இந்து தேசியவாதிகளை குறிவைத்து காணொளி வெளியிட்ட அல்-கய்தா

இந்து தேசியவாதிகளை குறிவைத்து காணொளி வெளியிட்ட அல்-கய்தா படத்தின் காப்புரிமை Getty Images

இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக இந்து அமைப்புகளின் தலைவர்கள் பேசியதாகக் கருதப்படும் வெறுப்பு பேச்சுகளைக் கொண்ட ஒரு காணொளியை இந்திய துணைக்கண்டத்தின் அல்-கய்தா என்னும் அமைப்பு வெளியிட்டுள்ளது.

'காவி தீவிரவாதம்' என்ற தலைப்பில் வெளியிடப்படும் நான்காவது காணொளி இது. முன்பு வெளியிடப்பட்ட காணொளிகளை போலவே இதுவும் ''இந்து தீவிரவாதிகள்'' என்ற கருத்தை கொண்டுள்ளது.

இந்தி மற்றும் உருது மொழிகளில் தயாரிக்கப்பட்ட இந்தக் காணொளி, அல்-கய்தாவின் அதிகாரப்பூர்வ ஊடகப் பிரிவான அல்-சாஹபால் டெலிகிராம் செயலியில் வெளியிடப்பட்டது.

இந்து மதத்தில் "காவி" என்ற வார்த்தை புனித நிறமாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்திய அரசியலில் வலதுசாரி இந்துக் குழுக்களை குறிப்பதாகவும் காவி என்ற சொல் உள்ளது.

படத்தின் காப்புரிமை AN-NASR

''அவர்களது பேச்சுகள் மூலம் பகைமை வெளிப்படுகிறது'' என்ற வார்த்தைகளுடன் இந்த 6: 42 நிமிட வீடியோ தொடங்குகிறது.

பிறகு பிரதமர் மோடியின் புகைப்படமும், அதைத் தொடர்ந்து தமது வலதுசாரிக் கருத்துகளாலும், இந்திய முஸ்லிம்கள் மீதான எதிர்ப்பாலும் அறியப்படும், இந்து தேசியவாதிகள் பலரது படங்களும் தொடக்கக் காட்சிகளில் காட்டப்படுகின்றன.

இந்து தேசியவாதியான டி. ராஜா சிங், ஒரு கூட்டத்தில் பேசும் காட்சி காணொளியில் உள்ளது.

அவரது பேச்சில், அவரது குழுவின் முயற்சிகள் எப்படி முஸ்லீம்களை அச்சுறுத்துகின்றன என்பதைக் கூறும் அவர், அவரது குழுவின் அழுத்தம் காரணமாக முஸ்லிம்கள் மசூதி தொழுகையில் கலந்து கொள்ள முடியாமல் போனதாகவும் கூறுகிறார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்ட பணியாற்றிவரும் ஸ்ரீ ராம் யுவ சேனா என்ற குழுவின் நிறுவனர் இந்த ராஜா சிங்.

ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம்களில் என்ன நடக்கிறது என்பதையும் ஒரு காட்சி காட்டுகிறது.

அடுத்தடுத்த காட்சிகள், இந்து குழுக்களின் உறுப்பினர்களால் 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்படும் காணொளி உள்ளது.

இந்து தேசியவாதி பிரவின் தொகாடியா முஸ்லிம்களை விமர்சிப்பதுடன், அவர்களை நாட்டை விட்டு வெளியேறக்கோரும் காட்சிகளும் உள்ளன.

''குஜராத்தில் இந்து தீவிரவாதிகளின் பயங்கரவாதம்'' என்ற தலைப்பு வருகிறது. அத்துடன், காவித்துண்டு அணிந்திருந்த ஆயுதம் ஏந்திய இளைஞர்களின் காட்சிகள் உள்ளன.

இந்துக்களுக்கு மீதான எந்தத் தாக்குதலுக்கும் எதிராக எச்சரிக்கும் பா.ஜ.க எம்.பி வருண் காந்தியின் பேச்சை காணொளி காட்டுகிறது.

படத்தின் காப்புரிமை Reuters

அத்துடன் ''இந்திய முஸ்லிம்கள்'' என்ற தலைப்பில், சில ஆண்கள் சூழ்ந்துகொண்டு தடியால் ஒருவரை அடிக்கும் காட்சிகள் உள்ளன.

அடுத்ததாக, தாராம் ஜகாரன் மஞ்ச் என்ற வலதுசாரி இந்து அமைப்பின் தலைவர் ராஜேஸ்வர் சிங்கின் பேச்சு உள்ளது.

''இந்தியாவில் கிறிஸ்துவர்களுக்கும் இஸ்லாமுக்கும் 2021 டிசம்பர் 21-ம் தேதியே கடைசி நாள்'' என தனது பேச்சில் ராஜேஸ்வர் சிங் கூறுகிறார்.

''ஜிகாத் இல்லாமல் மரியாதையை அடைய முடியாது'' என கருத்துடன் காணொளி முடிகிறது.

ஆன்-நாஸ்ர் ஊடக குழு

காவி தீவிரவாத காணொளி தொடரின் மற்ற காணொளிகளை போல இல்லாமல், இந்த அண்மைய காணொளியில் ஆன்-நாஸ்ர் ஊடகத்தின் சின்னம் உள்ளது.

தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் அல் கொய்தாவின் ஊடகப் பணியின் வளர்ச்சிக்கு அன்-நாஸ்ர் முக்கிய பங்காற்றி வருவதாக தெரிகிறது.

இதன் தயாரிப்புகள், அல்-கய்தாவின் அதிகாரப்பூர்வ ஊடக சேனல்களால் ஒளிபரப்பப்படுகிறது.

இந்திய துணைக்கண்டத்தின் அல் கொய்தா அமைப்பு 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆசியாவில் ஜிகாதிஸ்ட் நடவடிக்கைகளை புதுப்பிப்பது தான் இந்த துணை அமைப்பின் நோக்கம் என அல் கொய்தாவின் தலைவர் ஆயமான் அல் ஜவாஹிரி கூறியிருந்தார்.

பாகிஸ்தான், காஷ்மீர், பங்களாதேஷ், இந்தியா மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளின் முஸ்லிம்களை அடக்குமுறையில் இருந்து காப்பதில் கவனம் செலுத்துவதாக இக்குழு அதன்பிறகு கூறியிருந்தது.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்