நாளிதழ்களில் இன்று: ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இணைப்புக்குப் பிறகு முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர்

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றை இங்குத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும், நீட் நுழைவுத் தேர்வால் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பை இழந்ததால், கடந்த செப்டம்பர் மாதம் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் சகோதரர் சதீஷ்குமாருக்கு தமிழக அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு தமிழக அரசு வழங்கியுள்ள ஏழு லட்சம் ரூபாய் இழப்பீடு, அனிதாவின் குழுமூர் கிராமத்தில் 15 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும் நூலகத்திற்காக செலவிடப்படும் என்று அவரது இன்னொரு சகோதரர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

தமிழக சட்டமன்றத்தின் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 8 அன்று ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

அதிமுகவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான அணிகள் இணைந்த பிறகு நடக்கும் முதல் சட்டமன்றத் கூட்டத்தொடர் இதுவாகும்.

தி இந்து தமிழ்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளது குறித்து தலையங்கம் எழுதியுள்ள தி இந்து தமிழ் நாளிதழ், இந்திய வரலாற்றில் மிகப்பெரிய ஊழல் என்று பேசப்பட்ட விவகாரத்தில், மிகைப்படுத்தப்பட்ட மதிப்பீட்டை எப்படி அன்றைய தலைமைக் கணக்காயர் வினோத் ராய் தெரிவித்தார் என்றும், என்ன விதமான நம்பகத்தன்மையை தலைமைக் கணக்காயர் அலுவலகம் கொண்டுள்ளது என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை CHANDAN KHANNA

இந்தத் தீர்ப்பால் ஒவ்வொரு தரப்பும் சுய ஆய்வு செய்துகொள்ள வேண்டிய நிர்பந்தம் உண்டாகி இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி

திருமலையில் (திருப்பதி) ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் எதுவும் நடைபெறாது என்று தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் திருமலையில் எப்போதும் சிறப்பு அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். ஆனால், ஆந்திர மாநில அற நிலையத் துறை ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் எவ்விதமான அலங்காரங்களும் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா

கடன் சுமையில் இருக்கும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு, அவரது மூத்த சகதோரர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நிதியுதவி வழங்கவுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

ரூபாய் 45,000 கோடி அளவுக்கு கடன் இருப்பதால் திவால் ஆகும் நிலையில் உள்ள அனிலின் ரிலையன்ஸ் கம்ம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு முகேஷின் ரிலையன்ஸ் ஜியோ சுமார் 23,000 கோடி ரூபாய் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்