2017: தமிழ்நாட்டின் கலக்கல் அமைச்சர்கள்

அமைச்சர் படத்தின் காப்புரிமை Getty Images

முதலைமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்த காலகட்டத்தில் தமிழக அமைச்சர்கள் ஊடகங்களிடம் பேசுவது, தன்னிச்சையாகச் செயல்படுவது போன்றவை மிகவும் அரிதிலும் அரிதாகவே நிகழ்ந்தன. 2016ன் இறுதியில் அவர் மறைந்த பிறகு, இந்த ஓராண்டில் தமிழக அமைச்சர்கள் செயல்பட்டதும் பேசியதும் பெரும் கேலிக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாயின. அவற்றில் சில:

செல்லூர் ராஜு: வைகை அணையை தெர்மகோல் அட்டையால் மூடும் திட்டம்

தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையில் கோடை காலத்தில் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்ட நிலையில், இருக்கும் நீர் மேலும் ஆவியாகாமல் தடுப்பதற்காக அமைச்சரும் அதிகாரிகளும் தீட்டிய திட்டம் இது. இதன்படி, வைகை அணையின் நீர்ப் பரப்பை தெர்மகோல் அட்டைகளால் மூடிவிடவேண்டும்.

படத்தின் காப்புரிமை Getty Images

கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில், மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், தேனி மாவட்ட ஆட்சியர் என். வெங்கடாச்சலம் ஆகியோர் முன்னிலையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. சுமார் 300 தெர்மோகோல் அணைப்பகுதிக்கு எடுத்துவரப்பட்டு, 2-3 அட்டைகள் ஒன்றாக ஒட்டப்பட்டு, அவை படகின் மூலம் அணையின் நீர்ப்பகுதியில் வீசப்பட்டன.

அணைப் பகுதியில் வீசிய காற்றின் காரணமாக, இந்த தெர்மகோல் அட்டைகள் உடனடியாகக் கரை ஒதுங்கின. சில அட்டைகள் உடைந்து தூள்தூளாகி அணையின் பல்வேறு பகுதிகளில் ஒதுங்கின. இதற்கு பத்து லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, தெர்மகோல் அட்டைகள் லேசாக இருந்ததால் காற்றில் பறந்துவிட்டதாகவும் அவற்றைச் சுற்றி கட்டைகளை அடித்து வீசினால், பறக்காமல் இருக்கும் என ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார். இந்த விவகாரம் சர்வதேச அளவில் கேலிக்கு உள்ளானது.

முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி: 'கம்ப ராமாயணம் எழுதிய சேக்கிழார்'

கடந்த நவம்பர் 29ஆம் தேதி தஞ்சாவூரில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதலமைச்சர் கே. பழனிச்சாமி, தன்னுடைய உரையில் பல தவறான தகவல்களைத் தந்தார். விழா நடக்கும் தஞ்சாவூரின் பெருமைகளைப் பற்றிப் பேசும்போது "கம்ப ராமாயணம் தந்த சேக்கிழார்" உள்ளிட்டோரைத் தந்த மாவட்டம் என்று குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images

மேலும் பொருளாதார மேதையும் காந்தியவாதியுமான ஜே.சி. குமரப்பாவை, மகாத்மா காந்தியின் உதவியாளர் என்று குறிப்பிட்டார். இந்த விவகாரம் பெரும் கேலிக்குள்ளான நிலையிலும் இது குறித்து எந்த விளக்கத்தையும் முதல்வர் அலுவலகம் தரவில்லை.

திண்டுக்கல் சீனிவாசன்: "இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்"

கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சமூக வலைத்தளங்களில் ரொம்பவும் பிரபலமாக இருந்தவர் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன். ஜெயலலிதாவை நாங்கள் மருத்துவமனையில் பார்த்தாகச் சொன்னது பொய்; சசிகலாவுக்குப் பயந்தே பொய் சொன்னோம் என்ற அமைச்சரின் பேச்சு செப்டம்பரில் பரபரப்பை ஏற்படுத்தியது என்றால், அக்டோபர் மாதம் ஒரு கூட்டத்தில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து மனு அளித்ததாகக் கூறினார்.

படத்தின் காப்புரிமை PRAKASH SINGH

அதற்கு முன்பாக ஒரு விழாவில் பேசிய அமைச்சர் பாடகி சுதாரகுநாதனை, சுதா ரங்கநாதன் என்றும் பரத நாட்டியக் கலைஞர் என்றும் குறிப்பிட்டார். அவர் தன்னைப் பாடகி என்று குறிப்பிட்ட பிறகும் அமைச்சர் திருத்திக்கொள்ளவில்லை. இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவின.

ராஜேந்திர பாலாஜி: "பாலில் கலப்படம்; சட்ட நடவடிக்கை எடுத்தா தப்பிச்சிடுவாங்க"

கடந்த மே மாத இறுதியில் இருந்தே, தமிழகத்தில் தனியார் விற்பனை செய்யும் பாலில் கலப்படம் இருப்பதாக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூற ஆரம்பித்தார். ஜூன் மாத இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ரிலையன்ஸ், நெஸ்லே நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலில் அளவுக்கு அதிகமாக காஸ்டிக் சோடா இருப்பதாகத் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆட்சியில் இருக்கும் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே என்றே கேள்விக்கு, சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் தப்பித்துவிடுவார்கள் என்பதால் மக்களிடம் தெரிவிப்பதாக விளக்கம் அளித்தார். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்திற்குச் சென்று, தங்களைப் பற்றி அமைச்சர் இவ்வாறு பேசக்கூடாது என தடை உத்தரவு வாங்கின. அதேபோல பால்வளத் துறை மானியக் கோரிக்கையில் பேசிய அமைச்சர், புதிதாக 10 ரூபாய் பால் பாக்கெட்டுகளை ஆவின் பால் விற்பனை செய்யுமென அறிவித்தார். ஆனால், பல ஆண்டுகளாக ஆவின் பத்து ரூபாய்க்கு பால் பாக்கெட்டுகளை விற்றுவந்தது.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்