கால்நடைத் தீவன ஊழல் வழக்கு: லாலுவுக்கு மூன்றரை ஆண்டு சிறை

பிஹார் மாநில முன்னாள் முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கால்நடைத் தீவன ஊழல் வழக்கு ஒன்றில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கியிருந்த ராஞ்சி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம், இன்று அவருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. மேலும் ரூபாய் 5 லட்சம் அபராதமும் லாலுவுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Niraj Sinha

லாலு முதலமைச்சராக இருந்த 1991 மற்றும் 1994 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே தியோகார்க் கருவூலத்தில் இருந்து 84 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் முறைகேடாக எடுக்கப்பட்டதாக தொடரப்பட்ட இந்த வழக்கின் வாதம் கடத்த டிசம்பர் 15 அன்று முடிவடைந்தது.

சென்ற மாதம் 23ஆம் தேதியன்று அவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிமன்றம், ஜனவரி 3-ஆம் தேதியன்று தண்டனை விவரங்களை அறிவிப்பதாக கூறியிருந்தது. ஆனால் இன்றுதான், விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

லாலு குற்றவாளி என்ற தீர்ப்பு வெளியானவுடன் லாலு பிரசாத் யாதவ் நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்யப்பட்டு, தற்போது ராஞ்சியில் உள்ள பிர்ஸா முண்டா சிறையில் இருக்கிறார்.

மொத்தம் 34 பேர் குற்றம் சாட்டப்பட்டிருந்த இந்த வழக்கில் 11 பேர் விசாரணை காலத்தின்போது மரணம் அடைந்தனர். இந்த வழக்கில் லாலு உள்பட 16 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பிஹார் மாநிலத்தின் இன்னொரு முன்னாள் முதலமைச்சரான ஜெகநாத் மிஸ்ரா உள்ளிட்ட ஆறு பேர் இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இத்தீ்ர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்று லாலுவின் வழக்குரைஞர் பிரபாத் குமார் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை NEERAJ SINHA/BBC

குற்றச்சாட்டு விவரங்கள்

இவ்வழக்கில் லாலுமீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்:

•இந்த வழக்கில், லாலு பிரசாத் யாதவ் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சித்தார்.

•சி.பி.ஐ-இன் கூற்றுப்படி முதலமைச்சராக இருந்த லாலு, விசாரணையின் கோப்புகளை தன்னிடமே வைத்திருந்தார்.

•மூன்று அதிகாரிகளுக்கு பதவி நீட்டிப்புக்கு ஆட்சேபனை இருந்த நிலையிலும், லாலு பிரசாத் யாதவ் அவர்களின் பதவிக் காலத்தை நீட்டித்தார்.

•லாலு பிரசாத் யாதவுக்கு அரசு நிதி முறைகேடாக பயன்படுத்தப்படுவது தெரிந்திருந்தபோதிலும், அதை தடுத்த நிறுத்த அவர் எந்தவித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.

படத்தின் காப்புரிமை NEERAJ SINHA/BBC
Image caption லாலு பிரசாத் யாதவ் தற்போது பிர்ஸா முண்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கிறார்

மேலும் மூன்று வழக்குகள்

ராஞ்சி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் லாலு பிரசாத் யாதவ் மீது இன்னும் மூன்று கால்நடை தீவன ஊழல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரிக்கப்படாத பிஹார் மாநிலத்தில் இருந்த சாயிபாஷா கருவூலத்தின் 37.7 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த அக்டோபர் 2013ஆம் ஆண்டு லாலுவின் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஒரு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நபரை அதே போன்றதொரு வழக்கில் விசாரணைக்கு உட்படுத்த முடியாது என்று கடந்த 2014-இல் ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக சி.பி.ஐ உச்ச நீதிமன்றத்தை அணுகியது. ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தின் முடிவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், ஒவ்வொரு வழக்கையும் தனித்தனியாக விசாரிக்கவேண்டும் என்று 2017ஆம் ஆண்டு மே மாதம் உத்தரவிட்டது.

மேலும், இந்த வழக்குகளின் விசாரணைகளை ஒன்பது மாதங்களில் முடிக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

படத்தின் காப்புரிமை NEERAJ SINHA/BBC

சாயிபாஷா கருவூல வழக்கின் தண்டனை

•900 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாகத்த தொடரப்பட்ட தீவன ஊழல் வழக்கில், சாயிபாஷா கருவூலத்திலிருந்து 37.7 கோடி ரூபாய் சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட வழக்கில் ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 2013 அக்டோபர் மூன்றாம் தேதியன்று ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்தது.

•மேலும் 25 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

•சிறையில் இரண்டு மாதம் மட்டுமே இருந்த லாலு பிரசாத் யாதவ் உச்ச நீதிமன்றத்தை அணுகி பிணையில் வெளிவந்தார்.

•ஆனால், தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்தார்.

•2013 ல், லாலு சிறையில் இருந்தபோது, ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா உடன் லாலு கூட்டணியில் இருந்தார்.

தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்றுவருகிறது.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :