2018 - இந்தியப் பொருளாதாரத்திற்கு எப்படிப்பட்ட ஆண்டாக இருக்கும்?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு 2017-ஆம் ஆண்டு, பொருளாதார விவகாரங்களில் இதுவரை இருந்த ஆண்டுகளிலேயே மிகவும் சவாலான ஆண்டாக இருந்தது. பிபிசியின் சமீர் ஹஷ்மி 2017-இல் ஏற்பட்ட பொருளாதார நிகழ்வுகள் 2018 மீது எப்படிப்பட்ட தாக்கம் செலுத்தும் என்று கணிக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

உலகப் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய உந்துசக்தியாக இந்தியா இருக்கும் என்று ஓர் ஆண்டுக்கு முன்பு தோன்றியது. பொருளாதார தேக்க நிலையைச் சந்தித்து வந்த சீனாவைவிட அதிக வளர்ச்சி விகிதத்தை அடைந்து, உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடு எனும் நிலையை இந்தியா 2016-இல் எட்டியது.

அந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7%-ஐ விட அதிகமாகவே இருந்தது. ஒரு சமயத்தில் அது 7.9% ஆக இருந்தது.

ஆனால், 2017-இல் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், பொருளாதார வளர்ச்சி 5.7%-ஆகச் சரிந்தது. அதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளில் அதுவே குறைந்த வளர்ச்சி விகிதமாகும்.

இரண்டு விடயங்கள் 2017-இல் இந்தியப் பொருளாதாரம் மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. முதலாவது, 2016 இறுதியில் புழக்கத்தில் இருந்த 86% பணத்தை செல்லாது என்று அறிவித்த 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களின் பண மதிப்பு நீக்கம்.

இரண்டாவது, ஜூன் 2017-இல் பல்வேறு மாநில மற்றும் மத்திய வரிகளை நீக்கிவிட்டு, "ஒரே நாடு ஒரே வரி" என்ற நோக்கில் அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி.

படத்தின் காப்புரிமை Getty Images

மோதி தலைமையிலான பாரதிய ஜனதா அரசுக்கு 2017 மோசமான செய்திகளை மட்டுமே கொண்டுவரவில்லை. உலக வங்கி வெளியிட்ட தொழில் செய்ய ஏற்ற 100 சிறந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 30 இடங்கள் முன்னேறியது.

மூடிஸ் தர மதிப்பிட்டு நிறுவனம், 2004-க்கு பிறகு முதல் முறையாக இந்தியாவின் பொருளாதார மதிப்பீட்டை அதிகரித்தது. இந்திய பங்குச் சந்தைகள் முந்தைய ஆண்டைவிட 30% வளர்ச்சி அடைந்தன.

வாராக்கடன் மற்றும் செயல்படாத சொத்துகளால் தவிக்கும் பொதுத்துறை வங்கிகளுக்கு மூலதனமாக ரூபாய் 2.11 லட்சம் கோடி வழங்கப்படும் என்று அறிவித்தது மத்திய அரசு. எனினும், 2018 இந்திய அரசுக்கு ஒரு கடினமான ஆண்டாகவே இருக்கப்போகிறது.

வளர்ச்சி வேகமாக்கப்படவேண்டும்

பொருளாதார வளர்ச்சி விகிதத்தை கடந்த ஆண்டை விட அதிகரிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பணமதிப்பு நீக்கத்தால் சிறு குறு தொழில்கள் அதிக எண்ணிக்கையில் மூடப்பட்டன

"ஜி.எஸ்.டி மற்றும் பண மதிப்பு நீக்கம் ஆகியவற்றின் தாக்கம் குறையும் என்பதால் 2018-இல் பொருளாதாரம் மீளும்," என்கிறார் ஜே.பி மார்கன் நிறுவனத்தின் ஆசியாவுக்கான தலைமை பொருளாதார நிபுணர் சஜ்ஜித் சினோய்.

ஜி.எஸ்.டி வரி விகிதத்தை ஒழுங்குபடுத்த, அதிகமான வரி விகிதம் இருந்த 178 பொருட்களின் வரியை அரசு குறைத்தது.

இந்தியப் பொருளாதாரம் 2018-19 நிதி ஆண்டில், 7.4% வளர்ச்சி காணும் என்று சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. முன்னதாக 7.7.% என்று அந்த அமைப்பு கணித்த அளவைவிட இது குறைவு.

வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி

பொருளாதாரம் வளர்ந்தாலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் 2018-இல் அரசுக்கு ஒரு சவாலாக இருக்கும். மக்கள் தொகையில் உலகில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில், இளைஞர்களுக்கு போதிய வேலை வாய்ப்புகளை வழங்க ஆண்டுக்கு 1.2 கோடி புதிய வேலைகள் உருவாக்கப்பட வேண்டும்.

ஆனால், 2016 பண மதிப்பு நீக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறு-குறு தொழில்கள் ஜி.எஸ்.டி வரியால் மேலும் பாதிக்கப்பட்டன. அவை பெரிய எண்ணிக்கையில் மூடப்பட்டதால் கோடிக்கணக்கானவர்கள், குறிப்பாக அமைப்புசாரத் துறையில் வேலை செய்தவர்கள், வேலை இழந்தனர்.

படத்தின் காப்புரிமை Reuters

அதிக வேலைவாய்ப்பைத் தந்த வேளாண்மை, கட்டுமானம், சிறு தொழில் ஆகிய மூன்று முக்கியத் துறைகளும் சமீப ஆண்டுகளில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கத் திணறுகின்றன.

இது ஒரு நீண்டகாலப் பிரச்சனையாக இருந்தாலும், 2019-இல் வரவுள்ள தேர்தலைக் குறிவைத்து அரசு ஏதவாது முயலக்கூடும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.

பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் பணவீக்கம், அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் பொருட்களின் விலை, அரசின் செலவுகளை மட்டுமல்லாமல் பணவீக்கத்தையும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. கடந்த ஆண்டு வரி அரசின் நிதிப் பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4%-க்கும் குறைவாகவே இருந்தது.

இந்தியா தனது உள்நாட்டுத் தேவைகளுக்கான பெட்ரோலிய பொருட்களில் 70%-ஐ இறக்குமதி செய்கிறது. அதனால், இந்திய அரசு பெட்ரோலியப் பொருட்களின் சில்லறை விலையை ஏற்ற வேண்டும் அல்லது, இறக்குமதிக்கு அதிகமாகும் செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ளவேண்டும்.

நொடிக்கும் வேளாண்மை

நாடு முழுவதும் நடைபெற்ற பல போராட்டங்களலால், விவசாயிகளின் போராட்டங்களுக்கான ஆண்டாகவே 2017 இருந்தது. இந்திய மக்களில் பாதிக்கும் அதிகமானோர் தங்கள் வாழ்வாதாரத்திற்காக வேளாண்மையை நம்பியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption டெல்லியில் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள்

வேளாண்மைக் கடன் தள்ளுபடி அறிவித்த உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் அவற்றை அமல்படுத்துவதில் சிக்கலை சந்தித்து வருகின்றன.

"இதில் மோதி அரசு செய்ய பெரிதாக ஒன்றுமில்லை. ஏனெனில், வேளாண்மை மாநில அரசுகளின் வசம் இருக்கும் துறை, " என்கிறார் கேர் ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் மதன் சப்னாவிஸ்.

எட்டு இந்திய மாநிலங்களில் 2018-இல் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. அவற்றில் நான்கு மாநிலங்களில் கிராமப்புற மக்கள்தொகை அதிகம். அவற்றில் மூன்றில் பாரதிய ஜனதா ஆட்சி செய்வதால், வேளாண்மைத் துறைக்காக மத்திய அரசு ஏதேனும் செய்யவிட்டால் அது அக்கட்சியின் வெற்றி வாய்ப்பை பாதிக்கலாம்.

2018-இல் பொருளாதார சீர்திருத்தங்கள் இல்லையா?

ஆட்சிக்கு வந்தது முதல் முக்கியமான பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகள் மேற்கொண்டுவருவதாக மோதி பாராட்டப்படுகிறார்.

ஆனால், 2017-இல் பொருளாதாரம் சரிந்துள்ள நிலையில், 2019-இல் நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் சீர்திருத்தங்கள் பற்றி அவர் மிகவும் கவனமாக இருப்பார் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

சமூக நலத் திட்டங்களுக்கான செலவை இந்த ஆண்டு அதிகரித்து, கிராமப்புற இந்தியா மீது மத்திய அரசு கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படிப்பார்த்தாலும் 2018 மோதிக்கு தீர்க்கமான ஆண்டாக இருக்கப்போகிறது. அவரது அரசு பொருளாதாரத்தைக் கையாளும் விதம், 2019-இல் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் மீது நிச்சயம் தாக்கம் செலுத்தும்.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :