அரசியல் பிரவேசத்துக்கு வாழ்த்துகள் ஆனால் கிடா விருந்து கூடாது: ரஜினிக்கு பீட்டா அறிவுரை

படத்தின் காப்புரிமை Getty Images

ரஜினி அரசியலில் நுழைந்தது மகிழ்ச்சி என்றும், ஆனால் அவருடைய பெயரில் நடத்தப்படும் ஆடு பலியை நிறுத்த வேண்டும் என்றும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பீட்டா கருத்து தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சென்னையிலுள்ள ராகவேந்திரா மண்டபத்தில் தனது ரசிகர்களை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த. அப்போது பேசிய அவர், மதுரை, சேலம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து ரசிகர்கள் இங்கு வந்திருப்பதாகவும், அவர்களுக்கு கிடா வெட்டி கறி சோறு படைக்க வேண்டும் ஆனால் இது சைவ மண்டபம் என்பதால் வேறு இடத்தில் தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்வதாகவும் ரசிகர்கள் மத்தியில் ரஜினி தெரிவித்தார்.

இந்நிலையில், கடந்த 31 ஆம் தேதி, தான் தனி கட்சி தொடங்கப் போவதாகவும், அனைத்து தொகுதிகளிலும் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டி இடப்போவதாகவும் அறிவித்தார் ரஜினி.

ரஜினிகாந்தின் கிடா விருந்து ஆசையை நிறைவேற்றும் விதமாக மதுரையில் கிடா வெட்டி விருந்து வைக்க அம்மாவட்ட ரஜினி ரசிகர்கள் முடிவு செய்தனர்.

வரும் 7 ஆம் தேதி மதுரை அழகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து சுமார் 1,000 ரஜினி ரசிகர்களுக்கு கிடா வெட்டி விருந்து படைக்க மதுரை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகியிருந்த நிலையில், பீட்டா கிடா விருந்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருத்து கூறியுள்ளது.

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து வாழ்த்துகளை தெரிவித்துள்ள பீட்டா, ரஜினியின் பெயரால் நடத்தப்படும் கிடா விருந்தை ரஜினி நிறுத்த வேண்டும் என்றும், ஆடுகளுக்கும் உணர்ச்சிகள் இருக்கின்றன அதற்கும் உதவுங்கள் என்றும் அறிவுரை கூறியுள்ளது.

பிற செய்திகள்:

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்