விழாக்களில் காட்டிய தீவிரத்தை தொழிலாளர் பிரச்சனையில் காட்டவில்லையா தமிழக அரசு?

  • 6 ஜனவரி 2018

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் போக்குவரத்து தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் திடீர் போராட்டம் நடத்தினர். "மக்களை அவதிக்குள்ளாக்கும் இந்த திடீர் போராட்டம் நியாயமானதா? அரசை நிர்பந்தப்படுத்த தொழிலாளர்களுக்கு வேறு வழி இல்லையா?" என்று பிபிசி தமிழின் #வாதம்விவாதம் கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு, பிபிசி தமிழ் வாசகர்கள் தெரிவித்த கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.

"ஒன்றுமே செய்யாத எம் எல் ஏ க்களுக்கு லட்ச லட்சமாக கொட்டிக் கொடுக்கும் அரசு, உயிரை பணயம் வைத்து ஓட்டை பஸ்சுகளை எட்டு மணி நேரத்துக்கும் மேலாக ஓட்டும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுக்க அழுவதேன்," என்கிறார் சரோஜா பாலசுப்பிரமணியன் எனும் பிபிசி தமிழ் நேயர்.

"முன் அறிவிப்பு செய்திருக்கலாம். இருப்பினும் முன்தகவல் இல்லாமல் மக்களை அவதிக்குள்ளாக்கும் இந்த போராட்டம் நியாயமானது இல்லை என்றாலும்-தமிழக அரசும் பின் விளைவுகளை மனதில் கொண்டு, சற்று விட்டுக்கொடுத்து அவர்தம் உரிமைகளை/ கோரிக்கைகளை நிறைவேற்ற முன் வந்திருக்கலாம்," என்று இரு தரப்பு குறித்தும் விமர்சித்துள்ளார் மாதவ ராமன்.

"வேலை செய்யாத எம்.எல்.ஏ-களுக்கு சம்பள உயர்வு, 24 மணி நேரம் கண் முழித்து வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியமா?!!!" என்று அதே போன்றதொரு கருத்தைக் கூறியுள்ளார் புலிவளம் பாஷா எனும் நேயர்.

"நியாயமானதுதான் அதற்காக பயணிகளை நடுவழியில் இறக்கிவிட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது," என்று பதிவிட்டுள்ளார் வெற்றி எனும் நேயர்.

"அரசை நிர்பந்தபடுத்தவில்லை, அரசின் கவனத்தை ஈர்க்க இதைவிட்டால் அவர்களுக்கு வேறு வழி இல்லை," என்று கூறியுள்ளார் சி.சந்தோஷ் குமார்.

"ஊழியர்கள் மீது அரசு அசட்டையாக இருப்பதே போராட்டத்திற்கு காரணம்," என்று அரசை விமர்சித்துள்ளார் ஏகாம்பரம்மாணிக்கம் .

"ஓடோடிக் கழக (அரசு) விழாவிற்காக எடுக்கும் முன்னெடுப்பை உழைக்கும் ஊழியரின் உரியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் காலந்தாழ்த்தாது எடுத்திருந்தால் இன்று மக்கள் கால்நடைப் பயணம் மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்காது. மக்களால் இயங்கும் போக்குவரத்து துறை மக்களுக்கான சேவையை முற்றிலும் நிறுத்தாமல் குறைந்தபட்ச மனிதாபிமானத்துடன் கூடிய வேலை நிறுத்ததைத் தொடர்வது மக்களின் அத்தியாவசிய வேலைகளைப் பாதிக்காது," என்று கூறியுள்ளார் சக்தி சரவணன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்