பெங்களூரு புத்தாண்டு கொண்டாட்டம்: பெண்களின் பயம் தொடர்கிறதா?

  • 31 டிசம்பர் 2017
பெங்களூரு படத்தின் காப்புரிமை BANGALORE MIRROR

பெங்களூருவின் மத்திய வர்த்தக மாவட்டத்தில் 2018 புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு செல்ல, இன்னும் சில இளம் பெண்களிடையே பயம் தொடர்கிறது. 2017 புத்தாண்டின் இரவின்போது பெருமளவிலான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்த பகுதி இது.

கடந்த ஆண்டு பெங்களூருவின் மகாத்மா காந்தி சாலை - பிரிகேட் சாலைச் சந்திப்பில் பல பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக ஒரு உள்ளூர் பத்திரிக்கை வெளியிட்ட செய்தி இந்தியர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

இந்த பாலியல் வன்கொடுமை குறித்து ஒரே ஒரு பெண்ணை தவிர, வேறு எந்த பெண்களும் புகார் அளிக்க முன்வரவில்லை. இதனால் பெங்களூரு போலீஸார் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தனர்.

ஆனால், பெண்கள் மத்தியில் பலவிதமான கருத்துக்கள் உள்ளன. நல்லதோ கெட்டதோ, கொண்டாட்டத்திற்காக பெங்களூருவின் பிரபலமான இடத்திற்கு ஆயிரக்கணக்கானவர்கள் கூடுகின்றனர்.

தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்ட ஒருவருடன் சண்டையிட்ட ஒரு பெண், தனது போட்டோ ஸ்டூடியோவில் வழக்கம்போல இரவு வரை பணியாற்ற உள்ளதாக பிபிசியிடம் கூறுகிறார்.

''இந்த வருடமும் 31-ம் தேதி நான் வேலை செய்வதை, கடந்த வருட சம்பவம் தடுக்காது'' என்று சைதாலி வாஸ்னிக் என்ற புகைப்பட கலைஞர் பிபிசியிடம் கூறுகிறார்.

''ஊடகங்களில் நாம் வாசிக்கும் செய்திகளுடன் ஒப்பிடுகையில் எங்கள் அனுபவம் மோசமானது இல்லை. போலீஸார் உண்மையில் உதவியாக இருந்தார்கள்'' என்கிறார் குடும்பத்துடன் கொண்டாட்டத்திற்குச் சென்ற ஏஸ்ஹிதா.

படத்தின் காப்புரிமை BANGALORE MIRROR

''ஆண்களும் பெண்களும் கலந்திருக்கும் கூட்டத்தின் உள்ளே புகுந்து செல்ல சிலர் முயற்சித்தனர். ஆனால், சிறிய எண்ணிக்கையிலான போலீஸாரால் பெரிதாக ஒன்றும் செய்யமுடியவில்லை. எங்கள் குடும்ப ஆண்களால் நாங்கள் பாதுகாக்கப்பட்டோம்'' என்கிறார் ஏஸ்ஹிதா.

''என் தோழிகள் இந்த ஆண்டு பெங்களூரு செல்லவில்லை. புத்தாண்டைக் கொண்டாட அவர்கள் ஏற்கனவே கோவா சென்றுவிட்டனர்'' என்கிறார் கடந்த ஆண்டு மோசமான அனுபவத்தை எதிர்கொண்ட இரு பெண்களின் தோழி ஒருவர்.

போலீஸார் தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கில் வாக்குமூலம் அளித்த வாஸ்னிக் தவிர, மற்ற பெண்கள் புகார் அளிக்க கூட முன்வரவில்லை.

''குற்றவாளி யார் என போலீஸ் கேட்டார்கள். யார் என்பதே தெரியாமல் எங்களால் எப்படிக் கூற முடியும்'' என்கிறார் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்.

''குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது எங்கள் வேலை. எங்களிடம் வந்து உங்களது வாக்குமூலத்தை அளியுங்கள் என பல முறை கோரியும் யாரும் முன்வரவில்லை'' என அப்போது காவல் ஆணையராக இருந்த பிரவீன் சூத் கூறுகிறார்.

''நான் போலீஸிடம் வாக்குமூலம் அளித்தேன். ஆனால், எங்களால் அந்த நபரைக் கண்டுபிடிக்க முடியவில்லை'' என்கிறார் வாஸ்னிக்.

படத்தின் காப்புரிமை காப்புரிமைBANGALORE MIRROR

பெண்களின் பயத்தை குறைக்கும் முயற்சியாக, சிசிடிவி கேமரா, சக்திமிக்க மின்விளக்கு பொருத்தும் பணியில் போலீஸார் இறங்கினர்.

''மகாத்மா காந்தி சாலை - பிரிகேட் சாலை சந்திப்பில் 2000 போலீஸாரை பாதுகாப்புக்கு நிறுத்துகிறோம். ஏற்கனவே 100 சிசிடிவி கேமராக்கள் உள்ள நிலையில், கூடுதலாக 250 சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளோம். போலீஸார் ஒளிரும் ஜாக்கெட்டுக்களை அணிவார்கள். இதனால், மக்கள் சுலபமாக போலீஸாரை அடையாளம் காண முடியும்'' என்கிறார் கூடுதல் போலீஸ் ஆணையர் சீமண்ட் குமார் சிங்.

இந்த பகுதியை தவிர, நகரத்தின் மற்ற பகுதியிலும் 13,000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். நகரத்தின் சட்ட ஒழுங்கைக் கண்காணிக்க 1,000 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

''குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளிகளைக் கண்டறியவும் சிசிடிவி கேமரா உதவும்'' என்கிறார் பெங்களூரூ காவல் ஆணையர் சுனில் குமார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பெங்களூருவில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை

பெங்களூருவின் கம்மனஹல்லி பாலியல் வன்புணர்வு வழக்கில், ஒரு பெண்ணை வன்புணர்வு செய்த 4 நபர்களை போலீஸார் பிடிக்க ஒரு வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவின் காட்சிகளே உதவியது.

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் அதிகாலை 2 மணிவரை மதுபான விடுதிகள் இயங்க போலீஸார் அனுமதி அளித்துள்ளனர்.

''போலீஸ் படையை நிறுத்தியதன் மூலம் ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்கியுள்ளோம் என்று நாங்கள் நம்புகிறோம்'' என்கிறார் சீமண்ட் குமார் சிங்.

''வலுக்கட்டாயமாக புத்தாண்டு வாழ்த்துக் கூறுவதை'' போலீஸ் அனுமதிக்காது என்கிறார் அவர்.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :