்? கவிஞர் சல்மா கேள்வி

முத்தலாக் சட்டவிோதமானது என்ற சட்டமசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, அவசர அவசரமாக இதை பா.ஜ.க செய்ய காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

முத்தலாக் முறை மூலம் இஸ்லாமிய பெண்களுக்கு விவாகரத்து அளித்தால் மூன்றாண்டு சிறை தண்டனை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கடும் எதிர்ப்புகளுக்கு இடையே இம்மோதாவை சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார்.

இது குறித்து பிபிசி தமிழிடம் கருத்துத் தெரிவித்த கவிஞர் சல்மா, ''நாட்டில் பெண்களுக்கு எதிராக பல்வேறு பிரச்சனைகள் இருக்க, முத்தலாக் விவகாரத்தில் மட்டும் பா.ஜ.க அதிக ஆர்வம் காட்டுவது ஏன்? இவ்வாறான சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் முன், இதில் அடங்கும் அம்சங்கள் குறித்து பெண்கள் அமைப்புகளிடம் ஆலோசனை செய்யப்பட்டதா என்று தெரியவில்லை'' எனக் கூறினார்.

படத்தின் காப்புரிமை FACEBOOK/SALMA
Image caption கவிஞர் சல்மா

"சமூகத்தில் அனைத்து மத பெண்களுக்கும் பிரச்சனைகள் உள்ளன. இஸ்லாமிய பெண்களை பாதுகாக்கின்றோம் எனக் கூறும் பா.ஜ.க, சிறுபான்மை மக்களின் அடையாளங்களை அழிப்பதையே கொள்கையாக வைத்துள்ளது" என்று குற்றம் சாட்டுகிறார் கவிஞர் சல்மா.

முத்தலாக் விவகாரத்தை இவ்வளவு அவசரமாக பா.ஜ.க கையில் எடுத்ததற்கு பின்னால் உள்நோக்கம் உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டுகிறார்.

முத்தலாக் மட்டுமே இஸ்லாமிய பெண்களின் பிரச்சனை அல்ல

உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையின் பேரில்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்த கவிஞர் சல்மா, உச்சநீதிமன்றம் கூறிய அனைத்தையும் பா.ஜ.க செய்துள்ளதா என்று கேள்வி எழுப்பினார்.

படத்தின் காப்புரிமை NOAH SEELAM

"முத்தலாக் மட்டுமே இஸ்லாமிய பெண்களின் பிரச்சனை அல்ல. அவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ளதாக கூறிய ரங்கநாத் மிஸ்ரா மற்றும் சச்சர் கமிட்டி, இஸ்லாமிய பெண்கள் முன்னேற்றத்திற்காக சில பரிந்துரைகளை வழங்கியது. அதனை செயல்படுத்தி அவர்களுக்கு உரிய கல்வி கிடைக்க வழிவகுத்தால் பல இஸ்லாமிய பெண்களின் வாழ்க்கை மேம்படும்" என்று அவர் கூறினார்.

இவ்வாறு இஸ்லாமிய பெண்களுக்கு பல பிரச்சனைகள் இருக்க, மிகக் குறைந்த அளவிலான பெண்கள் மட்டுமே பாதிக்கப்படும் இவ்விவகாரத்தில் ஆர்வம் காட்டுவது பா.ஜ.க மீதான சந்தேகத்தை அதிகப்படுத்துவதாகவும் சல்மா குறிப்பிட்டார்.

இஸ்லாமியக் கொள்கையை மாற்ற யாருக்கும் உரிமையில்லை

முத்தலாக் சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறும் சென்னையை சேர்ந்த குடும்பத்தலைவியான ஷபானா, எங்கள் இஸ்லாமியக் கொள்கையை மாற்ற யாருக்கும் உரிமையில்லை என்றார்.

புனித குர்ஆனில் கூறப்பட்டுள்ளதை மட்டுமே பின்பற்றுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை TAUSEEF MUSTAFA

முத்தலாக் மூலம் விவாகரத்து பெறுவது தவறென்றால், நீதிமன்றம் விவாகரத்து அளித்தால் மட்டும் சரியாகிவிடுமா எனவும் ஷபானா கேள்வி எழுப்பியுள்ளார்.

"விவாகரத்து வழங்கும் முன், நீதிமன்றத்திற்கு பல விதிகள் மற்றும் பல கட்ட விசாரணைகள் இருப்பது போல, முத்தலாக்குக்கும் உண்டு. உடனடியாக யாருக்கும் முத்தலாக் அளிக்கப்படாது" என்று குறிப்பிட்ட ஷபானா அதற்கும் பல விதிகள் உள்ளதாகக் கூறுகிறார்.

மத- அரசியல் சாயல் வேண்டாம்

குடும்ப அமைப்பில் இருக்கும் பெண்கள், அந்த பந்தம் தொடருமா இல்லையா என்ற பயமில்லாமல், பெண்களுக்கு பாதுகாப்பு தர வழிவகை செய்யும் சட்டத்தை வரவேற்பதாக குடும்பநல வழக்கறிஞர் ஆதிலஷ்மி லோகமூர்த்தி கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை FACEBOOK/ADHILAKSHMI
Image caption வழக்கறிஞர் ஆதிலஷ்மி லோகமூர்த்தி

ஆனால் இந்த சட்டத்தின் நடைமுறை பிரச்சனைகளை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மத ரீதியாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ பார்க்காமல், ஒரு பெண்ணின் கெளரவத்தை, உரிமையை பாதுகாக்கும் விஷயமாக பார்க்கும் போது இச்சட்டம் ஏற்புடைய ஒன்று தான் என்றும் வழக்கறிஞர் ஆதிலஷ்மி கூறுகிறார்.

முஸ்லிம்கள் விவாகரத்து செய்ய கடைபிடிக்கும் முத்தலாக் நடைமுறை, அரசியல் சட்டவிரோதமானது என்று இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது. குறுஞ்செய்திகள், மின்னஞ்சல், தொலைபேசி அழைப்புகள் மூலமும் விவாகரத்து செய்யமுடியாது என்று அரசியல் சாசன அமர்வு உறுதிபடுத்தியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :