3,000 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியாவின் பழங்கால வானியல் ஆய்வு மையம்

ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநில எல்லையில் அமைந்திருக்கும், ஆந்திராவின் மெஹபூப்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் சுமார் 3000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கல் வடிவங்கள் வரலாற்று ஆய்வாளர்கள் மட்டுமல்லாது, வானியல் ஆய்வாளர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

முடுமால் எனும் அந்த கிராமத்தில், 80 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் அந்த இடத்தில 12 முதல் 14 அடி உயரமுள்ள 80 கற்கள் நடப்பட்ட நிலையில் உள்ளன. அங்கு சுமார் 3,500 சிறிய கற்களும் காணப்படுகின்றன.

அது பேய்கள் நிறைந்துள்ள இடம் என்று அப்பகுதியில் வாழும் மக்கள் நினைக்கின்றனர். ஆனால், அது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வானியல் ஆராய்ச்சி மையமாக இருந்த இடம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

நேரம் மற்றும் பருவ காலத்தை அறிய பயன்பட்ட கற்கள்

அறிவியல் வளர்ச்சி அதிகம் இல்லாத அந்தக் காலத்தில், வானியல் மாற்றங்களை அறிந்துகொள்ள தொழில்நுட்பங்கள் இல்லாததால், பருவநிலை மற்றும் பருவ கால மாற்றங்களை அறிந்துகொள்ள அந்தக் கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அந்தக் கற்களின் நிழலைக் கொண்டு நாட்கள், நேரம், பருவ காலங்கள் ஆகியவற்றை அப்போது வாழ்ந்த மக்கள் கணக்கிட்டனர் என்று அங்கு ஆய்வு நடத்திய ஆராய்ச்சியாளார்கள் கூறுகின்றனர்.

கோடை காலங்களிலும், குளிர் காலங்களிலும் சூரியனுக்கும், பூமிக்கும் இடையே உள்ள மிகவும் குறுகிய மற்றும் நெடிய இடைவெளி ஆகியவற்றை அறியும் வகையில் அந்தக் கற்கள் நடப்பட்டுள்ளன.

இந்தியாவின் பழங்கால வானியல் ஆராய்ச்சி மையமாகவே இதை விஞ்ஞானிகள் கருதுகின்றனர். விண்மீன் கூட்டங்களின் அமைப்பை விளக்கும் வகையிலான வரைபடம் செதுக்கப்பட்ட கல் ஒன்றும் அங்கு பிற கற்களுக்கு மையப்புள்ளியாக நடப்பட்டுள்ளது. அது நேரத்தை அளவிடவும், திசைகளை அறியவும் பயன்பட்டுள்ளது.

Image caption கி.மு 5ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட கிரகங்களின் அமைப்பை விளக்கும் வரைபடம்

ஆய்வு செய்ய ஆர்வம் காட்டும் வெளிநாட்டவர்கள்

பழங்காலத்தில் வானியல் ஆராய்ச்சிக்கான மையமாக முடுமால் கிராமம் விளங்கியது என்று கூறுகிறார் ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் புல்லா ராவ். அந்தக் கற்களை ஆய்வு செய்து, அது குறித்து பல தேசிய மற்றும் சர்வதேச அறிவியல் மாநாடுகளில் விளக்கியுள்ளார் இவர்.

இந்த நடுகற்களுக்கு பின்னால் உள்ள கதை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது முதல் இந்தியா மற்றும் வெளி நாடுகளில் உள்ள அறிவியலாளர்கள் இங்கு வந்து தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகிறார்கள்.

இங்கு ஏற்கனவே ஆய்வு செய்துள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம், கொரியாவில் உள்ள கியோங்கி மாகாண பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள், அந்த ஆய்வை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல விரும்புகிறார்கள்.

கற்கால மனிதர்கள் மத்தியிலும் இருந்த அறிவியல் வழக்கங்களின் சான்றாக இந்தக் கற்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Image caption ஆய்வில் ஈடுபட்டுள்ள கொரிய நாட்டுக் குழு

இந்தக் கற்கள் நடப்பட்டதற்கு இறந்தவர்களின் இறுதிச் சடங்குடன் தொடர்புபடுத்தி, குறிப்பிட்ட கற்களை குறிப்பிட்ட திசை நோக்கி மட்டுமே நடப்பட்டிருக்கலாம் என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கிராமவாசிகள் கூறும் பேய்க் கதைகள்

அங்குள்ள நாட்டார் தெய்வம் ஒன்றின் கோபத்துக்கு ஆளான மனிதர்கள்தான் கல்லாக மாறிவிட்டார்கள் என்று கூறும் கிராமவாசிகள் அது இறந்தவர்கள் பேய்களாக உலவும் இடம் என்று கூறுகின்றனர்.

ஆராய்ச்சியாளர்கள் வருவதற்கு முன்பு வரை, அந்தக் கற்களைத் தொட்டால் மரணம் நேரும் என்று அம்மக்கள் கருதியதால் அக்கற்களைத் தொடாமல் இருக்கும் வழக்கம் நிலவியதாக அக்கிராமத்தில் வசிக்கும் கவிதா பிபிசியிடம் கூறினார்.

அக்கற்களைத் தங்கள் முன்னோர்களாக நினைத்து அவற்றை வழிபடும் சில குடும்பங்களும் அங்கு உள்ளன.

அங்கு புதையல் இருப்பதாக கருதி 2006-இல் தோண்டிப் பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

Image caption அந்தக் கற்களைச் சுற்றி வேளாண்மை நடைபெற்று வருகிறது

அக்கற்களின் நிறத்தைக் கொண்டு, அவை கிருஷ்ணா நதியிலிருந்து எடுத்து வரப்பட்டு நடப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனினும், அவை நடப்பட்டிருக்கும் விதத்துக்கான காரணத்தை அவர்களால் கண்டறிய முடியவில்லை. அப்பகுதியில் சில கற்கள் வட்ட வடிவில் நட்டு வைக்கப்பட்டுள்ளன.

அரசு விவசாயிகளுக்கு நிலம் வழங்கியதால், அங்கு சில பகுதிகள் விளைச்சலுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அதைப் பாதுகாத்து வரலாற்றுச் சுற்றுலா மையமாக அறிவிக்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர், அந்த கிராம மக்கள்.

மத்திய அரசின் உதவியுடன் இந்த இடம் குறித்த ஒரு விரிவான ஆய்வு நடத்தப்படும் என்று தெரிவித்தார். விவசாயிகளிடம் நான்கு ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு கையகப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், அந்த இடத்தைப் பாதுகாக்க வேலி அமைக்கப்படும் என்றும் பிபிசியிடம் பேசிய தொல்லியல் துறை அதிகாரி விசாலாட்சி தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :