மஹாராஷ்டிரா பீமா கோரேகான்: வரலாற்றில் இருந்து பெருமைகளை தேடும் தலித்துகள்

  • 4 ஜனவரி 2018
மஹாராஷ்டிரா படத்தின் காப்புரிமை Getty Images

மஹாராஷ்டிராவின் பீமா கோரேகான் பகுதியில் தலித்துக்கள் நடத்திய பேரணிக்கு பிறகு, மும்பை- பூனே பகுதியில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.

1817-ம் ஆண்டு பேஷ்வா ராணுவத்திற்கு எதிரான சண்டையில் இறந்த தலித்துக்களுக்கு அஞ்சலி செலுத்த ஒவ்வொரு ஆண்டும் பெரும் எண்ணிக்கையிலான தலித்துக்கள் பீமா கோரேகானுக்கு செல்வர்கள்.

பிரிட்டிஷ் ராணுவத்தில் படை வீரர்களாக இருந்த தலித்துக்கள் (மஹர்), பிராமணிய பேஷ்வாக்களுக்கு எதிராக சண்டையிட்டனர்.

1927-ம் ஆண்டு இந்த நினைவிடத்திற்குச் சென்ற டாக்டர் அம்பேத்கர், இந்த படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இந்த வருடம் சண்டையின் 200வது ஆண்டு நினைவு தினம் என்பதால் இந்த நிகழ்வு பெருமளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சமஷ்த் இந்து அகாதி எனும் அமைப்பைச் சேர்ந்த காவிக்கொடி கொண்ட செயற்பாட்டாளர்கள்தான் வன்முறையைத் தொடங்கியதாக செய்திகள் கூறுகின்றன. இது ஒரு நபரின் மரணத்திற்கும், பல வாகனங்கள் எரிக்கப்பட்டதற்கும் வழிவகுத்தது.

அதே சமயம், பேஷ்வா ஆட்சியின் தலைமை இடம் இருந்த ஷன்வார்வாடாவில் (பூனே) பேசிய ஜிக்னேஷ் மேவானி, பி.ஜே.பி- ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை குறிப்பிட்டு, நவீன பேஷ்வாக்களுக்கு எதிராகச் சண்டையிட அழைப்பு விடுத்தார்.

பீமா கோரேகான் சண்டையின் உண்மை கதை, இன்றுள்ள பல பழங்கதைகளை உடைக்கிறது. இது தனது பேரரசை விரிவுபடுத்த முயற்சித்த பிரிட்டிஷ் மற்றும் தனது ராஜ்ஜியத்தைத் தக்க வைக்க முயன்ற பேஷ்வாக்கள் இடையிலான சண்டையாக இருந்தது.

தனது ராஜ்ஜியத்தை விரிவுபடுத்திக்கொண்டிருந்த பிரிட்டிஷ், அதிக எண்ணிக்கையிலான தலித்துகளை தனது ராணுவத்தில் சேர்த்தது. மஹர்கள் பரியாஸ் மற்றும் நம்சுத்ராஸ் போன்றவர்கள் அதில் இருந்தனர். விசுவாசம் மற்றும் எளிதாகக் கிடைத்ததால் இந்தப் பிரிவினர் வேலைக்கு எடுக்கப்பட்டனர்.

பேஷ்வா ராணுவம் பல வீரர்களுடன், அரபு கூலிப்படை வீரர்களையும், இந்து சன்னியாசிகளையும் கொண்டிருந்தது. இந்து முஸ்லிம் சண்டை குறித்த கட்டுக்கதைகளை இது உடைத்தது. இப்ராஹிம் கான் லோதி, சிவாஜியின் ராணுவத்தில் இடம்பெற்றிருந்தார் மற்றும் பாஜிராவ் ராணுவத்தில் அரபு சிப்பாய்கள் இடம்பெற்றிருந்தனர்.

துரதிருஷ்டவசமாக, முந்திய கால நிகழ்வுகளை மதவாத கண்ணாடி மூலமே இன்று நாம் பாக்க முயற்சிக்கிறோம். ராஜ்ஜியங்கள் முதன்மையாக சக்தி மற்றும் செல்வத்தால் உந்தப்பட்டது என்ற அம்சத்தைப் புறக்கணித்துவிடுகிறோம்.

பிறகு, தலித்துக்களைத் தனது ராணுவத்தில் சேர்ப்பதை பிரிட்டிஷ் நிறுத்திவிட்டது. ராணுவத்தில் கீழ் மட்டத்தில் இருக்கும் உயர்சாதி சிப்பாய்கள், தலித் மேலதிகாரிகளின் உத்தரவுகளை ஏற்பதில்லை என்பதைப் பிரிட்டிஷ் கண்டுபிடித்தது.

படத்தின் காப்புரிமை MAYURESH

ராணுவத்தில் மீண்டும் தலித்கள் சேர்க்கப்பட வேண்டும் என டாக்டர் அம்பேத்கர் முயற்சிகளை மேற்கொண்டார். இந்த பிரச்சனையை தீர்க்க தனியே மஹர் படையை உருவாக்க வேண்டும் என அம்பேத்கர் பரிந்துரைத்தார். சமூக கட்டமைப்பில் தலித்துகளுக்கு இடம் உருவாக்க வேண்டும் என்ற அம்பேத்கரின் முயற்சியில் மஹர்களும் ஒரு பகுதியாக இருந்தனர்.

பீமா கோரேகான் சண்டை, அப்போது தலித்துக்களால் பேஷ்வாக்களை வீழ்த்துவதற்கான சண்டையா? பேஷ்வா ஆட்சியின் கொள்கைகள் மிகவும் பிராமணியமாக இருந்தது என்பது உண்மைதான். சூத்திரர்கள் காற்றை மாசுபடுத்த கூடாது என்பதற்காக அவர்களது கழுத்தில் ஒரு பானையையும் அவர்கள் நடந்து சென்ற பூமியைச் சுத்தப்படுத்துவதற்காக அவர்களது இடுப்பில் துடைப்பமும் கட்டிச் செல்லும்படி நிர்ப்பந்திக்கப்பட்டனர். சாதிக் கொடுமையின் தீவிர வெளிப்பாடு இதுவாகும்.

படத்தின் காப்புரிமை ALASTAIR GRANT / AFP / GETTY IMAGES

இந்த அடக்குமுறைகளை உடைப்பதற்காக பேஷ்வாக்களுக்கு எதிராகப் பிரிட்டிஷ் சண்டையிட்டதா? இல்லை. வர்த்தகம் மற்றும் கொள்ளை நோக்கத்திற்காக தங்களது பிராந்தியத்தை விரிவுபடுத்தினர். நவீன கல்வித் தாக்கத்தின் காரணமாக சமூக சீர்திருத்தங்கள் சிறிது தாமதமாகவே வந்தன. பேரரசின் நிர்வாகத்தை நடத்த கீழ்மட்டத்தில் இருப்பவர்களுக்கு பயிற்சியளிக்கவே நவீனக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது.

கொள்ளை என்ற பிரிட்டிஷ் கொள்கையின் துணை தயாரிப்பாகவே நவீனக் கல்வி வந்தது. மாறுகிற நிலைமையில் சாதி ஆதிக்கச் சுரண்டலை ஜோதிராவ் ஃபூலே விவரித்த நிலையில் அது தொடர்பான ஒரு விழிப்புணர்வு உருவானது.

படத்தின் காப்புரிமை MAYURESH

பேஷ்வாக்கள் தேசியவாதத்திற்காகவும், தலித்துகள் காலனித்துவ சக்திகளுக்கு ஆதரவாகவும் இருப்பதாக நினைப்பது அடிப்படையற்றது. காலனித்துவ ஆட்சியின் போதே தேசியவாதம் என்ற கருத்து வந்தது. தேசியவாதம் இரண்டு விதத்தில் உள்ளது.

ஒரு இந்திய தேசியவாதம் தொழிலதிபர்கள், சமூகத்தில் நன்கு படித்தவர்கள்,தொழிலாளர்கள் என வளரும் பிரிவை கொண்டது. மற்றோரு தேசியவாதம் இந்து, முஸ்லிம் என மதத்தின் பெயரில் இருப்பது. நிலப்பிரபு வர்க்கம் மற்றும் சுதேச அரசுகளின் அரசர்களால் இது தொடங்கியது.

தற்போதைய அரசின் கொள்கைகளால் கடந்த சில ஆண்டுகளில் தலித் மக்களின் அதிருப்தி அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ரோஹித் வெமுலா மரணம், உனாவில் தலித்துகள் தாக்கப்பட்டது போன்றவற்றையும் இதற்குக் காரணம்.

கடந்த காலத்தில் இருந்து தங்களது பெருமைகளைத் தேட தலித்துக்கள் முயற்சிக்கின்றனர் என்பது பீமா கோரேகானில் தலித்துகள் கூடியது காட்டுகிறது. தலித்துகள் மீது நடந்த தாக்குதல் அவர்களது அபிலாஷைகளை சீர்குலைப்பதாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்