'மன்னன் முதல் குசேலன்' வரை: ரஜினி படங்களின் அரசியல் வசனங்கள்

  • 30 டிசம்பர் 2017

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் குறித்த முடிவு ஒன்றை வரும் 31 ஆம் தேதியன்று அறிவிப்பதாக கூறியுள்ளார். நாளைய தினம் ரஜினிகாந்த் அரசியலில் நுழைவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பாரா என்பதை அறிய ரஜினி ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்த் அவரது திரைப்படங்களில் மறைமுகமாக அரசியல் பேசியதாக கூறப்படும் வசனங்கள் குறித்த ஒரு தொகுப்பை வாசகர்களுக்கு அளிக்கிறோம்.

படத்தின் காப்புரிமை MUTHU

1991-ல் தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியில் அமர்ந்த பிறகு சில காரணங்களால் ரஜினிக்கும் ஜெயலலிதாவுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டு வந்தன. இதையடுத்து அடுத்தடுத்த ஆண்டுகளில் ரஜினி நடித்த படங்களில் அரசியல் குறித்து ரஜினி நேரடியாகவோ மறைமுகமாவோ பேசுவதாகவோ அல்லது பாடல் வரிகள் மூலம் அது குறித்த கருத்துக்களோ இடம்பெற்றுவந்தன. தளபதி திரைப்படத்துக்கு பிறகே இத்தகைய வசனங்கள் அதிகளவில் வரத் தொடங்கின.

மன்னன்

1992-ல் வெளியான மன்னன் திரைப்படத்தில் தொழிற்சங்க தேர்தலில் நிற்பது தொடர்பான ஒரு வசனத்தில் ''அய்யயோ இல்லைங்க... எனக்கு இந்தத் தேர்தல், தலைவர் பட்டம் அப்படினா ரொம்ப பயமுங்க. எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் தேர்தலில் நிக்கணும் போட்டியில் நிக்கணும் அப்பதான் நல்ல தலைவர் உருவாக முடியும். நின்னுடு. இரண்டு கை தட்டினாதான் சத்தம் வரும் ஒரு கை வீசினா அடிதான் விழும். அடிக்கிற கைய தடுக்கணும்; அணைக்கிற கைய முத்தம் கொடுக்கணும் நீ நின்னுடு அப்படி இப்படினு சொல்லி என்ன குழப்பிட்டாங்க. நானும் நின்னுட்டேங்க'' என ரஜினி பேசுவதாக ஒரு வசனம் வர, பின்னர் அந்த தேர்தலில் ரஜினி வெற்றியும் பெறுவதாக காட்சியமைக்கப்பட்டிருந்தது.

அதையடுத்து வந்த அண்ணாமலை திரைப்படத்தில் ''என் பாட்டுக்கு என் வேலைய செஞ்சுகிட்டு சிவனேனு போய்ட்டிருக்கேன். என்னை வம்புக்கிழுக்காதீங்க. வம்புக்கிழுத்தா நான் சொன்னதையும் செய்வேன். சொல்லாததையும் செய்வேன்'' என்ற வசனம் இடம்பெற்றிருந்தது.

மேலும், ''பணம் சம்பாதிக்கிறதுக்கு ஆயிரம் வழி இருக்கு; ஆயிரம் தொழில் இருக்கு அதற்கு இந்த புனிதமான அரசியலை பயன்படுத்தாதீங்க'' என்ற வசனங்களை பேசியிருந்தார் ரஜினிகாந்த்.

உழைப்பாளி

1993 ஆம் ஆண்டு வெளியான உழைப்பாளி திரைப்படத்தில் '' சில பேர் சொல்லிட்டு செய்யறாங்க, சில பேர் செஞ்சிட்டு சொல்றாங்க... நாம செய்யறதும் தெரியாது சொல்றதும் தெரியாது'' என ரஜினி வசனம் பேசியிருந்தார்.

அதற்கடுத்த வருடங்களில் ஜெயலலிதா - ரஜினி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தில் இருந்ததாக கூறப்பட்ட சமயத்தில், ரஜினி கட்சி தொடங்கவேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தன.

படத்தின் காப்புரிமை Getty Images

முத்து

பாட்சா திரைப்படத்தில் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு 1996 மே மாதம் நடக்க இருந்த தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 1995ம் ஆண்டில் அக்டோபர் மாதம் ரஜினி நடித்து வெளியான முத்து திரைப்படத்தில் பல அரசியல் சார்ந்த வசனங்கள் இடம்பெற்றிருந்தன.

குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ பாடலில் ''என்ன கட்சி நம்ம கட்சி ?'' என நடிகை மீனாவுடன் ஆடும் பெண்கள் குழு கேட்க,

''கட்சியெல்லாம் இப்போ நமக்கெதுக்கு காலத்தின் கையில் அது இருக்கு'' என வேட்டி சட்டையில் புடை சூழ நடந்து வரும் ரஜினிகாந்த் சொல்ல, அதற்கு மீனா ''கனியட்டும் காலம் நேரம் உனக்கு என்னவோ திட்டம் இருக்கு'' என சொல்லும்படி பாடல் வரிகள் அமைக்கப்பட்டிருந்தது.

அதே படத்தில் ''நான் எப்போ வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது, ஆனால் வரவேண்டிய நேரத்தில் கரெக்ட்டா வருவேன்'' எனும் வசனமும் இடம்பெற்றிருந்தது.

முத்து திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு 1996 தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக ஒட்டுபோடும்படி ரஜினி பேசிய ஒரு ஐந்து நிமிட காணொளி வெளியிடப்பட்டது. அந்த தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. திமுக கூட்டணி வென்றது.

அருணாச்சலம்

1997 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி இயக்கி, ரஜினி நடித்து வெளியான அருணாச்சலம் திரைப்படத்தில் ரஜினி ஒரு கட்டத்தில் அரசியல் கட்சி ஆரம்பிப்பார். 'சிங்கமொன்று புறப்பட்டதே' என துவங்கும் அப்பாடல் முழுவதும் ரஜினி கதாபாத்திரத்தை உயர்த்திப்பிடிப்பதாக எழுதப்பட்டிருக்கும். அதில் சில வரிகள் இங்கே

"சிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு நல்ல

காலம் பொறந்திருக்கு நேரம் கனிஞ்சிருக்கு

ஊரும் தெளிஞ்சிருக்கு உண்மை புரிஞ்சிருக்கு

சிங்கம் ஒன்று புறப்பட்டதே

உன்னோடு ரத்தம் சிந்த உண்மையுள்ள கூட்டம் உண்டு

உன்னோடு ரத்தம் சிந்த உண்மையுள்ள கூட்டம் உண்டு

ரெண்டில் ஒன்று பார்க்கும் வரைக்கும்

அட ரெண்டு கண்ணில் இல்லை உறக்கம்."

இதே பாடலில் இயக்குனர் சுந்தர் சி உட்பட சிலர் ரிப்போர்ட்டர் கதாபாத்திரத்தில் ரஜினியிடம் சில கேள்விகளை கேட்பார்கள்.

ரிப்போர்ட்டர்: ''சார் நீங்க அரசியல் கட்சி ஆரம்பிக்க என்ன காரணம்?''

ரஜினி: ''சந்தர்ப்பம் சூழ்நிலை''

ரிப்போர்ட்டர்: ''ஜெயிச்சா மக்களுக்கு என்ன செய்வீங்க ?''

ரஜினி: ''நான் சொல்ல மாட்டேன் செஞ்சு காட்டுவேன்'' என வசனம் பேசியிருப்பார்.

படத்தின் காப்புரிமை PADAYAPPA MOVIE

படையப்பா

இதையடுத்து வெளிவந்த படையப்பா திரைப்படத்தில் ''என் வழி தனி வழி.. மறக்காதீங்க'' என்று பன்ச் பேசியிருந்தார் ரஜினிகாந்த். அந்தத் திரைப்படத்தின் ஒரு காட்சியில் ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் அரசியல்வாதியாக நடித்திருந்தார். அதில் இடம்பெற்ற வசனங்கள் இங்கே .

ராஜ் பகதூர்: ''நான் அரசியலுக்கு வாவா என்கிறேன். இவர் வரமாட்டிக்கிறார்''

ரஜினி: '' ஏன் நான் நல்லா இருக்கறது உனக்கு பிடிக்கலையா''

ரவி ராகவேந்திரா: ''நீங்க மட்டும் நல்லாருந்தா போதுமா? மக்கள் நல்லாருக்கனும்ல? ''

ராஜ் பகதூர்: '' நல்லா சொன்னீங்க''

ரவி ராகவேந்திரா: ''ஆனா ஒன்னு இவரு உங்க கூட வந்தா நீங்க மாத்திடப் போறீங்க?''

ராஜ்பகதூர்: ''இவனா மாறுவான் எங்களை எல்லாம் மாத்திருவான்''

ரவி ராகவேந்திரா: அதும் கரெக்டு தான்'' ரஜினியை பார்த்து '' ஏங்க உங்களுக்குத் தான் எல்லாத்துலயும் வெற்றியாச்சே இதுலயும் பூந்து பார்த்துற வேண்டியதானே'' என கேட்பார்.

ரஜினிகாந்த்: ''நம்ம கையில என்ன இருக்கு ரவி ? எல்லாம்...'' என்றவாறே வானை நோக்கி கைவிரலை உயர்த்திக் காண்பிப்பார்.

ராஜ்பகதூர்: ''ஆ..ஊன்னா கைய மேல தூக்கிடு''

ரஜினிகாந்த்: '' இப்ப என்ன பார்ட்டிய ஆரம்பிக்கலாமா?'' என கேட்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

பாபா

படையப்பாவைத் தொடர்ந்து 2002-ல் வெளிவந்த பாபா திரைப்படத்திலும் அரசியல் தொடர்பான வசனங்கள் இடம்பெற்றிருந்தன. அந்த படம் தோல்வியடைந்தது.

'சக்திகொடு' என்ற பாடலில் பின்வரும் வரிகள் அமைக்கப்பட்டிருந்தது.

''முடிவெடுத்த பின்னால் நான் தடம் மாற மாட்டேன்

முன் வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேன்

என்னை நம்பி வந்தவரை ஏமாற்ற மாட்டேன்

வெறும் ஏணியாய் நான் இருந்து ஏமாற மாட்டேன்

உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்

உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்

நான் உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடிவிட மாட்டேன்

கட்சிகளை பதவிகளை நான் விரும்ப மாட்டேன்

காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்''

இதே படத்தில் '' என் பேரு பாபா எந்தப் பக்கமும் சாயாத பாபா'' என ஒரு வசனமும் இடம்பெற்றிருந்தது. அதன் பிறகு அரசியல் வசனங்கள் ரஜினி திரைப்படங்களில் சற்றே குறையத்துவங்கியது.

குசேலன்

2008-ல் வெளிவந்த குசேலன் திரைப்படத்தில் ஒரு காட்சியில் சுந்தர் ராஜன் '' அதென்ன அரசியலுக்கு வர்றேங்குறீங்க வரலைங்குறீங்க. வர வேண்டிய நேரத்தில் கரெக்ட்டா வருவேங்கிறீங்க. நாளைக்கு என்ன நடக்கும்னு தெரியாதுங்குறீங்க, மீறி ஏதாவது கேட்டா மேல கை காட்டுறீங்க. எதுக்கு நீங்களும் குழம்பி எங்களையும் குழப்புறீங்க? நீங்க வர்றீங்களா இல்லையா தெளிவா சொல்லுங்க'' எனக் கேட்பார்.

''அந்த வசனங்கள் ஒரு படத்துல யாரோ எழுதின வசனம். அதை நான் பேசியிருக்கேன். அதை நீங்கள் சீரியஸாக எடுத்துக்கொண்டால் நான் என்ன செய்ய முடியும்'' என ரஜினிகாந்த் பதிலளித்திருப்பார்.

இந்த திரைப்படத்துக்கு பிறகு நடித்த திரைப்படங்களில் நேரடி அரசியல் வசனங்கள் எதுவும் ரஜினிகாந்த் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்