வாதம் விவாதம்: ''ஆன்மிக அரசியலை விட மனிதாபிமான அரசியல்தான் தேவை''

  • 3 ஜனவரி 2018
ரஜினிகாந்த் படத்தின் காப்புரிமை Getty Images

ரஜினிகாந்த், ஆன்மிக அரசியலில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்துள்ள நிலையில், ''ஆன்மிக அரசியல் என்ற சொல் மத அரசியல் என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறதா? நியாமான, தர்மமான அரசியல்தான் ஆன்மிக அரசியல் என்ற ரஜினியின் கருத்து ஏற்புடையதா?'' என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

இதற்கு பிபிசியின் நேயர்கள் தெரிவித்த கருத்துக்கள் இங்கே..

''ரஜினி பேசும் பகவத் கீதை மற்றும் சந்திக்கும் சாமியார்கள், ரஜினியை ஆதரிக்கும் முன்மொழியும் விளம்பரப்படுத்தும் பாஜக அரசியல்வாதிகள் இவைகள் அனைத்தும் ரஜினி ஒரு இந்துத்துவாவாதி என்பதை காட்டுகிறது'' என்கிறார் மணிரத்னம் எனும் நேயர்.

''எண்ணற்ற ஆன்மிக வழியிருந்தாலும் 'தமிழர் அறம்' சார்ந்த அரசியல் வழியே எக்காலத்திற்கும் மனிதம் பேணும் சிறந்த வழியாக இருக்கும். 'ஆன்மிகம் தனிமனித ஒழுக்கத்தை மட்டுமே வழியுறுத்தும் ஆனால் `தமிழர் அறம்` ஒரு சமூகத்தின் நலனுக்கான நேர்மையை வழிமொழியும்'' என தனது கருத்தை பதிவு செய்துள்ளார் சக்தி சரவணன்.

''எட்டு எட்டா மனுசன் வாழ்வ பிரிச்சிகோன்னு பாட்டு நியாபகம் இருந்தா அதுல ஏழாம் எட்டு என்ன சொல்லுதுன்னு கேட்டுட்டு அப்பறம் வாங்க.. தலைவர் ரசினிக்கு தான் இது. ஓய்வு எடுக்க நீங்க தான் சொன்னிங்க இப்போ மறந்தாச்சா?'' என கேள்வி எழுப்புகிறார் ராஜேஷ்.

''ஆன்மிகம் என்பது அகத்துக்குள் ஆன்மாவை தரிசிப்பது. எல்லா உயிர்களுக்குள்ளும் இறைவன் இருக்கிறான் என்பதை உணர்ந்து உண்மையாக, நேர்மையாக நடக்க வைக்கும். இதில் ஜாதி, மத, மொழி, இனத்திற்கு இடமில்லை.'' என கூறியுள்ளார் சாய்.

''இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று, நெஞ்சு நிமிர்த்தி சொல்கிறோம். அதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. இந்த நிலையில், ஆன்மிக அரசியல் என்பது நெருடலானது. அரசியலை, ஓட்டு வங்கியின் வணிக மூலதனமாக கருதாமல், அனைத்து சமூக மக்களின் வாழ்வாதாரம் என்பதை தெளிவு படுத்திக்கொள்வதும், தனது ஆதரவாளர்களுக்கு தெளிவு படுத்த வேண்டியதும் முதல் கடமை.'' என்கிறார் ஜமால்.

''கண் கெட்ட பிறகு சூரியநமஸ்காரம். இனி அரசியலுக்கு வந்தா என்ன? வரலனா என்ன? காலம் சென்றுவிட்டது. 43 வயதில் நழுவவிட்டதை 67 வயதில் மீட்பாரா?'' என கூறியுள்ளார் சந்தோஷ் குமார்.

''ஆன்மிகம்னு சொன்னதும் எல்லாரும் இந்துத்துவாத்தோட முடிச்சு போடுறாங்க... ஆன்மிகம் எல்லா மதத்திலும் இருக்கு... கோயிலுக்கு போறது மட்டுமே ஆன்மிகம் இல்ல.. சர்ச் போறதும் ஆன்மிகம் தான்... மசூதி போறதும் ஆன்மிகம் தான்'' என பதிவிட்டுள்ளார் நடராஜ் பார்த்திபன் எனும் நேயர்.

''அரசியலுக்கு வரவேண்டிய நேரத்தில் இமயமலைக்கும். இமயமலைக்கு போகவேண்டிய வயதில் அரசியலுக்கும். என்ன விளையாட்டு இது?'' என கேட்கிறார் அசோக்.

''மனிதாபிமான அரசியல்தான் இப்போதைய (எப்போதும் ) தேவை ஆன்மிக அரசியல் எப்போதும் தேவையில்லை. ஆன்மிகம் அரசியலானால் அழிவுதான் மிஞ்சும்'' என்பது வெற்றி எனும் நேயரின் கருத்து.

''நியாயம் தர்மம் என்பதற்கு ஆன்மிகம் என்பதை விட காலம் காலமாக மார்க்சியம் என்றொரு வார்த்தை இருக்கிறதே. அதை பயன்படுத்தியிருக்கலாமே!'' என்கிறார் வேலு.

''ரஜனியையும் ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது. இருந்தாலும் அவர் குறிப்பிட்டதை போல நேர்மையான நியாயமான ஆட்சி அமையுமானால் வரவேற்கலாம்'' என கூறியுள்ளார் சரோஜா பாலசுப்ரமணியன்.

''பாஜக நேரடியாக தமிழ்நாட்டில் நுழையமுடியாத காரணத்தால் ரஜினியை வைத்து ஆன்மிக அரசியல், அது, இது என்று கதை விடுகிறது'' என்கிறார் மணிகண்டன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்