ஐக்கிய அரபு எமிரேட்டின் முதல் இந்திய பெண் மருத்துவர்

சுலேக்கா தாவூத்
படக்குறிப்பு,

ஐக்கிய அரபு எமிரேட்டில் எவ்வித அடிப்படை கட்டமைப்பு வசதியும் இல்லாதபோது தனது மருத்துவ பயிற்சியை ஜுலேக்கா தாவூத் பெற்றார்

இந்தியாவை சேர்ந்த ஜுலேக்கா தாவூத் ஐக்கிய அரபு எமிரேட்டின் முதல் பெண் மருத்துவராகவும், அதன் சுகாதாரத்துறையை மாற்றியதில் பெரும்பங்கு ஆற்றிவராக பரவலாக அறியப்படுகிறார்.வர் பிபிசி ஹிந்தியின் ஜுபைர் அகமதுவை சந்தித்தார்.

தற்போது 80 வயதாகும் மருத்துவர் ஜுலேக்கா, கடந்த 1963ம் ஆண்டில் தான் துபாய்க்கு சென்ற நாளை தெளிவாக நினைவு கூர்கிறார்.

"நான் இங்கே தரையிறங்கியபோதுதான் எந்த விமான நிலையமும் இல்லை என்பதை கண்டறிந்தேன். வெறும் ஓடுதளம் மட்டும்தான் இருந்தது. நாங்கள் இறங்கியவுடன் தாங்க முடியாத அளவிலான வெப்ப அலை வீசியது" என்று அவர் நினைவு கூர்கிறார்.

தற்போது அரசினால் நடத்தப்படும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டின் விரிவான சுகாதார அமைப்பை பார்க்கும்போது, ஒரு காலத்தில் ஐக்கிய அரபு எமிரேட்டில் முறையான மருத்துவமனைகள் இல்லாததால், மற்ற நாடுகளில் இருந்து மருத்துவர்களை அழைத்து வந்தனர் என்பதை நம்புவது கடினமாகும்.

மருத்துவ உதவிக்காக ஐக்கிய அரபு எமிரேட் பரிதவித்த நாட்கள் குறித்த நினைவுகளின் களஞ்சியமாக மருத்துவர் ஜுலேக்கா உள்ளார். காசநோய் முதல் வயிற்றுப்போக்கு வரை, எண்ணற்ற நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். பிரசவம் பார்ப்பதற்கு எந்த பெண் மருத்துவரும் இல்லை என்பதுடன் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

"துபாய்க்கு வருவதற்கு முன்னர் இதுபற்றி நான் கேள்விப்பட்டதேயில்லை. எனவே, இங்கு வந்த பிறகுதான் எவ்வளவு கடினமான சூழ்நிலை நிலவுகிறது மற்றும் அதை கையாள்வது எவ்வளவு கடினமானது என்பதை உணர்ந்தேன்."

படக்குறிப்பு,

மருத்துவர் தாவூத் முதலில் மகப்பேறு மருத்துவராவதற்கே பயின்றார்.

நகரத்திற்கென விமான நிலையமோ அல்லது துறைமுகமோ இல்லை. குளிர்சாதனப் பெட்டியின் பயன்பாடு என்பது தொலைதூர கனவாக இருந்தது. கான்கிரீட் சாலைகள் அல்லது ஒரு நிலையான மின்சாரம் ஆகிய அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் கூட இல்லை. சிரியா மற்றும் லெபனான் போன்ற பல நாடுகளில் இருந்து தாவூத் உடன் வந்த மருத்துவர்கள் அங்கிருந்த நிலைமைகளின் கீழ் பணியாற்ற மறுத்து திரும்பி சென்றனர்.

ஆனால், மருத்துவர் தாவூத்திற்கு கட்டாயம் செய்தே ஆக வேண்டிய ஒரு பணியிருந்தது.

"இங்குள்ள மக்களுக்கு நான் தேவை என்பதை உணர்ந்ததால் என் பணியை தொடர்ந்தேன்" என்று அவர் கூறுகிறார்.

மகப்பேறு மருத்துவராக பயிற்சி பெற்ற இவர், தவிர்க்க முடியாத காரணங்களால் துபாயில் பொது மருத்துவராக செயல்படும் நிலைக்கு தள்ளப்பட்டார். "தீக்காயங்கள், பாம்புக் கடி, தோல் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் பலதரப்பட்ட சிகிச்சைகளுக்கு" மருத்துவம் பார்க்க போதிய மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் அவற்றையும் கூடுதலாக நிர்வகிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

இந்தியாவின் மேற்கு மாநிலமான மகாராஷ்டிராவை சேர்ந்த மருத்துவர் தாவூத்துக்கு துபாய் பயணம் என்பது திட்டமிடப்பட்ட ஒன்றல்ல. நாக்பூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்ற உடனேயே குவைத்தில் அமெரிக்க மிஷனரி ஒன்றில் பணிபுரிவதற்கு விண்ணப்பித்தார். பிறகு துபாய்க்கு சென்றார்.

ஆனால், பழைமைவாத முஸ்லீம் சமுதாயத்திலிருந்து ஒரு திருமணமாகாத இளம் பெண் எப்படி வெளிநாடுகளில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டார்? என்பது அந்த நேரத்தில் நினைத்துப்பார்க்க முடியாத விடயம் என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார்.

தனக்கு ஆதரவான பெற்றோர் கிடைக்கப்பெற்றது அதிர்ஷ்டவசமானது என்றும் "என் பெற்றோருக்கு முறையான கல்வி இல்லை, ஆனால் அவர்கள் திறந்த மனதுடன் இருந்ததுடன் என்னை துபாய் செல்வதற்கு ஊக்குவித்தார்கள்," என்கிறார் அவர்.

படக்குறிப்பு,

பாலைவனத்தால் சூழப்பட்ட ஒரு தற்காலிக மருத்துவமனையில் இவர் தனது முதல் பணியை ஆரம்பித்தார்.

பரந்த பாலைவன பகுதியில் பழங்குடி மக்கள் வசித்து வந்த இடத்தில் இருந்த ஒரு தற்காலிக மருத்துவமனையில்அவர் தனது முதல் வேலையை செய்யவேண்டியிருந்தது.

அங்கு ஒரு சில மாதங்கள் வேலை செய்த பிறகு, இவரது முதலாளிகள் ஷார்ஜாவில் தொடங்க இருந்த ஒரு சிறிய மருத்துவமனையில் வேலை செய்ய வேண்டும் என்று தாவூத்திடம் தெரிவிக்கப்பட்டது.

"துபாயில் இருந்து 12 கிலோ மீட்டர் அப்பால் உள்ள ஷார்ஜாவுக்கு செல்ல எந்த விதமான சாலைகளும் கிடையாது என்பதால் பாலைவனத்தின் வழியே பயணம் செய்தோம். எங்களுடைய வாகனங்கள் அடிக்கடி மண்ணில் சிக்கினக்கொண்டன" என்று அவர் நினைவு கூர்கிறார்.

அவரது வாழ்க்கை முன்னேற்றமடைந்ததால், அவர் இன்னும் அதிகளவு அங்கீகாரத்தை பெற்றார். உள்ளூர் பெண்கள் இவரை அப்பகுதி பெண்களுக்கு கிடைத்த ஒரு "சிறப்பு பரிசாக" பார்த்ததுடன், இவருக்கு பல விருதுகளையும் வழங்கினர்.

1971 இல் ஐக்கிய அரபு எமிரேட் உருவாக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட மருத்துவ வசதிகளின் விரைவான வளர்ச்சியுடன் இணைந்து மருத்துவர் தாவூத்தும் வளர்ந்தார்.

திடீரென வளர்ச்சிப் பாதையில் குதித்த இவர், தொழில்முனைவரானார். இவரது பிறந்த ஊரான நாக்பூரில் ஒரு புற்றுநோய் மருத்துவமனை உட்பட மூன்று பெரிய மருத்துவமனைகளுக்கு முதலாளியாக உள்ளார்.

படக்குறிப்பு,

இன்று மூன்று பெரிய மருத்துவமனைகளின் முதலாளியாக மருத்துவர் தாவூத் உள்ளார்.

"ஐக்கிய அரபு எமிரேட் உருவாக்கப்பட்ட பின்னர், வாழ்வின் அனைத்துப் பிரிவுகளிலும் விரைவான முன்னேற்றத்தை அடைந்தனர். நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் கண்டுவரும் விரைவான வளர்ச்சியின் பயனாளியாக நான் இருக்கிறேன்" என்று அவர் கூறினார்.

மருத்துவர் தாவூத்திற்கு ஐக்கிய அரபு எமிரேட் மக்கள் மீது பெரும் மரியாதை உள்ளது. மருத்துவமனைகளை அமைப்பதற்கு தன்னை ஊக்குவித்த நாட்டின் ஆட்சியாளர்களுக்கு தனது இதயத்தில் ஒரு சிறப்பிடம் இருப்பதாக ஜுலேக்கா கூறுகிறார்.

அரை நூற்றாண்டுக்கும் மேலான இடைவிடாத பணியை செய்த மருத்துவர் சுலேக்கா இறுதியாக சிறிது ஓய்வெடுக்க முடிவு செய்தார். அவர் இப்பொழுது "அரை ஓய்வு பெற்ற" வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். தன்னுடைய ஷார்ஜா மருத்துவமனையில் ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் மட்டுமே செலவிடுகிறார்.

இவர் இன்னும்கூட தனது இந்திய பாஸ்போர்ட்டை தக்கவைத்துள்ளதுடன், தனது பிறந்த நாட்டில் பலமான உறவுகளை வைத்திருக்கிறார்.

ஆனால் அவர் திரும்பி செல்ல வேண்டுமா?

"நான் இப்போது இந்த இடத்தை சேர்ந்தவராக இருந்தாலும், இந்தியாவுடனான எனது உறவுகள் தொடரும். அங்குதான் என்னுடைய மக்கள் வாழ்கிறார்கள். ஆனால் இப்போது இதுதான் என் வீடு" என்று ஜுலேக்கா தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :