தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள்: அரசியல் கட்சிகள், நடிகர்கள் கோரிக்கை

  • 5 ஜனவரி 2018

தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதையடுத்து தமிழக அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க ஆகிய கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

மேலும், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, தொழிலாளர்களின் கோரிக்கையை அரசு உடனடியாக கருத்தில் கொள்ள வேண்டும் என நடிகர்கள் கமல் மற்றும் விஷால் ஆகியோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் மெத்தனம் - மு.க. ஸ்டாலின்

"அனைத்துப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்க நிர்வாகிகளுடனும் முதலமைச்சர் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களுக்கும் - பொதுமக்களுக்கும் மேலும் பாதிப்பு ஏற்படாத வகையில் சுமூகமான தீர்வை காண வேண்டும்" என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் உரியகாலத்தில் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வுகாண எந்தவித முயற்சியும் மேற்கொள்ள முன்வராத காரணத்தால், போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நடைபெற்று, இன்றைக்கு பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை STRDEL

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் கமல் ஹாசன், மக்களின் இன்னல்கள் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை மனதில் கொண்டு, உரிய முறையில் முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் படும் அவதியை நிறுத்த வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து நேற்று கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை, தமிழக அரசுக்கும், போக்குவரத்து கழக ஊழியர்களுக்கும் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

இந்நிலையில், மக்கள் நலன் மீது அக்கறை கொண்டு, தமிழக அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று வேலை நிறுத்தத்தை கைவிட செய்ய வேண்டும் என்று நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தப் போராட்டத்தால் பாமர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விஷால் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று பாதி வழியில் பயணிகளை ஈவிரக்கமின்றி இறக்கிவிட்ட ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என நடிகர் எஸ்.வீ சேகர் சாடியுள்ளார்.

பிற செய்திகள்

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :