போக்குவரத்து தொழிலாளர் போராட்டம்: முதல்வர் எடப்பாடி அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை

  • 5 ஜனவரி 2018
பேருந்து

தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பிரச்சனை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பிரச்சனை தொடர்பாக தமிழக அரசுடன் நேற்றிரவு (வியாழக்கிழமை) நடைபெற்ற பேச்சுவார்த்தை, தோல்வியில் முடிந்ததையடுத்து தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழக பணிமனை வளாகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இறுதியில், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாகவும், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து, ஆங்காங்கே பேருந்துகள் நிறுத்தப்பட்டன. போக்குவரத்து தொழிலாளர்களின் முன்னறிவிப்பில்லாத இந்த போராட்டத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இன்றும் தொடரும் போராட்டம்

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்றும் தொடர்கிறது. தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

திருச்சி, மதுரை, கோவை, சேலம், கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இதன் காரணமாக, பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மதுரை மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அரசு பேருந்தின் மீது கல்வீச்சு.. கண்ணாடி உடைப்பு....

ஈரோடு மாவட்டத்தில் 70 சதவீத அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. 47 சங்கங்கள் சார்பிலும் வேலை நிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக தொழிற்சங்கத்தின் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளன.

ஈரோடு மாநகரத்தில் டீசல் ஷெட் அருகே அமைந்த பணிமனையிலிருந்து 30 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரோட்டில் இருந்து சிவகிரி செல்லும் அரசு பேருந்தின் மீது கல்வீச்சு நடந்து கண்ணாடி உடைந்ததால் மக்கள் அவதிக்குள்ளாயினர். அங்காங்கே காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தனியார் பேருந்து, ஆட்டோக்களை நாடும் பொது மக்கள்

தொழிலாளர்களின் திடீர் போராட்டம் காரணமாக பொதுமக்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள், தினக்கூலி ஊழியர்கள், பணியாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசு பேருந்துகள் இல்லாததால் தனியார் பேருந்து மற்றும் ஆட்டோ சேவைகளை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும், சில இடங்களில் தனியார் பேருந்துகளும், ஆட்டோக்களும் கூடுதல் கட்டணங்களை வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தினக்கூலி அடிப்படையில் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் தேவை என திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக விளம்பர பலகையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் மலைக்கோட்டை, கண்டோன்மென்ட், தீரன்நகர் கிளைகளை அணுகலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொய் சொல்கிறாரா அமைச்சர்?

நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை கூட்டத்தில் தொழிலாளர் விரோத ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட அரசு பிரதிநிதிகள் முயற்சித்ததாகவும், அதனால்தான் இந்த திடீர் வேலை நிறுத்தப் போராட்டம் என்றும் சி.ஐ.டி.யூ சங்கத்தின் மாநில தலைவர் அ.சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக அரசு இன்னும் போக்குவரத்து பணியாளர்களுக்கு சுமார் 7,000 கோடி ரூபாய் அளவுக்கு நிலுவை வைத்துள்ளது என்று கூறிய அவர், போக்குவரத்து அமைச்சர் பணியாளர்களுக்கு 9,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுவிட்டதாக சொன்ன தகவல் முற்றிலும் பொய்யானது என்று கூறினார்.

தொழிலாளர்களின் பிரச்சனை என்ன?

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் சுமார் 1.43 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2016 ஆண்டு ஆகஸ்ட் மாதத்தோடு அவர்களுக்கான 12-வது ஊதிய ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததது. இதனையடுத்து, 13-வது ஊதிய ஒப்பந்ததத்தை அமல்படுத்துவது தொடர்பாக பல கட்டப்பேச்சுவார்த்தை நடைபெற்றது வந்தது.

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை 2.57 சதவீத ஊதிய உயர்வு வேண்டும் என்று தொழிலாளர் சங்கங்கள் கேட்கின்றனர். ஆனால், அரசோ நான்காண்டுகளுக்கு 2.44 சதவீத ஊதிய உயர்வு மட்டுமே வழங்கமுடியும் என்கிறது.

அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்து தொழிற் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :