தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் நான்காம் நாளாக போராட்டம்

  • 7 ஜனவரி 2018
தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் நான்காம் நாளாக போராட்டம் படத்தின் காப்புரிமை Getty Images

போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த ஏழு ஆண்டுகளாக வருங்கால வைப்பு நிதியை தராமல் காலம் தாழ்த்துவது மற்றும் மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை செய்த அடிப்படை ஊதியத்தை வழங்கவேண்டும் உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்கக் கோரி கடந்த நான்கு நாட்களாக தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக போக்குவரத்து துறை தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

பேருந்துகள் வழக்கம் போல் இயங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தமிழக அரசு அறிவித்தாலும், போக்குவரத்து துறையில் உள்ள பெரும்பாலான ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணிக்குப் போகவில்லை என தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.

அனைத்துத் தொழிலாளர்களும் இன்று ( ஜனவரி 7) பணிக்கு திரும்பவேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தாலும், இதுவரை அரசிடம் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை என்றும் தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.

பிபிசி தமிழிடம் பேசிய சிஐடியு சங்கத்தைச் சேர்ந்த சுகுமார், தொழிலாளர்களுக்கு மாத சம்பளமாக ரூ. 17,532 அளிக்கவேண்டும் என்று சங்கங்கள் கேட்பதாகவும், அரசோ ரூ.15,000 மட்டுமே கொடுக்கமுடியும் என்று தெரிவித்ததாக கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

''மத்திய அரசு அறிவித்துள்ள அடிப்படை ஊதியத்தைக் கூட வழங்கமுடியாது என்று தமிழக அரசு கூறுவதை ஏற்க முடியாது. போராட்டத்தை நிறுத்தி, பணிக்கு திரும்புங்கள் என்று எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. நாங்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடவுள்ளோம். வருங்கால வைப்பு நிதி மற்றும் ஊதிய உயர்வை அளிக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை 21 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். நியாயமான கோரிக்கையை அரசு ஏற்க ஏன் மறுக்கிறது என்பது புதிராக உள்ளது,'' என சுகுமார் தெரிவித்தார்.

கடந்த 2001ல் நடந்த போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தை நினைவு கூர்ந்த தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த சண்முகம், '' 2001ல் போனஸ் கேட்டு 22நாட்கள் போராட்டம் நடந்தது. 25,000 ஊழியர்கள் கைதானோம். பின்னர் எங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தமுறையும் தமிழக அரசு போராட்டத்தை தொடர்ந்து நடத்தும் நிலைக்கு எங்களை தள்ளுகிறது. அடிப்படை ஊதியத்தை வழங்காமல் இருப்பதை எவ்வாறு கண்டிக்காமல் வேலைசெய்யமுடியும்,'' என்று கேள்வி எழுப்பினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்