ஓபிஎஸ்- இபிஎஸ் அணியினர் புது தொலைக்காட்சி, நாளிதழ் தொடங்க முடிவு

  • 3 ஜனவரி 2018

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, ஜெயா டிவி மற்றும் டாக்டர் நமது எம்ஜிஆர் நாளிதழ் ஆகிய ஊடக நிறுவனங்கள் டிடிவி தினகரனின் கட்டுப்பாட்டில் இயங்குவதால், அதிமுகவின் ஓபிஎஸ்-இபிஎஸ் அணியினர் தங்களுக்கென ஒரு நாளிதழும், தொலைக்காட்சியும் தொடங்கவுள்ளனர்.

ஜனவரி 8ம்தேதி தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடக்கவுள்ளதால், அந்த கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்களின் பங்கேற்பு எவ்வாறு இருக்கவேண்டும் என்று விவரிக்க சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் விளக்கக்கூட்டம் இன்று (ஜனவரி3) நடத்தப்பட்டது.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 104 பேர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், கட்சிக்காக நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி தொடங்க வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது என அதிமுகவின் செய்தித்தொடர்பாளர் பொன்னையன் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தினார்.

ஜெயா டிவி மற்றும் டாக்டர் நமது எம்ஜிஆர் நாளிதழின் நிலை என்ன என்றும் புதிதாக ஊடகம் ஒன்றை தொடங்கவேண்டிய தேவை குறித்தும் பிபிசிதமிழிடம் பேசிய பொன்னையன், ''எங்கள் கட்சியின் கருத்துகளை கிராமம், நகரம் என எல்லா இடங்களிலும் கொண்டு சேர்க்க ஊடகம் தேவைப்படுகிறது.

எல்லா அரசியல் கட்சிகளும் தங்களுக்கென ஊடகம் ஒன்றை நடத்தி வருகின்றனர். திமுகவில் கூட பிரிவுகள் உள்ளன. சன் தொலைக்காட்சி மற்றும் கலைஞர் டிவியில் அழகிரி காட்டப்படுவதே இல்லை. அதுபோல ஏற்கனவே ஜெயாடிவி மற்றும் நாளிதழ் இருந்தாலும், நாங்களும் தனியாக ஊடக நிறுவனத்தை நடத்த முடிவுசெய்துள்ளோம்,'' என்றார்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரங்கள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ஜனநாயக மாண்புகளை காப்பாற்றும் வகையில் சட்டமன்ற உறுப்பினர்கள் நடந்துகொள்ளவேண்டும் என்று கூறப்பட்டது என்றார்.

அடுத்து வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தில், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரனின் பங்கேற்பு, அதிமுகவிற்கு சிரமத்தை ஏற்படுத்துமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது ''நாம் ஒருவர் நமக்கு ஒருவர்'' என்ற அளவில்தான் டிடிவி தினகரனின் பங்கேற்பு இருக்கும். அவரால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் கூறினார்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சியினர் குறைசொல்லும் அளவுக்கு நடந்துகொள்ளக்கூடாது என்றும் தேவையற்ற சர்ச்சை பேச்சுக்களில் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது என பெயர் சொல்ல விரும்பாத அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மேலும், அடுத்த வாரம் தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தில் அனைத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் தவறாமல் தினமும் கலந்துகொள்ளவேண்டும் என்றும் தங்களது தொகுதியின் வளர்ச்சித்திட்டங்கள் குறித்து தெளிவாக தெரிந்துவைத்துக்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்