'யானையுடன் செல்ஃபி': உயரும் மரணங்களின் எண்ணிக்கை

ஒரிசாவில் காட்டு யானையுடம் செல்ஃபி எடுக்க முயற்சித்து, அதனால் தாக்கப்பட்டு இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்கிறார் பிபிசி செய்தியாளர் சுப்ரத் குமார் படி.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், கிராம சந்தையிலிருந்து தன் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார் ஜெயகிருஷ்ணா நாயக். அப்போது அந்த பகுதியில் ஒரு பெருங்கூட்டம் யானையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டும், அதனை கிண்டல் செய்து கொண்டும் நின்றது.

யானை தாக்கி மரணம்

நாயக்கும் அவர்களுடன் இணைந்துக் கொண்டார். யானையுடம் `செல்ஃபி` எடுக்கவும் முயற்சித்தார். கோபமடைந்த யானை அவரை தும்பிக்கையால் தூக்கிப் போட்டு நசுக்கியது. அவர் இறந்து போனார்.

பிபிசியிடம் பேசிய ஜெயகிருஷ்ணாவின் மகன் தீபக் நாயக், "பலர் அங்கு கூடி நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் யாரும் என் தந்தையைக் காக்க முயற்சிக்கவில்லை" என்றார்.

இது போல ஒரு சம்பவம் கடந்த செப்டம்பர் மாதமும் நிகழ்ந்துள்ளது. அசோக் பாரதி என்கிற காவலர் யானையுடன் செல்ஃபி எடுக்க முயற்சித்த போது, யானை தாக்கி இறந்துபோனார்.

இந்த சம்பவம் சிலரால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோ பதிவில், அசோக் பாரதி யானை அருகே கொஞ்ச, கொஞ்சமாக முன்னேறும் காட்சிகளும், யானை அவரை தாக்கும் காட்சிகளும் உள்ளன.

அசோக் பாரதி தப்பிக்க முயற்சி செய்தார். ஆனால், யானை அவரை தூக்கித் தன் காலில் போட்டு மிதித்தது. அவர் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார்.

யானையுடன் செல்ஃபி எடுக்க முயற்சித்து அதனால் பலர் தாக்கப்பட்டுள்ளனர். பலர் அதில் காயங்களுடன் தப்பி இருக்கிறார்கள். அபிஷேக் நாயக்கும் அவர்களில் ஒருவர்.

அபிஷேக் யானையுடன் செல்ஃபி எடுக்க முயற்சித்த போது யானை அவரை தள்ளியது. இதனால் அவரின் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதி மோசமான காயம் உண்டானது. ஆறு மாதகாலமாக மருத்துவமனையில்தான் அவர் உள்ளார்.

வனவிலங்கு வல்லுனர் பிஸ்வஜித் மொஹந்தி, "பல சம்பவங்கள் இது போல நடந்துள்ளன. ஆனால், சில தான் பதிவு செய்யப்பட்டுள்ளன." என்கிறார்.

60 பேர் மரணம்

ஒரிசா அரசு இந்த சம்பவங்களை தீவிரமாக எடுத்துக் கொள்ளத் தொடங்கி உள்ளது. அந்த மாநிலத்தின் வனத்துறை உயரதிகாரி சந்தீப் திரிபாதி சொல்கிறார், "இது போன்ற சம்பவங்கள் அதிகம் ஏற்படும் பகுதியில், மக்களுக்கு இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளோம்"

அரசுப் புள்ளிவிவரங்களின்படி அந்த மாநிலத்தில் 60 பேர் யானை தாக்குதலால் இறந்துள்ளார்கள். அதில் எத்தனை பேர் செல்ஃபி எடுக்க முயற்சித்து இறந்தார்கள் என தெரியவில்லை. ஆனால், அரசாங்க அதிகாரிகள் செல்ஃபி எடுக்க முயற்சித்து இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகதான் இருக்கும் என்று கவலை தெரிவிக்கிறார்கள்.

"வறட்சி காரணமாக யானைகளுக்கு போதிய உணவு காடுகளில் கிடைப்பதில்லை. இதன் காரணமாக அவை கிராமங்களுக்குள் நுழைகின்றன. அப்போதுதான் இது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. குறிப்பாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் யானைகள் விவசாய நிலங்களில் நுழையும் எண்ணிக்கை அதிகம்" என்கிறார் பிஸ்வஜித் மொஹந்தி.

மேலும் அவர், "செல்ஃபி எடுக்க முயற்சிக்கும் போது கேமிராவிலிருந்து எழும் ஒளி யானைகளை எரிச்சலடைய செய்கிறது. இதனால், அவை மனிதர்களைத் தாக்குகின்றன." என்று விவரிக்கிறார்.

"மக்களும் யானைகளுக்கு கரும்புக் கொடுத்து பழக்கி, அதனுடன் செல்ஃபி எடுக்க முயற்சிக்கிறார்கள். இதனாலும், இது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன." என்கிறார் மற்றொரு வனத்துறை அதிகாரியான ரட்னாகர் தாஸ்.

அதிக செல்ஃபி மரணங்கள்

கர்னிஜியா மெலன் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா தகவல் மையம் இணைந்து நடத்திய ஆய்வு, சமீப காலத்தில், உலகில் எந்த நாட்டைக் காட்டிலும் இந்தியாவில்தான் அதிக செல்ஃபி மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறுகிறது.

அதே நேரம், வன விலங்குடன் செல்ஃபி எடுத்து மரணிக்கும் சம்பவம் இந்தியாவில் மட்டும் நிகழும் ஒன்றல்ல.

அமெரிக்காவில் உள்ள யெல்லோஸ்டோன் தேசிய பூங்காவில் 2015-ல் மட்டும், காட்டெருதுவுடன் செல்ஃபி எடுக்க முயற்சித்த போது 5 பேர் அதனால் முட்டப்பட்டுள்ளனர். அவர்களில் ஸ்பெயினை சேர்ந்த ஒருவர் இறந்துவிட்டார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
யானைக்குட்டி மீட்கப்படும் காட்சி

பிற செய்திகள்:

சமூகஊடகங்களில் பிபிசி தமிழ் :