போக்குவரத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர ஸ்டாலின் உதவவேண்டும்: முதல்வர்

  • 9 ஜனவரி 2018

தமிழ்நாட்டில் கடந்த ஆறு நாட்களாக நடந்துவரும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தின் காரணமாக, பொதுப் போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உதவவேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இதனிடையே, தொடர்ந்து தற்காலிக ஓட்டுனர்களை வைத்து குறைந்த அளவிலான பேருந்துகளை மாநில அரசு இயக்கிவருகிறது.

தமிழகத்தில் உள்ள பொதுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு நிர்ணயிக்கப்பட வேண்டுமென்றும், தற்போது 2.57 காரணி அடிப்படையில் ஊதிய உயர்வு நிர்ணயிக்க வேண்டுமென்றும், 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஓய்வூதியப் பலன்களை உடனடியாக அளிக்க வேண்டுமென்றும் கோரி 6வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

சென்னையில் பொதுப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டிருக்கும் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் மொத்தமுள்ள சுமார் 4,000 பேருந்துகளில் செவ்வாய்க்கிழமையன்று 1,757 பேருந்துகள் ஓடுவதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்திருக்கிறது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் 235 பேர் பணிக்குத் திரும்பியிருக்கும் நிலையில், 213 தற்காலிக ஓட்டுனர்களும் 103 தற்காலிக நடத்துனர்களும் நியமிக்கப்பட்டிருப்பதாக ஒரு போக்குவரத்துக் கழக அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.

இதேபோல, தமிழகத்தின் பிற போக்குவரத்துக் கழகங்களிலும் தற்காலிக ஓட்டுனர்கள், நடத்துனர்கள் நியமிக்கப்பட்டு, குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு கைதாகினர். பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் நிலையில், சென்னையிலிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஜனவரி 11, 12, 13 ஆகிய தேதிகளில் இந்த சிறப்புப் பேருந்துகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சிறப்புப் பேருந்துகளுக்கான முன் பதிவு இன்று துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

இதற்காக கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம், பூந்தமல்லி பேருந்து நிலையங்களிலும் சிறப்புக் கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், பெரும்பாலான சிறப்புக் கவுண்டர்களில் பணியாளர்கள் இல்லாததால், அவை வெறிச்சோடிக் கிடந்தன.

இதற்கிடையில் கும்பகோணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 2100 போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. போராட்டத்தைத் தூண்டியதாக குடந்தை போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாநிலத்தின் பல பகுதிகளில் 20-30 சதவீதப் பேருந்துகள் அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பணியாளர்களாலும் தற்காலிகப் பணியாளர்களாலும் இயக்கப்பட்டுவருகின்றன.

பேருந்துகள் மிக மிகக் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படுவதால், மின்சார ரயில்கள், ஷேர் ஆட்டோ போன்றவற்றில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆட்டோ, வாடகைக் கார் போன்றவற்றின் கட்டணம் உயர்ந்துள்ளதோடு, தட்டுப்பாடும் நிலவுகிறது.

இதற்கிடையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தங்களுடைய தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் பேசி வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர உதவ வேண்டுமெனக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்